பாதுகாப்பு படையினர் மீது கொடும் தாக்குதல் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்.

ஸ்ரீநகர் பகுதியைச் சார்ந்த புல்மாவா மாவட்டத்தில் ஜம்மு – காஷ்மீர் நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த சி.ஆர்.பி.எப் பாதுகாப்புப் படையினர் பேருந்தின் மீது பயங்கரவாதிகள் கண்மூடித்தனமான கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் பாதுகாப்பு படைவீரர்கள் 40 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், 50 க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த கொடும் தாக்குதலை யார் செய்திருந்தாலும் அவர்களை சட்டத்தின் படி தண்டிக்க வேண்டும். மனித உயிர்களின் மதிப்புத் தெரியாத மிருகங்களின் கொடூர செயலாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.

தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில் இதுபோன்ற தாக்குதல்களை தீவிரவாதிகள் நடத்துவார்கள் என்று உளவுத்துறை ஏற்கனவே எச்சரிக்கை செய்திருந்தும் அது குறித்து முன்னெரிச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் மெத்தனப் போக்குடன் நடந்து கொண்ட மத்திய அரசின் செயல் கண்டிக்கத்தக்கதாகும்.

தாக்குதல் குறித்து எச்சரிக்கை எழுப்பியும் அதை தடுக்க முயற்சிக்காத மத்திய அரசின் செயல் மக்கள் மத்தியில் சந்தேகத்தைக் கிளப்பும் வகையிலேயே உள்ளது.
நாட்டின் பாதுகாப்பிற்கே சவால் விடும் இதுபோன்ற செயல்கள் இனி நடவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இந்தத் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் தியாகம் மதிக்கத்தக்கது. அந்த வீரர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தாருக்கும், இந்தத் தாக்குதலில் காயமடைந்துள்ள வீரர்களுக்கும் உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றோம்.

மனிதாபிமானமற்ற இந்த மாபாதகச் செயலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கின்றது.

ஊடகத் தொடர்புக்கு:9789030302

இப்படிக்கு
இ.முஹம்மது
மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்