பாட்னா குண்டு வெடிப்பில் கைதாகியுள்ள மேலும் ஒரு இந்து இளைஞன்

தேசிய புலனாய்வு முகவம் அளித்த தகவலொன்றைக் கொண்டு, பாட்னா குண்டுவெடிப்பில் தொடர்புடைய மேலும் ஒரு இளைஞரை பாட்னா காவல்துறை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட இளைஞரின் பெயர் ராஜூ ஷா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்பாத்-திலுள்ள ஜாரியா பகுதியில், ஜிதேந்திர ஷா, பிட்டு ஷா, பப்பு ஷா ஆகிய மூன்று பேரைத் தேடிச் சென்ற காவல்துறை, இறுதியில் அவர்களின் சகோதரரான ராஜூஷாவை மட்டுமே கைது செய்துள்ளது. மற்ற மூவரும் அங்கு காணக் கிடைக்கவில்லை என்று தெரிகிறது.

மூன்று நாள்களுக்கு முன்பு, தேசிய புலனாய்வு முகவம் (NIA) ஆறு வாலிபர்களையும், அவர்களிடமிருந்த ஏராளமான வங்கிக் கணக்குப் புத்தகங்களையும், பண எடுப்பு அட்டைகளையும் கைப்பற்றியது. லக்கிஷராய் எனுமிடத்தில் பிடிபட்ட இந்த ஆறுவாலிபர்களுக்கும் அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெற்ற பாட்னா குண்டுவெடிப்புக்கும் தொடர்புண்டு என்று தெரியவந்துள்ளது.

இந்த ஆறுபேரில், கோபால்குமார் கோயல், விகாஷ்குமார், பவன்குமார், கணேஷ்குமார் ஆகிய நால்வரும் பாட்னா குண்டுவெடிப்புக்கு நிதியுதவி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர் என்று லக்கிஷராய் காவல் கண்காணிப்பாளர் ராஜீவ் மிஸ்ரா கூறியுள்ளார்.

இந்த நால்வருடன் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ தொடர்பு கொண்டுள்ளதா என்று ஆராயப்படுவதாகக் கூறிய காவல் கண்காணிப்பாளர் ராஜீவ்மிஸ்ரா, இந்தியன் முஜாஹிதீன் அமைப்புடன் அவர்களுக்குத் தொடர்பிருக்கலாம் என்பதை மறுத்தார்.

கோபால்குமார் கோயலிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், லக்கிஷராய், முன்கெர் பகுதி காவல்துறை அணியாக தன்பாத் சென்று புலனாய்வு செய்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று நாள்களாக, தேசிய புலனாய்வு முகவம் பீகாரின் பல்வேறு இடங்களில் சோதனைகளை மேற்கொண்டுள்ளது என்பதும், கடந்த வாரம் தான் பாட்னா குண்டு வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகவம் ஏற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.