பரப்பான சூழலில் கூடிய டிஎன்டிஜே மாநில செயற்குழு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் இந்த பரபரப்பான சூழ்நிலையில் முஸ்லிம்களின் ஓட்டு யாருக்கு என்பதை முடிவு செய்யும் டிஎன்டிஜே யின் மாநில செயற்குழுக் கூட்டம் சென்னை டி நகரில் உள்ள வெங்கடேஷ்வரா திருமண மண்டபத்தில் 06..3.11 ஞாயிறன்று காலை 10.30மணிக்கு கூடியது.

மாநிலத் தலைவர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தலைமையேற்க, பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் அழைப்புப் பணியின் அவசியத்தை விளக்கியும், இந்த அழைப்புப் பணியை அனைத்து தரப்பு மக்களிடத்திலும் எப்படி செவ்வனே எடுத்துச் செல்ல வேண்டும் என்பதையும் மாவட்ட கிளை நிர்வாகிகளிடம் விளக்கி சிற்றுரை நிகழ்த்தினார்.

அதைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகிகளுக்கான இரண்டு நாள் நல்லொழுக்கப் பயிற்சி முகாமை மாநிலத் தலைமையகம் வரக்கூடிய மே மாதம் 28, 29 ஆகிய தேதிகளில் ஊட்டியில் நடத்த இருப்பதை அறிவிப்புச் செய்தார்.

அதைத் தொடர்ந்து, புதிய நிர்வாகம் பொறுப்பேற்ற பிறகு அதிக தாவா பணிகளைச் செய்து தாவா பணிகளுக்கான முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாவட்டம் மற்றும் கிளைகளுடைய விபரங்கள் செயற்குழுவில் அறிவிப்பு செய்யப்பட்டது.

பிப்ரவரி மாத செயல்பாடுகளை மாநிலத் தலைமையகத்திற்கு ஆதாரத்துடன் அனுப்பி முதல் மூன்று இடங்களை பிடித்த மாவட்டங்கள் விபரம்:

முதலிடம் :

இராமநாதபுரம் மாவட்டம் – 536 புள்ளிகள்

இரண்டாம் இடம் :

தூத்துக்குடி மாவட்டம் – 404 புள்ளிகள்

மூன்றாம் இடம் :
கன்னியாகுமரி மாவட்டம் – 387 புள்ளிகள்

தாவா பணிகள் அதிகமாக செய்து முதல் மூன்று இடங்களைப் பிடித்த கிளைகள் :

இராமநாதபுரம் மாவட்டம் – கீழக்கரை தெற்கு கிளை : 185
புள்ளிகள்
நெல்லை மாவட்டம் – மேலப்பாளையம் கிளை : 160 புள்ளிகள்

இராமநாதபுரம் மாவட்டம் – தொண்டி கிளை – 125 புள்ளிகள்

இது போன்று அதிக அளவில் தாவா பணிகளைப் போட்டி போட்டுக் கொண்டு செய்து ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும், கிளை நிர்வாகமும் தாங்கள் தான் இந்த மாதம் முதலிடத்தை பிடிப்போம் என்று போட்டிபோட்டு செயல்பட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகிகளுக்கு புத்துணர்வு அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ஒரு மாத பிரச்சாரகர் பயிற்சிக்கு 105 பேர் பயின்று வருவதையும் அதற்கு ஒரு மாணவருக்கு 7500 வரை செலவாவதையும், மொத்தம் கிட்டத்தட்ட 8லட்சம் வரை செலவாகும் நிலையில் மாவட்டங்கள் தங்களது பங்களிப்பை கட்டாயம் செய்து கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருக்கும் மாநிலத் தலைமையகத்திற்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க 66 மாணவர்களுக்கு உண்டான செலவை ஏற்றுக் கொள்வதற்கு மாவட்ட நிர்வாகிகள் வாக்குறுதியளித்தனர்.

அதைத் தொடர்ந்து மாநிலத் தலைவர் பீஜே அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலைபாடு குறித்து செயற்குழு மக்கள் மத்தியில் விளக்கமளித்தார்கள்.

முஸ்லிம் சமுதாயத்திற்கு நன்மை பயக்கக்கூடிய வகையில் இந்தத் தேர்தலில் எத்தகைய முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதற்கான சாதக பாதகங்கள் அலசப்பட்டு, எந்த எந்த முடிவுகளை எடுத்தால் முஸ்லிம் சமுதாயம் முழு நன்மை பெறும் என்ற விஷயங்கள் பேசப்பட்டு, அதற்கு தகுந்தாற்போல முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்த முடிவுகளைத் தக்க தருணத்தில் மாநில நிர்வாகம் கூடி அறிவிக்கும் எனவும், செயற்குழுவில் எடுத்த முடிவை அறிவிக்கும் அதிகாரத்தை மாநில நிர்வாகக் குழுவுக்கு அளிப்பது எனவும் செயற்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக முடிவெடுத்தனர். செயற்குழு இனிதே நிறைவுற்றது