தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலச் செயற்குழு கூட்டம் நேற்று (19-6-2012) திருச்சி எல்கேஎஸ் மஹாலில் சரியாக காலை 10.30 மணிக்கு துவங்கி சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
முதலாவதாக மாநிலத் துனைத் தலைவர் எம்.ஐ சுலைமான் அவர்கள் நிர்வாகிகளிடம் இருக்க வேண்டிய பண்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பின்னர் மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் மாநில நிர்வாகத்தில் செய்யப்பட்டுள்ள சில மாற்றங்களை குறிப்பிட்டு செயற்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெற்றார்கள்.
பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளான செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இச்செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
அரசியல் தீர்மானம்
1. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் முஸ்லிம்களும் பிறமதத்தைச் சார்ந்தவர்களும் மதநல்லிணக்கத்தோடு வாழ்கின்றனர். இதற்கு உலைவைத்து வகுப்புக் கலவரத்தைத் தூண்டுகின்ற வகையில் இந்துக்களே முஸ்லிம்களுக்கு எதிராக கொதித்து எழுங்கள் என்று தினத்தந்தி நாளிதழ் விஷமத்தனமான தலையங்கம் தீட்டியிருந்தது. அதைத் தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக தினத்தந்தி நாளேடு முஸ்லிம்களுக்கு எதிராக விஷக் கருத்தைப் பரப்பி வருகின்றது. சங்பரிவாரத்தில் சேர்ந்து விட்ட தினத்தந்தியை முஸ்லிம் சமுதாயம் அடியோடு புறக்கணிக்க வேண்டும் என்று இச்செயற்குழு வற்புறுத்துகிறது. ஒவ்வொரு உறுப்பினரும் வீடு வீடாக சென்று தினத்தந்தியின் தலையங்கத்தையும் விஷமக் கருத்தையும் எடுத்துச் சென்று விளக்கி தினத்தந்தி வாங்குவதையும் அதற்கு விளம்பரம் தருவதையும் நிறுத்த தீவிரமான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு அனைத்து உறுப்பினர்களையும் இந்த செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
2. இலங்கையில் சிங்கள மக்களுடன் முஸ்லிம்கள் நல்லிணக்கமாக வாழ்ந்து வருகின்றனர். இலங்கையின் சட்டதிட்டங்களை மதித்து நடக்கும் முஸ்லிம்களுக்கு எதிராக புத்த பிக்குகள் பள்ளிவாசல்களை இடித்தும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையிலும் இறங்கி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இலங்கையின் இந்த அராஜகத்தை உடனே தடுத்து நிறுத்த இந்திய அரசாங்கம் தனது செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் எனவும், முஸ்லிம் நாடுகளில் வாழும் தமிழ் கூறும் மக்கள் அந்த அரசுகளின் கவனத்துக்குக் கொண்டு சென்று இலங்கை அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்துமாறு இச்செயற்குழு கடல் கடந்து வாழும் முஸ்லிம்களைக் கேட்டுக் கொள்கிறது.
3. அதுபோல் மியான்மர் எனப்படும் பர்மாவில், வங்கதேசத்தில் இருந்து குடியேறியதாக கூறி முஸ்லிம்களை விரட்டியடிக்கும் புத்தமத வெறியர்களை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. உலகமெங்கும் வாழும் புத்த துறவிகள் மீது எதிர்வினை உலகமெங்கும் நடந்தால் அதற்கு மியான்மர் அரசும் இலங்கை அரசும் தான் பொறுப்பாவார்கள் என்று இச்செயற்குழு சுட்டிக்காட்டுகிறது. இது போன்ற செயல்கள் உடனடியாக நிறுத்தப்படாவிட்டால் இந்தியாவில் அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ள தலாய்லாமா உள்ளிட்ட புத்த பிக்குகளை நாட்டை விட்டு வெளியேற்றுமாறு முஸ்லிம்கள் போராட்டம் நடத்தும் நிலை ஏற்படும் என்று இச்செயற்குழு எச்சரிக்கிறது.
4. கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 3.5 சதவீத தனி இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தருவேன் என்று ஜெயலலிதா வாக்களித்தார். ஆண்டு ஒன்று முழுமையடைந்த பின்னரும் இது குறித்து அவர் அசாத்திய மவுனம் சாதித்து வருகிறார். கொடுத்த வாக்கை நிறைவேற்றும் வகையில் முஸ்லிம்களுக்கு 7 சதவிகித இட ஒதுக்கீட்டை அளிக்க வேண்டும் என்று இச்செயற்குழு வற்புறுத்துகிறது. அவ்வாறு அதிகப்படுத்தித் தந்தால் அடுத்து வரும்நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் அதிமுகவுக்கு பெற்றுத் தர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தீவிரமாக உழைக்கும் என்று இச்செயற்குழு வாயிலாக தெரிவித்துக் கொள்கிறது.
5. நீதபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் முஸ்லிம்களுக்கு பத்து சதவிகிதம் தனியாக இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று காரண காரியங்களுடன் பரிந்துரை செய்திருந்தது. மேலும் சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசும் தனி இட ஒதுக்கீடு தருவதாக வாக்களித்தது. ஆனால் வாக்குறுதியை நிறைவேற்றாமல் முஸ்லிம்களின் கோரிக்கையை அலட்சியம் செய்யும் மத்திய அரசை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்காமல் கிறித்தவர்கள், சீக்கியர்கள் பார்சிகள் , முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு 4.5 சத இட ஒதுக்கீடு என்று கூறி வஞ்சகமாக ஏமாற்றும் மத்திய அரசின் துரோகத்தையும் இச்செயற்குழு கண்டிக்கிறது. இந்த இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதால் முன்னேறிய சமுதாயங்களான பார்சிகள் சீக்கியர்கள் கிறித்தவர்கள் தான் பயனடைவார்கள். முஸ்லிம்கள் இதனால் பயனடைய மட்டார்கள் .மத்திய அரசின் இந்த துரோகத்தை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
6. இந்திய தேர்தல் முறையை விகிதாச்சார பிரதிநிதித்துவ அடிப்படையில் மாற்ற அரசியல் சாசன திருத்தம் செய்ய வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளையும் இந்திய மக்களையும் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
7. கிறித்தவ சமுதாயத்தின் சொத்துகளை அரசு தலையீடு இல்லாமல் கிறித்தவ சமுதாயமே நிர்வகித்து வருகிறது. அதனால் அவர்களின் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்படாமல் பாதுகாப்பாக இருந்து வருகிறது. ஆனால் முஸ்லிம் சமுதாய சொத்துகளை அரசின் வக்ஃபு வாரியம் நிர்வகிக்கிறது. இது அரசியல்வாதிகளுக்கும் சுரண்டல் பேர்வழிகளுக்கும் கொள்ளை அடிக்க வாய்ப்பாக இருந்து வருகிறது. எனவே முஸ்லிம் சமுதாய சொத்துகளை அரசு தலையீடு இல்லாமல் முஸ்லிம் சமுதாயமே நிர்வகிக்கும் வகையில் வக்ஃபு வாரியத்தை முற்றாகக் கலைத்து விட வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. உள்ளூர் ஜமாஅத்துகள் வக்ஃபு சொத்துக்களை நிர்வாகம் செய்தால் மட்டுமே வக்ஃபு சொத்துக்களைப் பாதுகாக்க முடியும் என்று இச்செயற்கு வலியுறுத்துகிறது.
8. திமுக ஆட்சியில் ரமலான் மாதத்தில் நோன்புக் கஞ்சிக்காக ஒரு ரூபாய்க்கு அரிசி வழங்கப்பட்டது. பள்ளிவாசல் லட்டர்பேடில் எழுதிக் கொடுப்பதை ஏற்று அரிசி வழங்கப்பட்டு முஸ்லிம்கள் பயன்பெற்றனர். ஆனால் அதிமுக ஆட்சி அமைந்த பின் விலையில்லா அரிசி நோன்புக் கஞ்சிக்காக வழங்கப்படும் என்று அறிவித்தது. ஆனால் அதிகாரிகள் வக்ஃபு போர்டில் கடிதம் வாங்கி வருமாறு சாத்தியமற்ற நிபந்தனை விதிப்பதால் 95 சதவிகித பள்ளிவாசல்கள் இந்த அரிசியை சென்ற ஆண்டு பெற முடியவில்லை. எல்லா ஊரிலும் வக்ஃபு அலுவலகம் இல்லை. வக்ஃபு அதிகாரிகள் கோடி கோடியாக சொத்து உள்ள பள்ளிவாசல் நிர்வாகிகளைத் தான் மதிப்பார்கள். ஏழை பள்ளிவாசல் நிர்வாகிகளைப் புளு பூச்சியைப் போல் தான் நடத்துவார்கள். அவர்களிடம் கடிதம் வாங்கி வருவது சாத்தியமில்லாதது என்பதால் இதன் பயன் முஸ்லிம்களுக்கு அறவே கிடைக்கவில்லை எனலாம். எனவே இது போன்ற கெடுபிடிகளைத் தளர்த்தி முந்தைய ஆட்சியில் கடைப்பிடித்த முறையில் அரிசி வழங்குமாறு இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
9. இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு சில ஊர் பள்ளிவாசல் நிர்வாகிகள் மறுக்கிறார்கள். மனிதாபிமானமற்ற இச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கின்றது.
10. 1349 பயிற்சி மருத்துவர்களை நியமித்ததில் ஒரு முஸ்லிம் கூட இல்லாமல் வேண்டுமென்றே முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். 3.5 சதம் இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு இருந்தும் இது அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. இதில் விடுபட்ட 50 முஸ்லிம்களை உடனே பணியில் அமர்த்த வேண்டும் எனவும் இதற்கு காரணமான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. ஒரு மாத காலத்தில் இது சரி செய்யப்படாவிட்டால் அனைத்து மாவட்டங்களிலும் இந்த அக்கிரமத்தை போராட்டத்தின் மூலம் முஸ்லிம் சமுதாயத்துக்கு கொண்டு செல்வது எனவும், அதன் பின்னரும் தீர்வு காணப்படாவிட்டால் மாநில அளவிலான போராட்டத்தில் இறங்குவது என இச்செயற்குழு தீர்மானிக்கிறது.
11. ஹஜ் பயணிகளிடம் ஒரு லட்சத்தி முப்பதாயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு அதில் 20 ஆயிரத்தை முஸ்லிம்களுக்கு கொடுத்து அதை மானியம் எனக் கூறி முஸ்லிம்களையும் நாட்டு மக்களையும் ஏமாற்றும் மத்திய அரசின் இந்த வஞ்சகத்தை இச்செயற்குழு கண்டிக்கிறது. விமானக் கட்டணம், உணவு ,தங்கும் வசதி அனைத்தும் 70 ஆயிரத்துக்குள் அடங்கும் போது முஸ்லிம்களிடம் மேலும் 60 ஆயிரம் அதிகமாக ஒவ்வொரு ஹஜ் பயணியிடமும் கொள்ளை அடிப்பதை உடனே நிறுத்த வேண்டும் என மத்திய அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. முஸ்லிம்களிடம் காசு பறித்து அதில் சிறிதளவை அவர்களுக்குக் கொடுத்து அதை மானியம் என்று சொல்வதை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என்று இச்செயற்குழு வற்புறுத்துகிறது
12. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட மக்களுக்காக இரத்த தானம் நடத்த தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியை அதிமுக பிரமுகர் A.M.S.ஷேக் தாவூத் தூண்டுதலால் தடுத்து நிறுத்திய காவல் துறையை இச்செயற்குழு கண்டிக்கிறது.எனவே அவர் மீது அதிமுக தலைமை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
கலாச்சாரத் தீர்மானங்கள்
13. மதுபானங்களும் இதர போதைப் பொருட்களும் மனிதனின் அறிவை மழுங்கச் செய்கிறது என்பதும், குடும்பத்தில் பிளவை ஏற்படுத்துகிறது என்பதும், கஷ்டப்பட்டு உழைத்த பொருளாதாரத்தைப் பாழாக்கி வறுமையை அதிகரிக்கிறது என்பதும் கொலை அடிதடி போன்ற சட்ட ஒழுங்குப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்பதும், இல்லற வாழ்வில் ஈடுபாட்டை குறைப்பதால் கள்ள உறவுகள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது என்பதும் அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும். மானம் மரியாதையை ஒருவன் இழப்பதற்கும் போதைப் பழக்கமே முக்கிய காரணமாகவும் அமைந்துள்ளது. இளம் வயதினர் போதைப் பொருளுக்கு அடிமையாவதால் கல்வி கற்பதில் அவர்களின் ஆர்வமும் ஈடுபாடும் குறைந்து எதிர்காலம் நாசமாகி வருகிறது. இன்னும் சொல்லி முடியாத கேடுகள் மதுப்பழக்கத்தால் ஏற்படுவது தெரிந்திருந்தும் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது என்பதற்காக தமிழக அரசாங்கமே மதுக்கடைகளைத் திறந்து குடிப்பழக்கம் இல்லாத மக்களையும் குடிப்பழக்கத்துக்கு அடிமையாக்குவதை இந்த செயற்குழு கண்டிக்கிறது. வருவாயை விட நாட்டு மக்களின் நலனும் நிம்மதியும் ஒழுக்கமும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை உணர்ந்து உடனடியாக தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக அக்கறையுடன் தமிழக அரசை இந்த செயற்குழு வற்புறுத்துகிறது.
14. மது, பீடி சிகரெட், பான்பராக், புகையிலைப் பொருட்கள் ஆகியவற்றின் தீமைகளை மக்களுக்கு விளக்கி இப்பழக்கத்தில் இருந்து விடுபடத்தக்க வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட நிர்வாகங்களும் கிளைகளும் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொள்ளுமாறு இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
15. சமீபகாலமாக கல்வி கற்கச் செல்லும் அதிகமான மாணவ மாணவிகளும் அவர்களுக்கு கல்வி கற்பிக்கும் சில ஆசிரியர்களும் காம போதையில் தட்டழிந்து திரிகின்றனர். 15 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் கூட ஆண்களுடன் ஓட்டம் பிடிக்கும் நிகழ்ச்சிகளும் ஆசிரியரே மாணவிகளைச் சீரழிக்கும் நிகழ்ச்சிகளும் கட்டுகடங்காமல் அதிகரித்து வருகின்றன. ஆண்களும் பெண்களும் கலந்து படிக்கும் கல்வி முறையும், கட்டுப்பாடற்ற சுதந்திரமும் முக்கியமான காரணங்களாக உள்ளன. ஆண்களும் பெண்களும் தனித்தனியாகப் படித்தால் ஆண்கள் அதிக மதிப்பெண்கள் எடுப்பார்கள். அவர்கள் படிக்காமல் பெண்களை ரசிப்பதில் கவனத்தை சிதற விடுவதால் ஆண்களின் தேர்ச்சி விகிதம் படிப்படியாக குறைந்து வருகிறது. கோ எஜுகேஷன் என்ற முறை ஒழிக்கப்பட்டு ஆண்களும் பெண்களும் தனித்தனியாக படிக்கும் கல்வி முறையை அரசு நடைமுறைக்கு கொண்டு வராமல் வெறும் அறிவிப்புகளால் இதை ஒழிக்க இயலாது என்பதை தமிழக அரசு உணர்ந்து மாணவ மாணவிகளைப் பாதுகாக்க வேண்டும் என்று இந்த செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
16. சிறுபான்மை மக்கள் தனியாக கல்விக்கூடம் நடத்த அரசியல் சாசனம் உரிமை அளித்துள்ளது. இந்த உரிமையை அதிகமான கிறித்தவ பள்ளிக்கூடங்கள் தவறாகப் பயன்படுத்துகின்றன, கிறித்தவ மத வழிபாட்டை முஸ்லிம்களும் இந்துக்களும் கட்டாயம் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகின்றனர். தங்கள் சமுதாய மக்களை கல்வியில் உயர்த்திடவே இந்த உரிமை வழங்கப்பட்டுள்ளது. மதமாற்றம் செய்வதற்கு அல்ல. இப்படி சட்டத்துக்கு எதிராக நடக்கும் கல்விக் கூடங்களுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. இதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு கடுமையான எச்சரிக்கை விடுப்பதுடன் இதுபோன்ற கல்விக்கூடங்களின் அனுமதியை ரத்துச் செய்யுமாறு இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.சட்டம் ஒழுங்குப்பிரச்சனை ஏற்படக் காரணமாக உள்ள இது போன்ற பள்ளிக்கூடங்களை அனைத்து சமுதாய மக்களும் புறக்கணிக்க வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
புகைப்படங்கள்..