தூக்கிலேற்றப்படும் நீதி: – உச்சநீதிமன்ற நீதிபதிகளே சாட்சி: -தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்

தூக்கிலேற்றப்படும் நீதி:
– உச்சநீதிமன்ற நீதிபதிகளே சாட்சி:
-தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்

நேற்றைய தினம் (12.01.18) உச்ச நீதிமன்ற நீதிபதிகளான செல்லமேஸ்வர்,ரஞ்சன் கோகாய்,மதன் லோகூர் மற்றும் குரியன் ஜோசஃப் ஆகியோர் பத்திரிக்கையாளர் சந்திப்புயொன்றை நடத்தியுள்ளனர்.

இந்திய வரலாற்றில் முதன்முறையாக பதவியில் உள்ள நான்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் செய்தியாளர்களை சந்தித்திருப்பது இதுவே முதல்முறையாகும்

இப்பத்திரிக்கையாளர் சந்திப்பில் அந்நால்வரும் தெரிவித்த கருத்துக்கள் நீதித்துறையின் மீதும் நாட்டின் ஜனநாயகத்தின் மீதும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட சிறிதளவு மக்களையும் திகைப்படையச் செய்துள்ளது.

அவர்கள் தெரிவித்த குற்றச்சாட்டின் சாராம்சம்:

உச்சநீதிமன்ற நிர்வாகம் நீதமாக செயல்படவில்லை.

நீதித்துறையில் நீதிமன்ற விதிகள் சரியாக பின்பற்றப்படவில்லை.

முக்கிய வழக்குகளை மூத்த நீதிபதிகளின் அமர்வுக்கு ஒதுக்காமல், தனக்கு வேண்டிய சில நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஒதுக்கீடு செய்து விடுகிறார்.

நீதித்துறையில் ஜனநாயகம் இல்லை

இது தான் அவர்கள் தெரிவித்த பிரதான குற்றச்சாட்டுக்களாகும்.

தலைமை நீதிபதியின் கவனத்துக்கு இது தொடர்பான சர்ச்சைகளை கொண்டு சென்றும் உரிய பலன் கிடைக்கவில்லை என்றும்,
மொத்த நாட்டையும் பாதிக்கும் வகையில் நீதித்துறையின் செயல்பாடு இருப்பதாலேயே,
நாட்டு மக்களை நேரடியாக சந்தித்து அவர்களிடமே பிரச்சனையை தெரிவிப்பது என்று முடிவெடுத்து இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம் என்றும் நீதிபதிகள் நால்வரும் மனம் வெதும்பி கூறியுள்ளனர்.

நீதியை நிலைநாட்ட கடைமைப்பட்ட நீதித்துறையிலேயே நீதிமன்ற விதிகள் சரியாக பின்பற்றப்படவில்லை என்றால் இப்பெருங்கொடுமையை எங்கு போய் சொல்வது?

நீதிமன்ற விதிகள் சரியாக கடைபிடிக்கப்படவில்லை என்பது ஒரு சொல் தான். அதற்குள் பல சம்பவங்கள் ஒளிந்திருக்கும், பல அதிகார வர்க்கத்தின் கைகள் அமிழ்ந்திருக்கும், மோடி, அமித்ஷா போன்றோரின் அதிகார திணிப்பு அரங்கேறியிருக்கும் என்பதை சிந்தனையுள்ள யாரும் புரிந்து கொள்ள முடியும்.

தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய பல வழக்குகளை எவ்வித ஆலோசனையுமின்றி தான் விரும்பிய அமர்வுகளுக்கு தலைமை நீதிபதி வழங்கினார் என்று அந் நீதிபதிகள் தெரிவித்த கருத்து ஒன்றே இதை புரிந்து கொள்ள போதுமான ஒன்றாகும்.

நீதிமன்றத்தின் செயல்பாட்டைப் பற்றி இவ்வளவு நாள் சாமானிய மக்கள் பேசிக் கொண்டிருந்த விவகாரம், இப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் அவர்களின் நேரடி வாக்குமூலத்தின் வாயிலாகவே வெளி உலகுக்கு வந்துள்ளது என்பதையும் இவர்களின் குற்றச்சாட்டு வெட்ட வெளிச்ச்ம் போட்டுக் காட்டியுள்ளது.

இந்திய நீதித்துறை சட்டப்படி தீர்ப்பளிப்பதில்லை, தம் இஷ்டப்படி தீர்ப்பளித்துக் கொண்டிருக்கிறது என்பதைத் தான் தவ்ஹீத் ஜமாஅத்தும் பல வருடங்களாக மக்கள் மன்றத்தில் சொல்லிக் கொண்டிருக்கிறது.

அதை உறுதிப்படுத்தும் வகையிலேயே இவர்களின் வாக்குமூலம் அமைந்துள்ளது.

பாபர் மசூதி விவகாரத்தில் கட்டப்பஞ்சயாத்து தீர்ப்பை அளித்தார்கள் என்று நாடே நீதிமன்ற தீர்ப்பை காறி உமிழ்ந்தது. அத்தீர்ப்பின் மூலம் உலக அரங்கிலும் பெருத்த அவமானத்தை நீதிமன்றம் சம்பாதித்து கொண்டது

இந்திய பாராளுமன்ற தாக்குதல் வழக்கில்
அப்சல் குருவிற்கு தொடர்பிருந்ததற்கு எவ்வித ஆதாரங்களுமோ சாட்சியங்களுமோ இல்லாத நிலையில் இந்தியாவின் கூட்டு மனசாட்சி என்று கதைகட்டி அவரை தூக்கில் போட்டு இந்தியாவின் நீதியையும் தூக்கில் போட்டது உச்சநீதிமன்ற நீதிபதிகள் தான்.

இப்படி தொடர்ச்சியாக நீதித்துறைக்கே இழுக்கு ஏற்படுத்தும் செயலிலும் ஜனநாயக மாண்பை குழி தோண்டி புதைக்கும் வகையிலுமே நீதிமன்றங்கள் செயல்பட்டுவருகின்றன.

அதையே உச்சநீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகள் பத்திரிக்கையாளர் சந்திப்பின் மூலம் அளித்த வாக்குமூலம் உறுதிப்படுத்தியுள்ளது.

நவீன ஹிட்லராக உருவெடுக்கும் மோடியையும் அவரது ஆட்சியின் அவலத்தையும் நான்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பத்திரிக்கையாளர் சந்திப்பு தோலுரித்துக் காட்டியுள்ளது.

மொத்தத்தில் நீதித்துறை, இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக ஜனநாயகப் படுகொலையில் ஈடுபட்டுள்ளது

நாட்டை நாசப்படுத்தும் வகையில் நடந்து கொள்ளும் நீதித்துறையின் செயல்பாட்டையும் அதற்கு அச்சாரமாக திகழும் பிரதமர் மோடியையும் தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கின்றது.

இந்நிலை நீடித்தால் பாசிச பயங்கரவாதிகளிடமிருந்து இந்திய நாட்டை காக்க மற்றுமொரு சுதந்திரப்போரை இந்திய நாட்டு மக்கள் எதிர்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்பதை எச்சரிக்கையாக சொல்லிக் கொள்கிறோம்.

இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்காக,
பொதுச்செயலாளர்
எம்.எஸ்.சையது இப்ராஹீம்