தாமதமாக கிடைத்த தீர்ப்பால் உறவுகளை இழந்து தவிக்கும் காஷ்மீர் வாலிபர்

டெல்லி குண்டு வெடிப்பு வழக்கில் கடந்த 14 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த காஷ்மீர் வாலிபரை நிரபராதி என்று கூறி நீதிமன்றம் விடுதலை செய்தது. இவர் சிறையில் அடைக்கப்பட்ட அதிர்ச்சியில் தந்தையும், அக்காளும் இறந்ததால் குடும்பமே சீரழிந்துள்ளது.

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரைச் சேர்ந்தவர் முகமது மக்பூல் ஷா. கடந்த 1996ம் ஆண்டு 10ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய அவர், பள்ளி விடுமுறை என்பதால் டெல்லியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

அப்போது, டெல்லி லஜ்பத் நகரில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக மக்பூல் ஷாவை போலீசார் கைது செய்தனர். அப்போது அவருக்கு 15 வயது என்பதால் முதலில் திகார் சிறை வளாகத்தில் உள்ள சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார். 18 வயது ஆனதும் திகார் சிறைக்கு மக்பூல் ஷா மாற்றப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 14 ஆண்டுகளாக நடந்தது. குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கு என்பதால் மக்பூல் ஷாவுக்கு ஜாமீனும் கிடைக்கவில்லை.

இந்த வழக்கில், 14 ஆண்டுக்கு பின் கடந்த வாரம் தீர்ப்பளிக்கப்பட்டது. மக்பூல் ஷா நிரபராதி என்று நீதிபதி கூறினார். திகார் சிறையில் இருந்து மக்பூல் ஷா விடுவிக்கப்பட்டார். 15 வயதில் கைதான அவருக்கு இப்போது 29 வயது ஆகிறது.

இந்த இடைப்பட்ட காலத்தில், தந்தை, அக்காளை மக்பூல் ஷா பறிகொடுத்துள்ளார். மக்பூல் ஷா கைதான அதிர்ச்சியில் அவர்கள் இருவரும் இறந்துவிட்டனர்.

இது பற்றி மக்பூல் ஷா கூறுகையில், ‘‘15 ஆண்டுக்குமுன் பள்ளிக்கு புறப்பட்ட என்னை என் தந்தையும், அக்காளும் வழிஅனுப்பியது இன்னமும் நினைவில் இருக்கிறது. அதன்பின் அவர்களை நான் பார்க்கவே இல்லை. இப்போது, அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தைதான் பார்க்க முடிந்துள்ளது. நிரபராதி என்று என்னை விடுதலை செய்துள்ளார்கள். சரியான நேரத்தில் நீதி கிடைத்திருந்தால், நான் நன்றாக படித்து இன்றைக்கு பெரிய ஆளாக இருந்திருப்பேன். என் தந்தை, அக்காள் இறந்திருக்க மாட்டார்கள். என் குடும்பம் சீரழிந்திருக்காது. இப்போது, என்ன செய்வது என்று எனக்கே தெரியவில்லை’’ என்றார்.

– தினகரன் 14-4-2010

தேதந்தவர்- பாதுஷா