தாஜ்மஹால் சுற்றுலா அட்டவணையிலிருந்து நீக்கம்: – உபி முதல்வரின் மத துவேஷ நடவடிக்கைக்கு டிஎன்டிஜே கண்டனம்!

தெற்காசியாவின் பெரும்பகுதியை தனது ஆளுமையின் கீழ் கொண்டுவந்து, அதை ஒரு நீண்ட பெரிய சாம்ராஜ்யமாக்கி ‘தேசம்’ என்ற வரையறைக்குள் கொண்டு வந்தவர்கள் மொகலாயர்கள். அற்கு முன் இந்தியா என்ற நாடே கிடையாது என்று சொன்னால் அது மிகையல்ல.

இப்போது சில வரலாற்றுப் புரட்டர்களால் தேசமானது ‘சேதம்’ என்ற மோசமான நிலையை நோக்கி நாடு போய்க் கெண்டிருக்கிறது.

நம்மை ஆண்ட மொகலாயார்களின் கட்டிடக்கலைக்கு சான்றாகவும், இந்தியா என்றதும் உலக நாடுகளின் எண்ணத்தில் தோன்றும் அடையாளச் சின்னமாகவும் அன்று தொடங்கி இன்றுவரை இருந்து வருவது தாஜ்மஹாலாகும்.

மொகாலாய மன்னன் ஷாஜஹான் தனது காதல் மனைவி மும்தாஜ் என்பருக்காக முழுவதும் பளிங்குக் கற்களால் யமுனை நதிக்கரை ஓரத்தில் கட்டிய அந்தக் கட்டிடம் ஒரு கல்லறை என்பதிலோ, அது சமாதிதான் என்பதிலோ தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

இறந்தவருக்கு சமாதி கட்டுவதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் அது முஸ்லிம்களால் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக, அதை சுற்றுலா தலங்களின் பட்டியலிலிருந்து தூக்கி இருக்கிறது என்று உபி முதல்வர் ஆதித்யநாத் தலைமையில் உள்ள பிஜேபி அரசு அறிவித்துள்ளது.

இதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது.

சுற்றுலாப் பயணிகள் வருதைத் தடுத்து, அதை பாழடைந்த கட்டிடமாகக் காட்டி, நாளை யமுனை ஆற்றை விரிவுபடுத்த அதை இடிக்கப்போகிறோம் என்ற நிலைக்குக்கூட இவர்கள் செல்வார்கள் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

செங்கோட்டை தொடங்கி குதுப்மினார் வரை டெல்லியின் பாரம்பரியத்திற்கும், பண்பாட்டிற்கும் சான்றாக இருப்பவைகைள் முஸ்லிம்கள் நாட்டுக்கு ஈந்த சிறப்பு வாய்ந்த கட்டிடக்கலைகளே என்பதை உலகமே அறியும்.

உலகம் அறிந்த ஒன்றை பொருந்தாக் காரணங்களைக் கூறி அப்புறப்படுத்தும் முயற்சியில் சங்பரிவாரங்கள் ஈடுபட நினைத்தால், முஸ்லிம்கள் மட்டுமல்ல நடுநிலை இந்தியர்களும் கூட்டாக இறங்கி இந்தக்கூட்டத்தை விரட்டியடிப்பார்கள் என்பதை குறிப்பாகக் கூறிக் கொள்கிறோம்.

உபி அரசு தாஜ்மஹாலை நீக்கி, புதிதாக வெளியிட்ட சுற்றுலாத் துறையின் கையேட்டில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமைப் பூசாரியாக இருக்கும் கோரக்பீத் கோவில் உட்பட எண்ணற்ற கிராமக்கோவில்கள் கூட சுற்றுலா தலங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது பைத்தியக்காரத்தனமாதாகும்.

தாஜ்மஹாலை மேம்படுத்த பல கோடிகள் ஒதுக்கவுள்ளோம் என்று ஒருபக்கம் கூறிக்கொண்டே, மறுபக்கம் அந்த உலக அதிசயத்தையே ஒதுக்கியதும் ஓரங்கட்டியதும் எத்தகைய முரண்பாடு? என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

முஸ்லிம் ஒருவர் கட்டினார் என்பதற்காகவே அதை அழிக்கத்துடிக்கும் பாசிச பாஜக அரசின் கீழ்த்தரமான இழிசெயலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கின்றது.

இப்படிக்கு,
எம்.எஸ்.சையது இப்ராஹீம்
பொதுச் செயலாளர்