தவ்ஹீத் துளிர்விட்ட வரலாறு! – ஆவணங்களின் தொகுப்பு குறித்த முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் தவ்ஹீத் கொள்கை துளிர்விட ஆரம்பித்து 50 ஆண்டுகள் ஆகப்போகிறது என்றால் நீங்கள் நம்புவீர்களா?

ஆனால் அது தான் உண்மை. இன்று தவ்ஹீத் எனும் வார்த்தை சாதராரணமாகி விட்டாலும் ஒரு காலத்தில் இந்த வார்த்தை முஸ்லிம் சமுதாயத்தால் நஞ்சென பார்க்கப்பட்டது.
தவ்ஹீத்வாதி ஏதோ தீவிரவாதியைப் போன்று முஸ்லிம் சமுதாயத்தால் நடத்தப்பட்டான்.

நன்கு வளர்ந்த ஆலமரத்தைப் போன்று இன்று தவ்ஹீத் காட்சியளித்தாலும் அதன் அடிவேரில் பல எதிர்ப்பலைகள், எதிர்ப்புகள், ஊர் நீக்கங்கள், ஏன் உயிருக்கு உலை வைக்கும் அச்சுறுத்தல்கள் கூட அமிழ்ந்து கிடக்கின்றன.

ஆனால் அதன் உயிரோட்டமான வரலாற்றை வளரும் தலைமுறையினர் அறியாதது தான் பெரும் சோகம்.

மூத்த தவ்ஹீத்வாதிகள் கூட வளரிளம் பருவத்தினருக்கு தவ்ஹீதின் வரலாறை உள்ளதை உள்ளபடியே, முழுவதுமாக எடுத்துச் சொல்லிவிட முடியுமா? என்றால் அதுவும் கேள்விக்குறியே.
எனவே புதிதாய் ஏகத்துவக் கொள்கையில் இணையும் மக்களுக்கு ஏகத்துவம் எத்தகைய எதிர்ப்புகளை வென்று, வெற்றி வாகை சூடியுள்ளது என்பதை எடுத்துக் கூறும் கடமை நமக்கு இருக்கின்றது.

அத்தகைய புதிய தலைமுறை மக்களுக்கு தவ்ஹீத் வளர்ந்த வரலாறை எடுத்துரைப்பது காலத்தின் கட்டாயம்.
தவ்ஹீத் கொள்கையினால் முஸ்லிம் சமுதாயம் அடைந்த நன்மை என்ன?
தவ்ஹீத் கொள்கை தளிர்விடுவதற்கு முன் தமிழக முஸ்லிம்களின் நிலை எப்படியிருந்தது?
சமுதாய எதிர்ப்புகள் எத்தகையது?
கொள்கைவாதிகள் அடைந்த சோதனைகள் என்னென்ன?
என அனைத்தையும் உள்ளடக்கி தமிழகத்தில் தவ்ஹீத் வேரூன்றிய வரலாற்றை
வருங்கால சமுதாயத்திற்கு எடுத்துரைக்கும் விதமான வரலாற்று நூல் ஆவணம் ஒன்றை தயாரிக்க தவ்ஹீத் ஜமாஅத் விரும்புகிறது.

இந்த வரலாற்று ஆவண நூல் சிறப்பாக அமைய வேண்டும் என்றால் கொள்கை சொந்தங்களாகிய நீங்களும் ஒத்துழைத்தால் தான் இறையருளால் அது சாத்தியப்படும்.

1980 களிலிருந்து உங்கள் ஊரில் நடைபெற்ற தவ்ஹீத் பிரச்சாரங்கள், அதையொட்டிய நிகழ்வுகள், எதிர்ப்புகள், ஊர் நீக்கம், பிரச்சனைகள், மறக்க முடியாத நிகழ்வுகள் என ஒன்று விடாமல் அத்தனையையும் தேதி வாரியாக – புகைப்பட ஆதாரங்களுடன் எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.

மூத்த தவ்ஹீத்வாதிகள் பொறுப்பில் இல்லாமல் இருந்தால் அவர்களை அணுகி இந்த விபரங்களைத் திரட்டி எங்களுக்கு அனுப்புங்கள்!

இணை வைப்பை எதிர்த்து விநியோகிக்கப்பட்ட துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள், பிரச்சார புகைப்படங்கள் எதுவாக இருப்பினும் சரியே.

புகைப்பட ஆதாரம் எதுவுமில்லை. ஆனால் அன்று நடந்த சம்பவம் பசுமரத்தாணி போல் இன்றும் என் மனதில் பதிந்துள்ளது என்கிறீர்களா? பிரச்சனை இல்லை.
அதையும் உங்களுக்கு தெரிந்த நடையில் எழுதி அனுப்புங்கள்.

கொள்கைச் சொந்தங்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த, இயன்ற தகவல்களை தயக்கமின்றி அனுப்பி வையுங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி:

தவ்ஹீத் வரலாறு என்ற தலைப்பிட்டு
[email protected]

என்ற ஈமெயில் முகவரிக்கோ
அல்லது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகம்
25, அரண்மனைக்காரன் தெரு,
மண்ணடி சென்னை-1

என்ற முகவரிக்கு கடிதமாகவோ அனுப்பலாம்.

தொடர்புக்கு : 99520 35171