தவறான செய்தி வெளியிட்ட மாத இதழ்: தவ்ஹீத் ஜமாஅத் விளக்கம்!

புதிய ஜனநாயகம் என்ற மாத இதழ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பற்றி தவறான செய்தி ஒன்றை சமீபத்தில் வெளியி்ட்டது. வெளியான செய்தி தவறானது மேலும் சாத்தியமில்லாதது என்பதை சுட்டிக்காட்டும் விதமாக சம்பந்தபட்ட இதழுக்கு பின் வரும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மதிப்பிற்குரிய புதிய ஜனநாயகம் மாத இதழின் ஆசிரியர் சண்முகம் அவர்களுக்கு,

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக!

கடந்த அக்டோபர் 2010 இதழின் 17 ஆம் பக்கத்தில் புதுக் கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில துணைத் தலைவரின் மகளுக்கு புரட்சிகரப் பாடல்கள் பாடப்பட்டு திருமணம் நடந்ததாக செய்தி வெளியிட்டிருந்தீர்கள்.

ஆனால் மணமகளின தந்தைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. கடந்த காலங்களில் அவர் சாதாரண கிளைப் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார்.அதுமட்டுமின்றி தற்போது மாநில துணைத் தலைவர்களாக பதவி வகிக்கும் எம்.ஐ.சுலைமான் மற்றும் ஆர்.ரஹ்மத்துல்லாஹ் அவர்களுக்கு திருமணமாகும் வயதில் பிள்ளைகளும் இல்லை. மேலும் இத்திருமணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளை, மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் உட்பட எவரும் கலந்து கொள்ளவில்லை என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எனவே இதையே மறுப்பு செய்தியாக வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு: இஸ்லாமிய திருமணம் என்பது மணமக்களுக்கு இரண்டு சாட்சிகளுடன் மணமகளின் தந்தை அல்லது பொறுப்பாளர் திருமண ஒப்பந்தம் செய்து கொடுப்பதே இஸ்லாமிய திருமணம்.

இதில் மாலைகள் கூட இருக்காது.இதைத்தவிர இதில் எந்த வித சடங்குகள் , சம்பரதாயங்கள் , பாடல்கள் , வரதட்சணை ,பெண் வீட்டார்களிடமிருந்து எந்த விதமான கையூட்டலும் பெறாமலும் புரோகிதர்கள் துணையின்றி தனித்தன்மையுடன் நடைபெறும் திருமணமே இஸ்லாமிய திருமணம்.

இதையே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தும் அதைச் சார்ந்தவர்களும் பின்பற்றி பிரச்சாரம் செய்து வருகின்றனர் குறிப்பிடுகிறோம்.

இப்படிக்கு

ஆர்.ரஹ்மத்துல்லாஹ்
மாநில துணைத் தலைவர்