தபால் மூலம் பள்ளிப் படிப்பு

மத்திய அரசு 1990ம் ஆண்டு இயற்றிய சட்டத்தின்படி, “நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஓபன் ஸ்கூலிங்’ என்ற அமைப்பு சத்தமின்றி இயங்கி வருகிறது.

தபால் மூலம் டிகிரி படிப்பதைப் போல், தபால் மூலம் பள்ளிப் படிப்பை வழங்கும் நிறுவனம் தான் இது.

இந்நிறுவனம் மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு ஆகிய ஐந்து நிலைகளில் படிப்பை வழங்குகிறது. அந்தந்த வயது சான்றிதழைக் காட்டி பதிவு செய்து கொண்டால் போதும் இந்நிறுவனம் தேவையான பாடப் பிரிவுகளில் கற்பித்து, தேர்வு நடத்தி, சான்றிதழ் வழங்குகிறது.

இச்சான்றிதழ் நாடு முழுவதும் சட்டப்படி செல்லத்தக்கது. போட்டித் தேர்வுகளிலும் பங்கேற்க முடியும். இதன் தலைமை அலுவலகம் உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் அமைந் துள்ளது.

நாடு முழுவதும் கிளை அலுவலகங்கள் உள்ளன.

மாணவர்களுக்கு பாடங்களை கற்பிப்பதற்கு 1,500க்கும் மேற்பட்ட படிப்பு மையங்கள் உள்ளன.

இதில், சேரும் மாணவர்களுக்கு வார நாட்கள், வார இறுதி நாட்கள் என இரண்டு விதங்களில் வகுப்புகள் நடைபெறும். தமிழகத்தில் 27 பள்ளிகளில் இந்த வகுப்புகள் நடத்தப்படுகின்றன. சென்னையில் சி.பி.ராமசாமி அய்யர் பவுண்டேஷன், மீசி மெட்ரிகுலேஷன் பள்ளி, ஆவடி கேந்திரிய வித்யாலயா ஆகிய இடங்களில் இந்த வகுப்புகள் நடக்கின்றன.

மிக மிக சொற்ப கட்டணத்தில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு படிப்பை முடித்து சான்றிதழ் பெற முடியும். ஆங்கிலம், இந்தி, உருது வழியில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

தமிழ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் தேர்வு எழுத முடியும். 10, 12ம் வகுப்புகளுக்கு குறைந்தபட்சம் ஐந்து பாடங்களை தேர்வு செய்ய வேண்டும்.

கூடுதலாக நமக்குப் பிடித்த இரண்டு பாடங்களை தேர்வு செய்து கொள்ளலாம். 10ம் வகுப்புக்கு ஐந்து பாடங்களுக்கு மொத்த கட்டணம் 1,000 ரூபாய். மாணவிகளுக்கு 750 ரூபாய் மட்டுமே கட்டணம். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு 550 ரூபாய். 12ம் வகுப்புக்கு 1,150 ரூபாய் கட்டணம். மாணவிகளுக்கு 900 ரூபாய். தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு 625 ரூபாய் மட்டுமே கட்டணம். இந்த கட்டணத்தில் நேரடி வகுப்புகள், புத்தகங்கள் அனைத்தும் அடங்கும். 1,000 ரூபாயில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெறும் வசதியை மத்திய அரசு ஏற்படுத்தி தந்துள்ளது.

தனியார் பள்ளிகளின் கல்விக் கொள்ளையால் தற்போது “என்.ஐ.ஓ.எஸ்.,’ போன்ற கல்வி நிறுவனங்களின் மதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 90ம் ஆண்டு 40 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே படித்த இந்நிறுவனத்தில், தற்போது மூன்று லட்சத்து 69 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர்.

தொழிற்கல்வி, ஆன்-லைன் கல்வியையும் இந்நிறுவனம் வழங்கி வருகிறது.

இந்நிறுவனம் குறித்த கூடுதல் தகவல்களை, www.nos.org என்ற இணைய தளம் மூலம் தெரிந்து கொள்ள முடியும். இதுபோன்ற அமைப்புகள் குறித்து தமிழக மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசின் கல்வித்துறை முன்வர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

-தினமலர்

தேடித்தந்தவர்:எஸ்.சித்தீக் எம் டெக்