தனது வீட்டில் தானே பெட்ரோல் குண்டு வீசி நாடகமாடிய பா.ஜ., பிரமுகர் கைது!

திண்டுக்கல்லில்,போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகவும், விளம்பரத்திற்காகவும், தனது வீடு மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக, நாடகமாடிய பா.ஜ., பிரமுகரும், அவரது நண்பரும் கைதாகினர்.
திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெரு பா.ஜ., கிளை தலைவர் பிரவீன்குமார்,28, நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் தனது வீடு மீது பெட்ரோல் குண்டு வீசியதாக, போலீசில் புகார் செய்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகவும், விளம்பரம் தேடுவதற்காகவும் பிரவீன் குமார் பெட்ரோல் குண்டு வீசியதாக நாடகமாடியது தெரிய வந்தது. அவரையும், அவருக்கு உடந்தையாக இருந்த, அவரது நண்பர் கமலக்கண்ணனையும் போலீசார் கைது செய்தனர்.

டி.எஸ்.பி., சுருளிராஜா கூறியதாவது: பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக, பிரவீன்குமார் நண்பர் கமலக்கண்ணனிடம் விசாரித்தோம். அவரும், பிரவீன்குமாரும் சம்பவத்தன்று மது குடித்துள்ளனர். இருவரும் சேர்ந்து மதுபாட்டிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து, பிரவீன் வீட்டின் மீது வீசி விட்டு தப்பினர். பின்பு ஒன்றும் தெரியாதவர்கள் போல நாடகமாடி, போலீசாருக்கு பிரவீன் தகவல் தெரிவித்துள்ளார். தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும், கட்சியில் விளம்பரம் வேண்டும் என்பதற்காக, அவர் நாடகமாடியுள்ளார். இவர்களது மொபைல் போன் பேச்சுகளை வைத்து, இதை கண்டுபிடித்தோம். பாரதிபுரத்தில் நடந்த சம்பவமும் நாடகம் போலவே தெரிகிறது. இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்,” என்றார்.

-தினமலர் 31-8-2013