ஜப்பான் பிரதமர் வீட்டில் பேய் நடமாடுவதாக பீதி!

ஜப்பானோடு செய்ய வேண்டியது

அணுசக்தி ஒப்பந்தமா? பேய் சக்தி ஒப்பந்தமா?

– கம்ப்யூட்டர் காலத்திலும் கலக்கம்!!

ஜப்பானில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு நடந்த தேர்தலில் ஷின்சோ அபே பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். இவருக்காக அரசு சார்பில் தனி வீடு ஒதுக்கப்பட்டது. வீடு ஒதுக்கி 6 மாதமாகியும் அவர் அங்கு குடியேறவில்லை. அந்த வீட்டில் பேய் நடமாடுவதாகவும், இதனால்தான் பிரதமர் அங்கு குடியேறவில்லை என்றும் தகவல் வெளியானது.

இதையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் ஜப்பான் அமைச்சரவைக்கு கடிதம் ஒன்று அனுப்பினார். அதில் பேய் நடமாடுவதாகப் பயந்து பிரதமர் தனக்கு ஒதுக்கிய வீட்டில் குடியேறவில்லை. அங்கு தான் அரசு பணிகள் நடக்க வேண்டும். பிரதமர் அங்கு குடியேறாததால் அரசு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன, தாமதம் ஏற்பட்டுள்ளன. எனவே இது சம்பந்தமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அந்த பங்களாவில் ஆவிகள் குடியிருப்பதாக தகவல்கள் பரவி உள்ளதுதான் இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. அந்த பங்களாவில் குடியிருந்த பல முன்னாள் பிரதமர்கள் அந்த வீட்டில் வழக்கத்துக்கு மாறான பல சம்பவங்கள் நடந்துள்ளதாக கூறியுள்ளனர். சில முன்னாள் பிரதமரின் மனைவிகள் கூட ஆவிகள் பயத்தால் அந்த பங்களாவில் குடியிருக்க முடியாது என்று மறுத்து உள்ளனர் என்றும் வந்த தகவல்களை அடுத்துத்தான் ஜப்பான் பிரதமர் அங்கு குடியேறவில்லை என்பதுதான் புதிய செய்தி.

புதிய பிரதமரும் இந்த பேய் பயத்தால் தான் அங்கு குடியிருக்க போகவில்லையா? என்று எதிர்க்கட்சி எம்.பி. கேட்டதற்கு பிரதமரின் மந்திரிசபை மறுப்பு தெரிவித்து பழைய கட்டடமாக இருப்பதால் அங்கு குடியேறவில்லை என்று பதில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

பழைய கட்டடத்தில் பேய் இருக்கும் என்பதுதான் அவரது பீதி என்று எதிர்கட்சிகள் வைத்த குற்றச்சாட்டை உண்மைப்படுத்தும் வகையில் ஜப்பான் பிரதமர் சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

பேய் பயத்தின் உச்சத்தில் ஜப்பான் பிரதமர் இருந்த நேரத்தில்தான் நமது நாட்டு பிரதமர் சென்ற மே கடைசி வாரம் அரசுமுறைப் பயணமாக அங்கு சென்று ஜப்பான் பிரதமரோடு அணுசக்தி ஒப்பந்தம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளியாயின.

அணுசக்தி ஒப்பந்தம் பற்றி பேசுவது இருக்கட்டும். இறைவனது சக்தி குறித்து முழுமையான அறிவுதான் இவர்களுக்கு தற்போதைய முழுமுதற் தேவை.

பேய் பயத்தால் பயந்து நடுங்குபவர்களை துப்பாக்கிக்களையும், பீரங்கிகளையும் காட்டி பயமுறுத்த தேவையில்லை.

இந்திய நாட்டில் இதுபோன்று இறந்து போனவர்களின் ஆவி நிறைய அலைந்து திரிகின்றது. அதை வைத்து உங்களை காலி செய்து விடுவேன். அந்த ஆவிகள் பாஸ்போர்ட், விசா இல்லாமல் உங்கள் நாட்டுக்கு வந்து உங்களைத் தாக்கும் என்று பயமுறுத்தினால் அணுசக்தி ஒப்பந்தம் போடத்தேவையில்லை. பேய் சக்தி ஒப்பந்தம் போட்டாலே போதும்.

இந்த கம்ப்யூட்டர் காலத்திலும் பேய் பயத்தால் பிரதமரே நடுநடுங்கும் அவலம் இருந்து வருகின்றது. ஆனால் இதற்கு இஸ்லாம்தான் சரியான தீர்வை காட்டுகின்றது. எந்த ஒரு மனிதன் இறந்துவிட்டாலும் அவனுக்கும் இந்த உலகத்திற்கும் மத்தியில் பலமான திரையை இறைவன் ஏற்படுத்துயிருப்பதாக திருமறைக் குர்ஆன் குறிப்பிடுகின்றது. வல்ல இறைவனின் இந்த மாபெரும் சக்தியை நம்பக்கூடியவருக்கு பேய் பயம் வராது.

அற்ப ஆயுளில் இறந்துபோன ஒருவரது உயிர் இந்த பூமியில் சுற்றி அலைகின்றது என்பதுதான் பேய் நம்பிக்கைக்கு காரணம். யாராக இருந்தாலும் அவரது உயிர் இறைவனது ஆளுகையின் கீழ் அவன் ஏற்படுத்தியுள்ள திரையைத் தாண்டி வராது என்று நம்புபவருக்கு பேய் பயம் அறவே இருக்காது.

அதுமட்டு மல்லாமல் பேய் என்ற ஒன்று இருக்குமானால் அந்த பேயானது அது குறித்து விமர்சனம் செய்யும் தவ்ஹீத்வாதிகளை ஏன் பிடிப்பதில்லை?

பேய் என்பது இரவில் மட்டும்தான் வருமா? பகலில் வராதா? ;

பேயானது யாராவது தனியாகச் சென்றால்தான் அவரை பிடிக்குமா? இரண்டு நபர்களாக சென்றால் அவர்களைப் பிடிக்காதா என்ற கேள்விகளுக் கெல்லாம் எந்தப் பேய்களும்(?) இதுவரை பதில் சொன்னதில்லை.

இதுபோன்ற பகுத்தறிவு ரீதியான பிரச்சாரங்கள்தான் 1980களில் பேய் பயத்தில் மூழ்கியிருந்த முஸ்லிம்களை மீட்டெடுத்தது. அத்துடன் திருக்குர் ஆன் மற்றும் நபிமொழிகளில் உள்ள ஆதாரங்களை மேற்கோள்காட்டி நாம் செய்த ஏகத்துவப் பிரச்சாரமும் மாபெரும் மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாம் குறித்த தகவல்கள் இப்படி பேய் பயத்தால் பீதியடைந்துள்ளவர்களுக்கு சரியாக எட்டுமானால் அவர்களும் உண்மையான இஸ்லாமியர்கள் அடைந்து வரும் பலனை அடைவார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.