சேலம் பொதுக்குழு – முழு விபரம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா-அத்தின் 11 வது மாநிலப் பொதுக்குழு கடந்த 30-01-11 ஞாயிறன்று சேலத்தில் உள்ள நேரு கலையரங்கத்தில் கூடியது. காலை 10.30 மணிக்கு பொதுக்குழு ஆரம்பமாகும் என்று அறிவித்திருந்த நிலையில் 9மணிக்கெல்லாம் பொதுக்குழு உறுப்பினர்கள் பொதுக்குழு நடைபெற இருந்த அரங்கை நிறைத்தனர். குறிப்பிட்டது போல் சரியாக காலை 10.30 மணிக்கு பொதுக்குழு ஆரம்பமானது. பொதுக்குழுவிற்கு மாநில மேலாண்மைக் குழு தலைவர் சம்சுல்லுஹா அவர்கள் தலைமையேற்று முதலில் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். அதைத் தொடர்ந்து மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் “மார்க்க அறிவுரை” வழங்கினார்.

மாநிலத் தலைவர் உரை:
அவர் தனது உரையில் ஷைத்தான் எப்படியெல்லாம் நம்மை வழி கெடுப்பானோ அங்கெல்லாம் எந்த அளவிற்கு கவனமாக நாம் நடக்க வேண்டும் என்ற உபதேசத்தைச் சொல்லிக் காட்டுகின்றது. அந்த அடிப்படையில், பொறுப்பாளர்களாக இருக்கக் கூடியவர்களுக்கு, பொறுப்பு வகித்துவிட்டு அந்தப் பொறுப்பிலிருந்து இறங்கும் போது ஷைத்தான் வழி கெடுக்கின்றான். அப்படிபட்ட நிலைமை ஏகத்துவப் பணியை மேற்கொள்ளும் நமது நிர்வாகிகளிடம் வந்துவிடக் கூடாது. அது போன்று உறவுகளை அரவணைக்கின்றோம் என்ற பெயரில் மர்க்கத்துக்கு முக்கியத்துவம் தராமல் மார்க்கத்தை மீறி நடக்கக் கூடிய வைபவங்களில் கலந்து கொண்டு அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டித் தந்த வழிமுறைகளை சிலர் மீறுகின்றனர். அந்த நிலையும் ஒழித்துக் கட்டப்பட வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த அளவிற்கு மார்க்க விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, தங்களது உறவினர்களுக்கு மத்தியில் நடந்து கொண்டார்கள் என்ற செய்திகளைப் பட்டியலிட்டார்.

ஆண்டறிக்கை:
அதைத் தொடர்ந்து மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது அவர்கள் ஆண்டறிக்கையைச் சமர்ப்பித்தார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா-அத்தின் வீரியமான தாவா பணிகளின் காரணமாக வளர்ச்சியடைந்த கிளைகள் மற்றும் ஜும்மா மர்கஸ்களுடைய பட்டியல் உள்ளிட்ட ஏகத்துவ மற்றும் சமுதாய பணிகளை ஆண்டறிக்கையில் சமர்ப்பிக்க பொதுக்குழு உறுப்பினர்கள் தக்பீர் முழங்கி அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தினர்.

நெஞ்சுறுதி மிக்க ஜமா-அத்:
அதைத் தொடர்ந்து மேலாண்மைக் குழுத் தலைவர் சம்சுல்லுஹா அவர்கள் முஸ்லிம்களின் 3.5% இடஒதுக்கீட்டில் ஏற்படும் குளறுபடிகளைச் சரி செய்யவும், இழைக்கப்பட்ட துரோகங்களுக்கு முடிவு காணவும் இடஒதுக்கீடு கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என கடந்த இரண்டு வருடங்களாக கோரிக்கை வைத்திருந்த நிலையில் இறைவனது மாபெரும் கிருபையால் அந்தக் கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது என்ற செய்தியையும் பதிய வைத்தார்.

மேலும், “அலகாபாத்தின் அநியாயத் தீர்ப்புக்கு எதிராக நீங்கள் எடுத்திருக்கும் உறுதியான போராட்ட நிலைபாடுகளை உங்களைத் தவிர வேறு எவரும் எடுக்க முடியாது. இந்த துணிச்சலும் தைரியமும் உங்களுக்குத்தான் உண்டு” என்று உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களே ஆச்சரியத்துடன் நம்மைப் பார்த்து கேட்கிறார்கள் என்றும், ”இறைவனுக்கு தவிர வேறு எவனுக்கும் பயப்பட மாட்டோம்” என்ற கொள்கை உறுதி தான் நம்மை இவ்வாறு உறுதியோடு நிற்க வைத்துள்ளது என்பதை அவர் பாதிவு செய்தார்.

ஒளிவு மறைவில்லாத கணக்கு வழக்குகள்:
அதைத் தொடர்ந்து மாநிலப் பொருளாளர் சாதிக் அவர்கள் வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்தார். ஜூலை 4 மாநாடு கணக்கு வரவு- செலவு, ஜனவரி 27 போராட்ட வரவு – செலவு, ஜகாத், பித்ரா, உள்ளிட்ட அனைத்து வரவு-செலவு விபரங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் தாக்கல் செய்ய “தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா-அத்” என்ற இந்த மக்கள் இயக்கம் எப்போதுமே திறந்த புத்தகம் தான் என்பதும், இது ஒரு அப்பழுக்கற்ற அற்புத இயக்கம் என்பது மற்றொருமுறை நிரூபணமானாது. அலஹம்துலில்லாஹ்….

TNTJ ன் தேர்தல் நிலைபாடு:
அதைத் தொடர்ந்து தவ்ஹீத் ஜமத்தின் தேர்தல் நிலைப்பாடு குறித்து, மேலாண்மைக்குழு உறுப்பினர் பீ.ஜைனுல் ஆபிதீன் பொதுக்குழு உறுப்பினர்களிடத்தில் விளக்கினார்.

ஆரம்பம் முதலே அதிமுக தரப்பு நமது ஜமாஅத்தை அணுகி ஆதரவு கேட்டதையும், கடந்த 22-01-11 சனிக்கிழமையன்று மீண்டும் நம்மை நமது அலுவலகத்தில் வந்து சந்தித்ததையும் விளக்கினார். அப்போது அதிமுக தலைவரிடம் கொடுப்பதற்காக ஜமாஅத் சார்பில் அதிமுக பிரதிநிதிகள் மூலம் கடிதம் கொடுத்து அனுப்பியதையும் விளக்கி விட்டு அந்தக் கடிதத்தை முழுமையாக வாசித்துக் காட்டினார்.

அதைத் தொடர்ந்து, திமுக தரப்பு நம்மை அணுக, ஒரு இயக்கமாக உங்களை ஆதரிப்பது பற்றி முடிவெடுப்பதாக இருந்தால் உங்களை எதிர்த்து வேலை செய்வதாகத் தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால், நீங்கள் எங்களுக்கு செய்யக் கூடிய அநியாயங்களை நாங்கள் போராட்டங்களின் வாயிலாக எதிர் கொள்கின்றோம். இனிவரும் காலங்களிலும் போராடியே பெற்றுக் கொள்வோம். ஆனால் சமுதாய மக்களுக்கு நீங்கள் நல்லது செய்ய வேண்டும். எங்கெளுக்கென்ற தனிப்பட்ட முறையில் எங்கள் நலனுக்காக நாங்கள் எதையும் ஒரு போதும் கேட்பதில்லை என்று விளக்கி கீழ்க்கண்ட இரண்டு கோரிக்கைகள் மட்டும் வைக்கப்பட்டன.

1.முஸ்லிம்களின் இடஒதுக்கீடு தமிழகத்தில் போதிய அளவாக இல்லை. அதனை 3.5 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
2.முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 3.5 சதவீத இடஒதுக்கீட்டில் ஏற்பட்ட துரோகத்தைச் சரி செய்யவும், எங்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு சரியாக சென்றடைகின்றதா என்பதைக் கண்காணிக்கவும் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை.

கையில் காசு – வாயில் தோசை:
தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வராத நிலையில் அதற்கு இன்னும் நாட்கள் இருக்கின்ற நிலையில் 5% இடஒதுக்கீட்டை நீங்கள் உடனே அறிவித்து விட வேண்டும். நாங்கள் அடுத்து ஆட்சிக்கு வந்தால் தருவோம் என்று சொல்லக் கூடாது.

கடந்த தேர்தலின் போதே இடஒதுக்கீட்டில் ஏற்பட்ட துரோகங்களைச் சரி செய்வோம் என்று நீங்கள் எழுதித் தந்தும் அதைச் சரி செய்யவில்லை. எனவே, அப்படி சொன்னால் முஸ்லிம்கள் அதை ஏற்க மாட்டார்கள். மேலும், ரங்கநாத் மிஸ்ரா தனது அறிக்கையில் முஸ்லிம்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார். அதனால் நீங்கள் வழங்கும் 5% என்பது அவரது பரிந்துரையின் அடிப்படையில் பார்த்தால் மிகக் குறைவு தான். எனவே உடனடியாக நாங்கள் அதை சட்டமாக்க முடியாது என்றும் நீங்கள் சொல்ல முடியாது என்று சுட்டிக் காட்டப்பட்டதையும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு விளக்கினார்.

ம.ம.கவின் மானம் கெட்ட அரசியல்:
மேலும், கண்காணிப்புக் குழு தேவை என்று நாம் வைத்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டு விட்டதையும் சுட்டிக் காட்டினார். மேலும், இதைப் பற்றி மூச்சுவிடாத தங்களை வளப்படுத்துவைதையே குறிக்கோளாகக் கொண்ட ம.ம.கட்சியினர் கண்காணிக்குப்புக் குழு அமைக்கப்பட்டு விட்டதாக வெளியான தமிழக அரசின் அறிவிப்பை தொலைக்காட்சி செய்தியில் பார்த்துவிட்டு, அவசர அவசரமாக தங்களது பொதுக்குழு தீர்மானத்தில் சேர்த்துவிட்டு, தற்போது நாங்கள் இந்தக் கோரிக்கை வைத்ததனால் தான் தமிழக அரசு இந்த கண்காணிப்புக்குழு அமைத்துள்ளது என்று காமெடி பண்ணுவதையும் சுட்டிக்காட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது. கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டுமானாலும் அதற்கான அதிகாரிகளைத் தேர்வு செய்தல் அவர்களின் பணிகளை வரையறுத்தல் போன்ற அடிப்படை காரியங்களைச் செய்து முடிக்க எவ்வளவு சுறுச்றுப்பான அரசாக இருந்தாலும் குறைந்தது இரண்டு நாட்களாவது தேவைப்படும். ஆனால் இவர்களோ காலையில் தீர்மானம் நிறைவேற்றியதாக தங்கள் இணைய தளத்தில் அவசரமாக வெளியிட்டு காலையில் தீர்மானம் நிறைவேற்றினோம்; இரண்டு மணி நேரத்தில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு விட்டது எனக் கூறி தங்கள் இயக்கத்தினரை மூடர்களாக்கியுள்ளனர். மேலும் தீர்மானங்கள் நிகழ்சியின் இறுதியில் தான் நிறைவேற்றப்படுவது வழக்கம். ஆனால் இவர்களோ காலையிலேயே தீர்மானம் நிறைவேற்றி விட்டதாக கதை கட்டியுள்ளதையும் விளக்கினார். சன் டீவியில் கண்காணிப்புக் குழு பற்றிய செய்தி வாசிக்கப்பட்டவுடன் அதைக் கோரிக்கையாக வைத்து அதிசய தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இது போன்ற கயமைத் தனத்தை நாம் எந்த இயக்கத்திலும் கண்டதில்லை.

நிலைமை சீராகாவிட்டால் செயற்குழுவில் முடிவு:
எனவே வரக்கூடிய தேர்தலில், முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்கினால் திமுகவிற்கு ஆதரவு அளிப்பது, திமுக முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீட்டைச் சாட்டமாக்காமல், அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்குவதாக வாக்குறுதியளித்தால் அவர்களை ஆதரிப்பது என்றும், தற்போது நிலைமை இன்னும் தெளிவாகாத காரணத்தால் தேர்தல் நெருக்கத்தில் மாநில செயற்குழுவைக் கூட்டி அதில் யாருக்கு ஆதரவு என்ற முடிவை எடுப்பதற்கு மாநில செய்ற்குழுவிற்கு இந்த பொதுக்குழு அங்கீகாரம் வழங்குகின்றதா? என ஒப்புதல் கேட்க அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் தக்பீர் முழங்கி அதை ஆமோதித்தனர்.

ஏகத்துவக் கொள்கையை அழிப்பதையே கொள்கையாகக் கொண்ட ம.ம.கட்சி எந்த அணியில் நின்று போட்டியிட்டாலும் அவர்களைப் படுதோல்வி அடையச் செய்ய வேண்டும் என்றும், மற்ற கட்சிகளுக்கான நிலைப்பாடு குறித்து மாநில செயற்குழுவில் முடிவெடுப்பது என்றும் பொதுக்குழு ஏகமனதாகத் தீர்மானித்தது.

பாராட்டுபத்திரம் வழங்கும் நிகழ்வுகள்:
தாவா பணிகள் மற்றும் சமுதாயப் பணிகளை அதிகமாகச் செய்ததோடு மட்டுமில்லாமல், அவற்றை உடனுக்குடனேயே தலைமைக்கு அனுப்பியது, உணர்வு இதழ் மற்றும் டிஎன்டிஜே இணையதளத்திற்கு அனுப்பியது ஆகிய பணிகளை செவ்வனே செய்து முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாவட்டங்களுக்கு பாராட்டு பத்திரம் வழங்கப்பட்டது.
இந்தியாவில்……
முதலிடம் – நெல்லை மாவட்டம்
இரண்டாம் இடம் ¬– ராமநாதபுராம் மாவட்டம்
மூன்றாம் இடம் – தஞ்சை வடக்கு

வளைகுடாவில்….
முதலிடம் – ரியாத் மண்டலம்
இரண்டாம் இடம் – குவைத் மண்டலம்
மூன்றாம் இடம் – அபுதாபி

நிர்வாக ரீதியான செயல்பாடுகள் மற்றும் நிர்வாக அமைப்பு சார்ந்த விஷயங்களை சிஸ்டமேடிக்காக வைத்து செயல்படும் முதல் மூன்று மாவட்டங்கள்:
இந்தியாவில்….
1.கோவை மாவட்டம்
2.வேலூர் மாவட்டம்
3.தூத்துக்குடி மாவட்டம்

இரத்த தான சேவையில்
இந்தியாவில்….
1.திருவள்ளூர் மாவட்டம்
2.வடசென்னை மாவட்டம்
3.தென்சென்னை மாவட்டம்

வளைகுடாவில்……
1.ரியாத் மண்டலம்
2.துபாய் மண்டலம்
3.தம்மாம் மண்டலம்

அவசர இரத்த தான சேவையில்……
1.மதுரை மாவட்டம்
2.திருச்சி மாவட்டம்
3.திருவள்ளூர் மாவட்டம்

பரிசு வழங்கும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்தலுக்கு முன்பாக, பழைய நிர்வாகிகள் நிர்வாகம் செய்த போது ஏதேனும் மனக் குறைகள் இருந்தாலோ, மனிதன் என்ற அடிப்படையில் நாங்கள் ஏதேனும் தவறுகள் செய்திருந்தாலோ அதை அல்லாஹ்வுக்காக மன்னிக்கும்படி அனைத்து நிர்வாகிகளின் சார்பில் மாநிலத் தலைவர் அல்தாஃபி அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்.

புதிய நிர்வாகிகள் தேர்தல்:
அதைத் தொடர்ந்து புதிய நிர்வாகிகளைத் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா-அத்தின் அமைப்பு நிர்ணய சட்டவிதிப்படி மேலாண்மைக்குழு பரிந்துரை செய்தது.

மாநிலத் தலைவராக சகோதரர் ரஹ்மத்துல்லாஹ் அவர்களை மேலாண்மைக்குழு பரிந்துரை செய்ய, அதற்கு மறுப்புத் தெரிவித்த சகோதரர் ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் இந்த ஜமா-அத்தை முழுவதுமாக முன்னின்று வழிநடத்தி செல்ல வேண்டிய பொறுப்பும், அனுபவமும் சகோதரர் பீ.ஜே அவர்களுக்குத் தான் உண்டு. இது என்னுடைய கருத்து மட்டுமல்ல, அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுடைய கருத்தும், உள்ளத்தேட்டமும் இது தான் என்று தனது கருத்தை தெரிவிக்க அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் ஏகமனதாக அது தான் தங்களது கருத்தும் என்று தக்பீர் முழங்கி சகோதரர் ரஹ்மத்துல்லாஹ் அவர்களது கருத்தை வழிமொழிய சகோதரர் பீ.ஜே அவர்களை ஏகமனதாக மாநிலத் தலைவர் பொறுப்பிற்கு பொதுக்குழு தேர்ந்தெடுத்தது.

மேலாண்மைக் குழுவின் பரிந்துரையும் தாண்டி பொதுக்குழுவில் மக்கள் தேர்ந்தெடுப்பது தான் இறுதியான முடிவு என்ற நிலை, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா-அத் ஒரு ஜனநாயகப் பேரியக்கம் என்பதை நிலைநாட்டியது. பொதுக்குழுவின் முடிவை மதித்து அது வரை பொறுப்பிற்கு வர மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்த சகோதரர் பீ.ஜே அவர்களும் வேறுவழியின்றி அமைதியாகி விட்டார். அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.

அதைத் தொடர்ந்து கீழ்க்கண்ட நிர்வாகிகளை கீழ்க்கண்ட பொறுப்பிற்கு மேலாண்மைக்குழு பரிந்துரை செய்ய சில நிர்வாகிகளை ஏகமனதாகவும், சில நிர்வாகிகளை கைகளை உயர்த்தி வாக்கெடுப்பு மூலம் பெரும்பான்மையின் அடிப்படையிலும் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்தனர்.

பொதுச் செயலாளர்: ரஹ்மதுல்லாஹ்
பொருளாளர்: அன்வர் பாஷா
துணைத் தலைவர்: கோவை அப்துர் ரஹீம்
துணைப் பொதுச் செயலாளர்: சையது இப்ராஹீம்
மாநிலச் செயலாளர்கள்
அப்துல் ஹமீது
எக்மோர் சாதிக்
அஷ்ரஃப்தீன் பிர்தௌசி
அப்துல் ஜப்பார்
யூசுப் (திருவள்ளூர்)
மாலிக் (ராம்நாடு)
சாதிக் ( கோபிசெட்டிபாளையம்)

அதைத் தொடர்ந்து ஐக்கிய அமீரக ஒருங்கிணைப்பாளர் ஹாமீம் அவர்கள் நிர்வாகத்தை எவ்வாறு திறம்படச் செய்வது என்பது குறித்து, “நிர்வாகவியல்” என்ற தலைப்பில் பயனுள்ள பல விஷயங்களை பொதுக்குழு உறுப்பினர்கள் மத்தியில் எடுத்துவைத்தார்.

அழைப்பு பணியே உயிமூச்சு:
அதைத் தொடர்ந்து மாநிலத் தலைவர் சகோதரர் பீ.ஜே அவர்கள், நம்முடைய முக்கிய இலக்கு அழைப்புப் பணி தான். அழைப்பு பணிக்குத் தான் நாம் முதலிடம் தர வேண்டுமேயல்லாமல், சமுதாயப் பணிகள் மற்றும் தேர்தல்நிலைபடு போன்றவைகளெல்லாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையில் தான் நாம் வைக்க வேண்டும் என்பதையும், நாம் இருக்கக் கூடிய பகுதியில் கபுரு வழிபாடு நடத்தும் ஒருவர் இருந்தாலும் கூட நம்முடைய தாவா பணி நிறைவடையவில்லை. அவரையும் ஏகத்துவத்தின் பக்கம் கொண்டுவர வேண்டும் என்பது தான் ஒவ்வொருவருடைய லட்சியமாக இருக்க வேண்டும் என்பதையும், நாம் எப்படி நரகப் படுகுழியிலிருந்து மீண்டு சுவனப்பாதையை நோக்கி சென்று சுவனத்தை அடைய வேண்டும் என்று விரும்புகின்றோமோ அதைப் போல கப்ரு வழிபாடு, மத்ஹபு போன்ற வழிகேடுகளில் இருப்பவர்களும், இன்னபிற தவறான கொள்கையில் இருக்கும் மாற்றுமத நண்பர்களையும் ஏகத்துவத்தின் பக்கம் அழைப்பதே நமது பிரதான, உயிர்மூச்சான கொள்கை என்பதையும் நாம் விளாங்கிக் கொள்ள வேண்டும் என்ற கருத்தைப் பதிவு செய்தார். தமிழகத்திலேயே அதிகமான பிரச்சாரகர்களைக் கொண்ட பேரியக்கமாக நமது ஜமா-அத் திகழ்ந்து வரும் இவ்வேளையில், கிளைகளுடைய எண்ணிக்கை அதிகமாவதற்கு ஏற்ப பிரச்சாரகர்களுடைய எண்ணிக்கை அதிகமாகவில்லை. எனவே, இந்த அழைப்புப் பணியை மக்கள் மத்தியில் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு பிரச்சாரகர்களாக தங்களை அர்ப்பணித்து தியாகம் செய்ய பொதுக்குழு உறுப்பினர்கள் முன்வர வேண்டுமென்றும், ஒவ்வொரு ஊரிலிருந்தும் குறைந்தது ஒரு நபரையாவது நீங்கள் மதரஸாவுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தார்.

இறுதியாக, மாநில மேலாண்மைக்குழு தலைவர் சம்சுல்லுஹா அவர்கள் நன்றியுரை நிகழ்த்த மாநில பொதுக்குழு செவ்வனே நிறைவுற்றது.