சேலத்தில் 4-1-2009 அன்று நடைபெற்ற செயற்குழு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில அவசர செயற்குழு சேலம் தவ்ஹீத் கல்லூரியின் அரங்கில் 4/1/2009 காலை பத்து மணிக்கு துவங்கியது. மாநிலத் தலைவர் எம்.ஐ. சுலைமான் தலைமையில் நடைபெற்ற செயற்குழுவில் 500க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொன்டனர்.

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் உயிர் மூச்சாகக் கொண்ட அமைப்பு என்பதையும், இஸ்லாத்தின் சட்டங்கள் எப்படி அனைவருக்கும் சமமானதோ அது போல் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகச் சட்டங்களும் அனைவருக்கும் சமமானது என்பதையும், இந்த ஜமாஅத் எந்தத் தனி மனிதனையும் சார்ந்தது அல்ல என்பதையும் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் நிரூபிக்கும் வகையில் இந்த செயற்குழு நடந்தேறியது.

ஜமாஅத்தின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் நடப்பவர்களையும், ஜமாஅத்தைத் தங்களின் சுய நலனுக்குப் பயன்படுத்திக் கொள்பவர்களையும், இயக்கத்தின் கட்டுப்பாட்டை மீறி துரோகம் செய்பவர்களையும் இந்த ஜமாஅத் ஒரு போதும் மன்னிக்காது என்பதை இந்த செயற்குழு தெள்ளத்தெளிவாக அறிவித்தது.

செயற்குழுவில் இயக்கம் இரண்டாகப் பிளவுபடப் போகிறது. பயங்கரக் கலவரம் நடக்கப் போகிறது என்றும் காவல் துறையினர் நமது நிர்வாகிகளிடம் தெரிவித்து போதுமான போலீஸ் பாதுகாப்பு போடுமாறு உத்தரவு வந்திருப்பதாகத் தெரிவித்தனர்.

தனி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவே இந்தச் செயற்குழு கூடுகிறது. எந்தத் தனி நபருக்காகவும் எங்கள் மக்கள் இயக்கத்தை எதிர்க்க மாட்டார்கள். ஒரு போலீஸ்காரர் கூட அனுப்பத் தேவை இல்லை. நாங்கள் நீதியான, நியாயமான முடிவையே எடுப்போம் என்பது எங்கள் மக்களுக்குத் தெரியும். எங்கள் நாணயம், நேர்மை மீது எங்கள் மக்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. தக்க காரணங்களுடன் நாங்கள் எடுக்கும் எந்த முடிவையும் எங்கள் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று காவல் துறையினரிடம் நிர்வகிகள் தெரிவித்தனர். அசம்பாவிதம் ஏற்பட்டால் எங்களைக் குறை கூறக் கூடாது என்று காவல் துறையினர் கூறி விட்டனர்.

இயக்கத்தின் முக்கியமான நபர்களாகக் கருதப்பட்டவர்கள் சிறு சலசப்பும் இல்லாமல் உறுப்பினர் அனைவரின் ஒருமித்த ஆதரவுடன் நீக்கப்பட்டது இயக்கங்களின் வரலாற்றில் ஒரு அதிசயம்; உங்கள் இயக்கத்தை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று உளவுத்துறை அதிகாரி பின்னர் வியந்து கூறியது குறிப்பிடத் தக்கது.

நிகழ்ச்சி துவங்கியவுடன் தலைவர் செய்த ஒரு அறிவிப்பே இந்த ஜமாஅத்தின் தனித்தன்மையை எடுத்துக் காட்டியது.

”பொதுவாக செயற்குழு நிகழ்ச்சிகளைப் பதிவு செய்ய ஜமாஅத் அனுமதிப்பதில்லை. இது சில தனி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் செயற்குழு என்பதால் யார் வேண்டுமானாலும் இங்கு பேசப்படுவதைப் பதிவு செய்து கொள்ளலாம். விரும்பினால் உங்கள் நண்பர்களுக்கு கால் பன்னி கேட்கச் செய்யலாம்; ஏனெனில் எந்த ஒளிவு மறைவும் எங்களிடம் இல்லை” என்பதே அந்த அறிவிப்பு.

செயற்குழுக் கூட்டம் என்றாலும் செயற்குழு உறுப்பினர் அல்லாத சில செயல் வீரர்களும் ஆர்வத்துடன் வந்திருந்தனர். அவர்களையும் நிர்வாகிகள் அனுமதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து யாரும் எந்தக் கேள்வியும் கேட்கலாம்; அதற்காக தனியாக நேரம் ஒதுக்கியுள்ளோம் எனவும் தலைவர் அறிவித்தார். ஆயினும் கேள்வி நேரத்தில் ஒன்றிரண்டு கேள்விகளே கேட்கப்பட்டன. சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் அனைவரும் மனநிறைவுடன் திரும்பிச் சென்றதை இது உறுதிப்படுத்தியது.

மூவர் மீது நடவடிக்கை

முன்னாள் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் இக்பால், முன்னாள் மாநிலச் செயலாளர்கள் அபூ ஃபைஸல், ஷிப்லீ ஆகியோர் மீது ஊழல், துரோகம் ஆகிய காரணங்களால் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றி மாநில நிர்வாகிகள் விளக்கமாக எடுத்து வைத்தனர். இம்மூவர் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கையை செயற்குழு உறுப்பினர்கள் ஒரு மனதாக ஏற்றுக் கொண்டனர். இம்மூவரையும் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்க வேண்டும் என்று செயற்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

மனிதர்கள் யாவரும் தவறு செய்பவர்களே என்பதால் அடிப்படைக் கொள்கையை மறுக்காமல் யாராவது தவறு செய்தால் அவரை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்கக் கூடாது; ஆயினும் இயக்கத்துக்கு எதிராகச் செயல்பட்டால் அவர்களை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்கலாம் என்ற் விதியின்படி இவர்கள் நீக்கப்பட்டனர்

• ஊழல் குற்றச்சாட்டு குறித்தும், துரோகம் குறித்தும் விசாரிப்பதற்காக இமூவரும் அழைக்கப்பட்ட போது விசாரணைக்கு வராதது,

• விசாரணை நடக்கும் நாளில் விசாரணைக்கு வராமல் ராஜினாமாக் கடிதம் கொடுத்தது,

• ராஜினாமா கடிதம் கொடுத்த சில நிமிடங்களில் பலருக்கு எùஸமெஸ் அனுப்பியது

• தொலைக் காட்சிக்குத் தகவல் தெரிவித்தது,

• உளவுத்துறை அதிகாரிகளுக்கு உடனே தகவல் சொன்னது

• பல முறை வின் டிவி அலுவலகத்தில் இரகசிய ஆலோசனை செய்தது,

• வெளியே சொல்லக் கூடாது என்று நிர்வாகத்தில் சத்தியம் செய்து விட்டு ஜமாஅத்தை அவமதிக்கும் வகையில் சத்தியத்தை மீறியது; உடனே வெளியே பரப்பியது,

• தயவு செய்து ராஜினாமாவை திரும்பப் பெற்று நிர்வாகக் குழுவில் விளக்கம் சொல்லுங்கள் என்று தலைவர் சுலைமான் வேண்டிக் கொண்ட போதும் அதை மறுத்தது

ஆகிய செயல்கள் இயக்கத்துக்கு எதிரான நடவடிக்கை என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

தலைமைக்கு எதிராகச் செயல்பட்டவர்களை நமது ஜமாஅத் சட்ட விதியின்படி இம்மூவரும் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்தும் நீக்கப்படுவதாக அறிவித்ததையும் செயற்குழு உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டனர்.

புதிய நிர்வாகிகள் தேர்வு

இம்மூவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதால் காலியான மூன்று இடங்களை நிரப்புவது பற்றி மாநிலத் தலைவர் விளக்கினார். இது வரை நாங்கள் நிர்வாகம் செய்த அனுபவத்தின் அடிப்படையில் தலைமை நிர்வாகிகள் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்பதை உணர்கிறோம். எனவே காலியான மூன்று இடங்களுடன் மேலும் இரு செயலாளர்களை அதிகப்படுத்த மாநிலத் தலைவர் செயற்குழுவின் ஒப்புதலைக் கோரினார். நிர்வாகக் குழுவின் சார்பில் நாங்கள் பரிந்துரை செய்பவர்களை ஏற்றுக் கொள்கிறீர்களா எனவும் கேட்டு பின்வருபவர்களின் பெயர்களைப் பரிந்துரை செய்தார்.

• மாநில துணைப் பொதுச் செயலாளராக எஸ். கலீல் ரசூல்,
• மாநிலச் செயலாளராக தவ்ஃபீக்
• மாநிலச் செயலாளராக கோவை ரஹ்மதுல்லாஹ்
• மாநிலச் செயலாளராக ஹாஜா நூஹ்
• மாநிலச் செயலாளராக அப்துர் ரஜ்ஜாக்

ஆகியோரைப் பரிந்துரை செய்வதாகக் கூறியதும் ஏகமனதாக செயற்குழு உறுப்பினர்கள் ஒப்புக் கொண்டனர்.

கலீல் ரசூல் வழக்கு

கலீல் ரசூல் அவர்கள் முன்னர் மாநிலச் செயலாளராக இருந்த போது வீட்டு வேலைக்காரப் பெண்ணை சித்திரவதை செய்ததாக இரு வழக்குகள் போடப்பட்டன. இது பற்றி தமுமுகவினர் வேலைக்காரப் பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாகப் பரப்பினார்கள். போடப்பட்ட வழக்கு பாலியல் தொடர்பானது அல்ல என்றாலும் வேலைக்காரப் பெண்ணை அடித்து சித்திரவதை செய்திருந்தால் அதை ஒப்புக் கொள்ள முடியாது என்று நிர்வாகம் அவரிடம் விளக்கம் கேட்டது. இது பொய் வழக்கு என்றாலும் நான் குற்றமற்றவன் என்று நிரூபிக்கும் வரை மாநிலச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன் என்று கலீல் ரசூல் கூறி உணர்விலும் அந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

இது பற்றி செயற்குழு உறுப்பினர் சிலர் விளக்கம் கேட்டனர். மூன்று மாநில நிர்வாகிகள் எந்த நாளில் ராஜினாமா நாடகம் நடத்தினார்கNள்h அந்த நாளில் கலீல் ரசூல் மீது போடப்பட்ட இரு வழக்குகளும் பொய் வழக்குகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது என்று விளக்கப்பட்டதும் செயற்குழு உறுப்பினர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தவ்ஃபீக் மீது புகார்

இது போல் தவ்ஃபீக் ஒரு பெண்ணுடன் பேருந்தில் பயணம் செய்தார் என்று சிலர் குற்றம் சாட்டினர். இதற்குப் பதில் அளிக்குமாறு நிர்வாகிகள் கேட்டுக் கொண்ட போது தவ்ஃபீக் விளக்கம் அளித்தார். ”தான் இந்த ஜமாஅத்தில் மாவட்டம் மற்றும் தலைமை பொறுப்பை ஏற்றது முதல் இன்று வரை நான் எந்தப் பாலியல் குற்றமும் செய்யவில்லை. பேருந்தில் அந்நியப் பெண்ணுடன் நான் பயணம் செய்தது குறித்து பகிரங்க விவாதம் நடத்த தயாராக இருக்கிறேன். ஜமாஅத்தின் எந்த விசாரனைக்கும் உட்பட நான் தயாரக உள்ளேன் எனக் கூறினார்.

தவ்ஃபீக் தொடர்பாக எழுத்து மூலம் புகார் கூறி நிரூபிக்கும் பொறுப்பு ஏற்கும் யாரும் புகார் கூறலாம் என்று தலைவர் அறிவித்தார். விசாரணையில் குற்றம் நிரூபணமானால் மற்றவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை தவ்ஃபீக் மீதும் எடுக்கப்படும் என அறிவித்தார்.

உயர்நிலைக் குழு

தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் மேடையில் அமர்ந்ததும் மேலாண்மைக் குழு பற்றி மாநில துணைத் தலைவர் அல்தாபி விளக்கினார்.

சென்ற பொதுக்குழுவில் பிஜேயை நிறுவனத் தலைவராக்கி உயர்நிலைக் குழு அமைக்கும் பொறுப்பை ஒப்படைத்தோம். அந்தப் பொறுப்பை பீஜே நிறைவேற்றி அறிக்கை தந்துள்ளார். உயர்நிலைக் குழுவின் அதிகாரம் உள்ளிட்ட அணைத்தையும் வகுத்துத் தந்துள்ளார் என்று தெரிவித்தார்.

உயர்நிலைக்குழு தலைவராக மவ்லவி ஷம்சுல்லுஹாவும், தனிக்கை குழு  உறுப்பினர்களாக சைபுல்லா ஹாஜா, அன்வர் பாஷா, கோவை ரஹீம், எம்.எஸ்.சுலைமான், பீ.ஜைனுல் ஆபிதீன் ஆகியோரை பீஜே பரிந்துரைத்துள்ளார் என்று அல்தாபி கூறியதும் உறுப்பினர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

நிறுவனத் தலைவர் இனி இல்லை

நிறுவனத் தலைவரான நான் எனது பொறுப்பை நிறைவேற்றி மேலாண்மைக் குழுவை அமைத்து விட்டதால் நிறுவனத் தலைவர் என்ற பொறுப்பு இனி மேல் தேவை இல்லை என்று பீஜே கூறியதை நிர்வாகக் குழு ஏற்றுக் கொண்டது போல் செயற்குழுவும் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட போது தலைமை எடுக்கும் முடிவில் நம்பிக்கை வைத்து செயற்குழு உறுப்பினர்கள் ஆதரித்தனர்.

பகல் உணவு இடைவேளைக்குப் பின் முன்னாள் பொதுச் செயலாளர் பாக்கர் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

மாநில துணைத் தலைவர் அல்தாஃபி அவர்கள் இது குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.

அல்தாஃபி ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு;

கடந்த எட்டு மாதங்களாக ஜமாஅத்திலிருந்து பாக்கர் தவிர்க்கப்படுவது ஏன் என்ற கேள்வி பலரிடம் உள்ளது. பாக்கரும் அவர் சார்பாக பேசுபவர்களும் பாக்கர் மீது ஜமாஅத் அநீதி இழைப்பதாகக் கூறுகின்றனர். இது பற்றி மக்கள் மத்தியில் முரண்பட்ட கருத்துக்கள் சென்று கொண்டுள்ள நிலையில் நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகளில் பாக்கருக்கு ஆதரவான நிலை எடுத்தவர்கள், பாக்கருக்கு எதிரான நிலை எடுத்தவர்கள் கொண்ட கூட்டுக் கூட்டம் நடத்தி இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முன்னாள் பொருளாளர் அன்வர் பாஷா அவர்கள் கூட்டுக் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்தார்.

மாநில நிர்வாகிகளில்

தலைவர் சுலைமான்,
பொதுச் செயலாளர் அப்துல் ஹமீத்,
பொருளாளர் அப்துல் ஹமீத்,
துணைத் தலைவர் அல்தாஃபி
ஆகியோரும்,

பாக்கர் சார்பில்

பாக்கர்,
முனீர்,
சித்தீக் ஆகியோரும்,

பாக்கர் மீது குற்றம் சாட்டும் முன்னாள் நிர்வாகிகள் சார்பில்

சம்சுல்லுஹா,
சைபுல்லாஹ் ஹாஜா,
தவ்ஃபீக், எம்.எஸ். சுலைமான்,
பீஜே

அனைத்துத் தரப்புக்கும் பொதுவாக அன்வர் பாஷா ஆகியோர் அடங்கிய கலந்துரையாடல் நடந்தது. பேசப்படும் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்தக் கலந்துரையாடல் நடந்தது.

பாக்கர் பிரச்சனை தொடர்பான காரணங்களில் அபூதாபி மண்டல தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் ஹாமீம் இப்ரஹீம் அவர்கள் பாக்கருக்கு நேரடியாக எழுதிய கடிதம் கடிதத்தை முதல் பிரச்சனையாக பாக்கர் எழுப்பினார்.

அந்தக் கடிதம் வாசிக்கப்பட்டு அது பதிவு செய்யப்பட்டது.

(பாக்கரை நோக்கி நேருக்கு நேர் குற்றம் சாட்டி அவர் எழுதிய கடிதம் தனியாக பிரசுரிக்கப்பட்டுள்ளது. அவர் நேரடியாக விவாதிக்கத் தயார் என்று தலைமைக்கு கடிதம் தந்தார். ஆனாலும் பாக்கர் இதை ஏற்று கடிதம் தரவில்லை.)

சகிலா பானு என்பவர் தன் மீது பொய்க் குற்றச்சாட்டு சுமத்துவதாக பாக்கர் கூறினார். அது பொய்யில்லை என்றும், இது குறித்து விசாரணை செய்ய மாநிலத் தலைவராக அப்போது இருந்த பீஜே அழைத்த போது பாக்கர் மறுத்தது, அல்தாஃபியாகிய நான் விசாரணைக்கு அழைத்த போதும் விசாரனைக்கு பாக்கர் மறுத்ததை அவர் முன்னிலையில் நேரடியாகச் சொன்னோம். மேலும் என் பிரச்சனை பொதுக்குழுவில் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று பொதுக்குழுவுக்கு முதல் நாள் இரவில் என் வீட்டுக்கு வந்து நீங்கள் கெஞ்சியது ஏன் என்று பீஜே கூறியதை பாக்கர் மறுக்கவில்லை எனக் கூறி அதற்கான வீடியோ பதிவையும் ஒளிபரப்பினார்.

வின் டீவியை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கும் போது பாக்கர் மூலம் எவ்வளவு செலவு செய்யப்பட்டதோ அது போல் மூன்று மடங்கு தருவதாக என் முன்னிலையில் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் முதலீடு செய்தவர்களுக்கு மூன்று மடங்கு கொடுக்கப்படவில்லை. இரண்டு மடங்கு தான் கொடுக்கப்பட்டது. இன்னொரு மடங்கான இரண்டரைக் கோடி ரூபாயை ஏன் பங்குதாரருக்குக் கொடுக்கவில்லை என்று பீஜே நேருக்கு நேர் குற்றம் சாட்டிய போது பாக்கரால் அதை மறுக்க முடியவில்லை.

வின் டிவி உரிமையாளர் இரு மடங்கு தான் தந்தார் என்பது தான் பதிலாக இருந்தது. இதில் பிரச்சனை ஏற்பட்டால் பீஜே கூறும் தீர்ப்பை பாக்கரும் வின் டிவி உரிமையாளரும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று ஒப்பந்த்தில் உள்ளது. இரண்டரைக் கோடி ரூபாய் வின் டிவி உரிமையாளர் தராவிட்டால் என்னிடம் அந்தப் பிரச்சனையைக் கொண்டு வராதது ஏன்? இரண்டரைக் கோடியை ஒருவர் ஏமாற்றியிருந்தால் அதன் பின்னர் அவருடன் எப்படி நட்பு அதிகரிக்கும்? உங்களை வின் டிவி டைரக்டராக எப்படி போடுவார்கள்? உங்களுக்கு என எப்படி தனி அறை அங்கே ஒதுக்குவார்கள்? என்று பீஜே அடுக்கடுக்காக நேரடியாகக் கேட்ட போது அதற்கு பாக்கர் பதில் சொல்லவில்லை எனக் கூறி அதன் வீடியோ ஆதாரத்தை அல்தாபி போட்டுக் காட்டினார்.

என் மீது பாக்கர், முனீர், பாக்கரின் நெருங்கிய உறவினர்களான கீழை ஜமீல் மற்றொரு உறவினரான தொண்டியப்பா ஆகியோர் அவதூறு கூறியுள்ளிர்கள். அதை நேருக்கு நேர் என் முன்னிலையில் கூறுங்கள் என்று பீ.ஜே திரும்பத் திரும்ப வற்புறுத்தினார். அவர்கள் பரப்பியது அவதூறு என்பதை அவர்கள் முன்னிலையிலேயே நிரூபித்தார். அது அவதூறு தான் என்பதை பாக்கர் ஒப்புக் கொண்டார் எனக் கூறிய அல்தாபி இதற்கான வீடியோவையும் போட்டுக் காட்டினார்.

பாக்கருடன் நடந்த கலந்துரையாடலின் மொத்த வீடியோவும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வழங்கப்பட்டது. தேவைப்படும் கிளைகள் தலைமையைத் தொடர்பு கொண்டால் அனுப்பி வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இறுதியாக மேலாண்மைக் குழுத் தலைவர் சம்சுல்லுஹா எழுச்சியுரை நிகழ்த்தினார். தூய்மையான இந்த ஜமாஅத்தில் யாராக இருந்தாலும் பீஜே கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். ஆனால் பாக்கர் விஷ்யத்தில் மட்டும் அவர் ஒவ்வொரு முறையும் மென்மையான போக்கைக் கடைப்பிடித்தார். ஆரம்பத்திலேயே அவர் தெளிவான முடிவை எடுக்கத் தவறியதும் எங்களைப் போன்றவர்களின் உண்ர்வுகளை மதிக்கத் தவறியதும் தான் பாக்கர் தொடர்ந்து தவறுகள் செய்யக் காரணமாக அமைந்தது என்று அவ்வுரையில் குறிப்பிட்டார். இப்போது கூட பீஜே, பாக்கரிடம் பேசி ஜமாஅத் நன்மை கருதி கன்னியமாக ஒதுங்கிக் கொள்ளுங்கள் என பேசிக் கொண்டிருக்கிறார். இது போன்ற போக்கு ஜமாஅத்துக்கு நல்லதல்ல என்று பீஜேக்குக் கூறுகிறேன் என்று ஆக்ரோஷமாக உரையாற்றினார்.

பின்னர் கீழ்க்கண்ட தீமானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. வல்லாதிக்க அமெரிக்காவின் கைப்பாவையான இஸ்ரேல் பாலஸ்தீன் காஸா பகுதியில் குண்டு வீசி 100 க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை கொன்று குவித்துள்ளது. உலகத்திலேயே மனித உரிமை மீறல்களை துணிந்து செய்கின்ற இஸ்ரேலை இந்திய அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் யாரும் கண்டிக்கவில்லை. குறிப்பாக தமிழக அரசியல் கட்சித்தலைவர்களில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைத் தவிர யாரும் வாயைத் திறக்கவில்லை. இவர்களின் மனிதாபிமற்ற இச்செயலை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

2. இந்தியாவில் பரவலாக பலகுண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டு பல்லாயிரக் கணக்கான அப்பாவிகள் பலியாகியுள்ளனர். பல குண்டு வெடிப்புகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமலேயே உள்ளது. உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவதற்கும், இன்னும் இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும் அனைத்து வழக்கு விசாரணைகளையும் ஈஇஒ யிடம் ஒப்படைக்க வேண்டும்.

3. நாட்டில் நடைபெறும் குற்றங்களைத் தடுப்பதற்கும், சம்பந்தப்பட்டவர்களை தண்டிப்பதற்கும் இருக்கின்ற குற்றவியல் சட்டங்களே போதுமானது. ஆனால் அமெரிக்காவின் கைப்பாவையாகவும், பாஸிஸ்டுகளின் ஊது குழலாகவும் செயல்படும். ப.சிதம்பரம் தீவிரவாத தடுப்புச் சட்டம் என்று புதிய சட்டம் கொண்டுவந்துள்ளனர். இது முழுக்க முழுக்க சிறுபான்மைச் சமுதாயத்தை பழிவாங்குவதற்காக கொண்டுவரப்பட்டதாகும். இதை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதோடு, மத்திய அரசு உடனடியாக இச்சட்டத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

4. கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது சிறுபான்மையோருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குவோம் என காங்கிரஸ் தனது தேர்தல் வாக்குறுதியாக அளித்தது. 5 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் சச்சார் கமிஷன் அறிக்கையை மத்திய காங்கிரஸ் அரசு பெற்றுக் கொண்டதைத் தவிர தனி இடஒதுக்கீடு குறித்து எந்த நடவடிக்கையையும் எடுக்காததை வன்மையாகக் கண்டிக்கிறோம். சிறுபான்மையோரின் ஜீவாதார உரிமையான தனிஇடஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கவில்லையானால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் முஸ்லிம்கள் தக்க பாடம் புகட்ட நேரிடும் என இச்செயற்குழு எச்சரிக்கிறது.

5. புதுவை மாநில முஸ்லிம்களுக்கு தனிஇடஒதுக்கீடு வழங்க சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆண்டுகள் பல கடந்தும் சட்டம் இயற்றாமல் பாரபட்சம் காட்டும் காங்கிரஸ் கூட்டணி அரசை வன்மையாகக் கண்டிப்பதோடு, புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் வைத்தியலிங்கம் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு உடனடியாக அந்தத் தீர்மானத்தை சட்டவடிவம் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் எதிர்வரும் சட்டசபை கூட்டத் தொடரில் சட்டசபை முற்றுக்கை போராட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

6. தமிழக அரசு முஸ்லிம்களின் நீண்டகால கோரிக்கையான தனிஇடஒதுக்கீடு கோரிக்கையை திமுக அரசு ஏற்று 3.5 சதவீத உள் ஒதுக்கீடு அளித்தது. இது அடிவயிற்றுப் பசிக்காரனுக்கு சோளப்பொறி போட்டதைப் போன்றிருக்கிறது. இது சிறுபான்மை முஸ்லிம் சமுதாயத்தின் தேவையை நிவர்த்தி செய்வதாக இல்லை. 3.5 சதவீதத்தை 7 சதவீதமாக உயர்த்த வேண்டும். வழங்கப்பட்ட 3.5 சதவீதமும் முஸ்லிம்களுக்கு முறையாக கிடைக்கவிடாமல் அதிகாரிகள் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழக முதல்வர் இதில் தலையிட்டு பாதிக்கப்பட்ட சமூகத்திற்கு முறையாக அறிவிக்கப்பட்ட இடஒதுக்கீடு கிடைத்திட அரசு தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறோம்.

7. தமிழக மக்கட் தொகையில் சரிபாதிக்கும் மேற்பட்டோர் அன்றாடக் காட்சிகளாக வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களே! இவர்களின் குடும்பத் தலைவர்களும் அங்கத்தினர்களும் குடிகாரர்களாக மாற தமிழக அரசு குடும்பங்களைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது. மாணவப் பருவத்தில் உள்ளவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் சீரழிந்த சமுதாயமாக உருவாக அரசு காரணமாக அமைந்துவிட்டது. மதுவை தமிழக அரசு முழுமையாக விளக்கிக் கொள்ள வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

8. இந்திய சுதந்திரத்திற்கு உடல் பொருள் அனைத்தையும் தியாகம் செய்தவர்களில் ஏனைய சமுதாயத்தவர்களையெல்லாம் விட முஸ்லிம்கள் தங்களது சதவீதத்தையும் தாண்டி தியாகம் செய்திருக்கிறார்கள். சுதந்திரத்திற்குப் பின் மதச்சார்பற்ற நாடு என இந்தியாவை அறிவித்தார்கள். அறிவிக்கப்பட்ட நாள்முதல் இன்று வரை வந்த எந்த அரசும் மதச்சாற்பற்ற தன்மையைக் காத்ததாக தெரியவில்லை. சமீபத்தில் தமிழக அரசு பொங்கலை முன்னிட்டு இலவச வேட்டி, சேலை, சக்கரப் பொங்கலுக்கு தேவையான பொருட்களும் இலவசமாக வழங்கி அறிவித்துள்ளது. இதுபோன்று ஏனைய சமூதாயத்தினரின் பண்டிகைகளுக்கும் இலவசமாக வழங்க வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.

9. முஹர்ரம் 10 ஆம் நாள் கறுப்பு நாள் என்றும், கர்பலா நாள் என்றும் இஸ்லாம் கூறாத ஒன்றை ஷியாக்கள் மார் அடிப்பது, தங்களை வறுத்திக் கொண்டு காயப்படுத்துவதும், கோரப்படுத்துவதும் நடைமுறையில் உள்ளது. இது போன்றவற்றிற்கு தமிழக அரசு தடை விதித்து சமூக நல்லிணக்கத்தையும், சட்ட ஒழுங்கையும் பாதுகாக்க கேட்டுக் கொள்கிறோம்.

10. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்ட மாநில முன்னாள் பொதுச் செயலாளர் எஸ்.எம்.பாக்கர், மாநில முன்னாள் நிர்வாகிகளான முஹம்மது சித்தீக், முஹம்மது முனீர், அபூபக்கர் என்ற தொண்டியப்பா, மற்றும் செய்யது இக்பால், அபூஃபைஸல், ஷிப்லி ஆகியோரை ஜமாஅத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கி, நடவடிக்கை எடுக்கிறது.

11. நீக்கப்பட்ட மாநில துணைப் பொதுச் செயலாளருக்குப் பதிலாக சகோ.கலீல் ரசூலும், மாநில செயலாளர்களுக்குப் பதிலாக கோவை ரஹ்மத்துல்லாஹ், ஹாஜா நூஹ், மேல்பட்டாம் பாக்கம் அப்துர் ரஸ்ஸாக், தவ்ஃபீக் ஆகியோரும், செயற்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த முடிவின்படி தேர்வு செய்யப்பட்டார்கள். இதை மாநிலச் செயற்குழு அங்கீகரித்தது.

12. மேலாண்மைக்குழு தலைவராக எம். ஷம்சுல்லுஹா ரஹ்மானீ அவர்களும் அதன் உறுப்பினர்கள் 1.எம்.எஸ்.சுலைமான் 2.அப்துற் ரஹீம் 3.பி.ஜைனுல் ஆபிதீன் 4.எஸ்.எஸ்.யூ.ஸைஃபுல்லாஹ் ஹாஜா 5.அன்வர் பாஷா ஆகியோரும் நியமிக்கப்பட்டனர். மேலாண்மைக்குழு அமைக்கப்பட்டதால் நிறுவனத்தலைவர் பதவி நீக்கப்பட்டது.