செல்போன் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டினால் உரிமம் ரத்து!

dinamani_25-6-2009செல்போன் பேசிக் கொண்டே வாகனத்தை ஓட்டுவோரின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கே. என். நேரு எச்சரிக்கை விடுத்தார்.

பேரவையில் துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்குப் பதில் அளித்தபோது அவர் மேலும் கூறியது:-

செல் பேசிக் கொண்டே பலர் வாகனங்களை ஓட்டுவதால் விபத்துகள் நடைபெறுவதாக உறுப்பினர்கள் தெரிவித்தனர். மோட்டார் வாகனச் சட்டத்தின்படி செல் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டுவோரின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கிறேன்.

தமிழகம் முதலிடம்:
இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கையில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.

மார்ச் 2009 வரை தமிழகத்தில் மொத்தம் 90.36 லட்சம் இரு சக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 44 லட்சத்துக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள், 12 லட்சத்துக்கும் மேற்பட்ட ஸ்கூட்டர்கள், 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மொபெட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மொத்த வாகன எண்ணிக்கையில் மகாராஷ்டிர மாநிலத்துக்கு அடுத்தபடியாக தமிழகம் உள்ளது. அதாவது, தமிழகத்தில் மொத்தம் 1 கோடியே 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன.
இழப்பீடு அதிகரிப்பு: போக்குவரத்துக் கழகங்கள் வழங்க வேண்டிய விபத்து இழப்பீட்டுத் தொகை 1991-92-ம் ஆண்டில் ரூ.16.03 கோடியாக இருந்தது; இது 2008-09-ம் ஆண்டில் ரூ.102.34 கோடியாக உயர்ந்துள்ளது.

எனவே அரசு பஸ்களால் ஏற்படும் விபத்துகளைக் குறைக்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து இல்லாமல் பஸ்களை இயக்கும் அரசு ஓட்டுநர்களுக்கு ரொக்கப் பரிசு உள்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்றார் நேரு.

தினமணி செய்தி (25-6-2009)