சென்னையில் நடைபெற்ற 12 வது மாநிலப் பொதுக்குழு – TNTJ வின் தேர்தல் நிலைபாடு என்ன ?

வரும் சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் இன்று காலை ( 26.03.11 ) சென்னை எழும்பூர் சிராஜ் மஹாலில் மாநில மேலாண்மைக்குழுத் தலைவர் ஷம்சுல்லுஹா தலைமையில் நடைபெற்றது.

முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரித்துத் தருவதாக தேர்தல் அறிக்கையில் அதிமுக வாக்களித்தால் அதிமுக கூட்டணியை ஆதரிப்பது என்று சேலத்தில் நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன் பின்னர் அதிமுக சார்பில் அதன் மூத்த தலைவர்கள் ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன், பொன்னையன், அன்வர் ராஜா, பொள்ளாச்சி ஜெயராமன் ஆகிய முக்கிய தலைவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைமை அலுவலகத்திற்கு மூன்று தடவை நேரில் வந்து ஆதரவு கேட்டனர். தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிக்க உறுதியளிப்போம் என்று சொன்னால் தவிர நாங்கள் ஆதரிக்க முடியாது என்று நாம் திட்டவட்டமாகச் சொன்னோம். இதன் பின்னர் பல தடவை பேச்சு வார்த்தை நடத்திய பின் தேர்தல் அறிக்கையில் சொல்வதாகவும் அதற்கான வாசகங்கள் எப்படி அமைய வேண்டும் என்று நம்மிடம் கேட்ட போது அந்த வாசகத்தை நாம் எழுதிக் கொடுத்தோம். கட்டாயம் தேர்தல் அறிக்கையில் சொல்வோம் என்று அவர்கள் உறுதி மொழி அளித்தாலும் தேர்தல் அறிக்கையைப் பார்க்காமல் நாங்கள் முடிவு சொல்ல முடியாது என்று கூறினோம்.

இதன் காரணமாகவே அதிமுக வின் தேர்தல் அறிக்கை வரும் வரை யாருக்கு ஆதரவு என்னும் முடிவை எடுக்காமல் தள்ளி வைத்தோம்.

ஆனால் அதிமுக தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு உரிய இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தித் தருவதாக ஒரு வார்த்தையும் இல்லை.

ஆனால் திமுக வின் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீட்டை அதிகரிப்பது பற்றி கூறப்பட்ட பின்பும் திமுக வின் தேர்தல் அறிக்கையை வரிக்கு வரி காப்பியடித்த ஜெயலலிதாவுக்கு முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்த பாராவை மட்டும் காப்பியடிக்கக் கூட மனமில்லை.

தி.மு.க வின் தேர்தல் அறிக்கையை காண இங்கே கிளிக் செய்யவும்

தேர்தல் பிரச்சாரத்தின் போது போகிற போக்கில் இது குறித்து பேசினால் அதை முஸ்லிம்கள் நம்ப மாட்டோம், மாறாக தேர்தல் அறிக்கையில் தான் கூற வேண்டும் என்று நாங்கள் கூறியதை ஒப்புக் கொண்ட அதிமுக முஸ்லிம் சமுதாயத்துக்கு மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டது.

பல மாதங்கள் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தல் அறிக்கையில் இதைச் சேர்ப்போம் எனக் கூறி, வாசகங்கள் எப்படி அமைய வேண்டும் என்பது உட்பட நம்மிடத்தில் எழுதி வாங்கிச் சென்று விட்டு, நம்மை நம்ப வைத்து ஏமாற்றிய அதிமுகவுக்கு தக்க பாடம் புகட்டுவது என்று மாநிலப் பொதுக்குழு தீர்மானிக்கின்றது.

முஸ்லிம்களுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்று நாம் வைத்த கோரிக்கையும் அதிமுக வால் உதாசீனம் செய்யப்பட்டுள்ளது.

திமுக 120 இடங்களில் 4 இடங்களை முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ளது. ஆனால் 160 இடங்களில் போட்டியிடும் அதிமுக மூன்று இடங்கள் மட்டும் முஸ்லிம்களுக்கு வழங்கி மற்றொரு துரோகத்தையும் செய்துள்ளது. எனவே வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வின் துரோகச் செயலுக்கு தக்க பாடம் புகட்டுவதற்காகவும் திமுக தேர்தல் அறிக்கையில் இட ஒதுக்கீடு குறித்து சொல்லி இருக்கிற காரணத்துக்காகவும் அதிமுகவுக்கு எதிராகவும் திமுகவுக்கு ஆதரவாகவும் வாக்களிப்பது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலப் பொதுக்குழு தீர்மானிக்கின்றது.