சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்தில் அதிகாரிகள் அலட்சியம்: ஆத்திரத்தில் அலுவலகத்தை அடித்து நொறுக்கிய பொது மக்கள்!

வழக்கமாக எந்த அரசு அலுவலகங்களிலும் பொது மக்களை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். பியூனில் ஆரம்பி்த்து அலுவகத்தின் உயர் அதிகாரி வரை ஏதோ ஜனாதிபதி மாதிரி தான் நடந்து கொள்வார்கள்.

அதிலும் மகா மட்டமான ஒரு துறை பாஸ்போர்ட் துறை.

இங்கு விண்ணப்பம் வாங்குவதில் ஆரம்பித்து அதை பூர்த்தி செய்து சமர்பிப்பது, டோக்கன் வாங்கிக் கொண்டு காத்திருப்பது, அவர்கள் கேட்கும் ஆவணங்களைக் காட்டி, கேள்விகளுக்கு பதில் தந்துவிட்டு வெளியே வரும் வரை தலைசுற்றிப் போகும்.

மேலே சொன்ன இந்த ஒரு பாரா விஷயம் நடந்து முடிய குறைந்தபட்சம் 4 நாட்களாவது ஆகும்.. சில நேரங்களில், 6 மாதம் கூட ஆகிவிடும்.

அதேநேரத்தில் புரோக்கர்கள் மூலம் போனால் எல்லாம் ஈசியாக நடக்கும். இப்போது புரோக்கர்கள் தொல்லை பெருமளவு குறைந்துவிட்டாலும் பாஸ்போர்ட் அலுவலகங்களில் மக்களை நடத்தும் விதம் மாறவே இல்லை.

இந்த அலுவலகத்திற்குள் நுழையவே ஏகப்பட்ட கெடுபிடிகள் உண்டு. இவ்வாறு வரும் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க எல்லா பாஸ்போர்ட் அலுவலகத்திலும் பிஆர்ஓ என்று ஒருவர் இருப்பார். ஆனால், அவர் அலுவலகத்துக்கு உள்ளே ஏசி ரூமில் உட்கார்ந்திருப்பார். இந்த அலுவலகத்துக்குள் நுழைவதே கஷ்டம் என்ற நிலையில் அவரை மக்கள் சந்தித்து எப்படி புகார் தர முடியும்?.

இதனால் இவர்களுக்கு வழக்கமாக எந்த வேலையும் இருப்பதில்லை. தினமும் அலுவலகம் வந்துபோய்விட்டு கத்தையாக சம்பளம் வாங்கும் அதிகாரிகள் தான் இந்த பிஆர்ஓக்கள். இவர்களது அதிகபட்ச வேலை, யாராவது உயர் அதிகாரி ஊருக்கு வந்தால் அவரை வரவேற்று பொகே கொடுப்பது, பிரஸ்மீட் நடத்துவது, வெளியுறவுத்துறை சார்பில் ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடந்தால் அதற்காக பத்திரிக்கைகளுக்கு இன்விடேசன் அனுப்புவதும், விழா நடக்கும்போது நிருபர்களுக்கு ஸ்னாக்ஸ் அரேஞ் செய்வது மட்டுமே.

இது போன்ற மட்டமான சர்வீசுக்கு சென்னை சாஸ்திரி பவனில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகமும் எந்தவிதத்திலும் விதிவிலக்கல்ல. அங்கு மக்களை மதிக்கவும் மாட்டார்கள், கேட்டால் பதிலும் சொல்ல மாட்டார்கள். வெளியுறவுத்துறையைச் சேர்ந்தவர்களாம்…அந்த பந்தாவுக்கு குறைச்சலே இருக்காது.

இங்கு ஊழியர்கள், அதிகாரிகளால் கேவலப்படுத்தப்பட்ட மக்கள் நேற்று பொறுமை இழந்து அலுவலகத்தையே அடித்து நொறுக்கினர்.

இந்த பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வருகிறார்கள். புதிதாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தவர்களும், ஏற்கனவே பாஸ்போர்ட் வாங்கியவர்கள் புதுப்பிப்பதற்கும் தினமும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வருவர்.

நேற்று அதிகாலை 3 மணியில் இருந்தே ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் பாஸ்போர்ட் அலுவலகத்தில் காத்துக் கிடந்தனர். கைக்குழந்தைகளுடன் பெண்கள் கியூவில் நின்றனர். வயதான முதியவர்கள் கூட காத்திருந்தனர்.

இந் நிலையில் காலை 11 மணியளவில் பாஸ்போர்ட் அலுவலக கம்ப்யூட்டர்கள் பழுதாகிவிட்டதால் அலுவல் எதுவும் நடக்காது என்றும், மாலை 4 மணிக்கு மேல் தான் பணி நடக்கும் என்றும் பியூன்கள், பாதுகாவலர்கள் மூலம் சொல்லி அனுப்பினர் அதிகாரிகள்.

கிட்டத்தட்ட 6 மணி நேரம் தண்ணீர் கூட குடிக்காமல் காத்து கிடந்த மக்கள் கொதித்துப் போயினர். பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்ட அவர்கள் சிலர் ஆவேசமாக அலுவலகத்துக்குள் நுழைந்து கம்ப்யூட்டர்களை இழுத்து கீழே போட்டு உடைத்தனர்.

இதையடுத்து பாஸ்போர்ட் அதிகாரிகள் ஓடி ஒழிந்ததோடு நுங்கம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தந்தனர்.

உதவி கமிஷனர் தலைமையில் விரைந்து வந்த போலீசார் மக்களை சமாதானப்படுத்தினர். ஆனால், போலீசாரோடு பொதுமக்கள் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த அலுவலகத்தில் பணம் கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கிறது என்றும், பணம் கொடுக்காவிட்டால் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லியோ, ஆவணங்களில் ஏதாவது குறையைச் சொல்லியோ நாட்கள் கணக்கில் அலையவிடுகிறார்கள் என்றும் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

முதலில் பிஆர்ஓக்களை பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு வெளியே ஒரு மேஜையைப் போட்டு மக்களோடு மக்களாக உட்கார வைத்தால் தான் மக்கள் தங்கள் குறைகளைச் சொல்லி அவற்றைத் தீர்த்துக் கொள்ள முடியும்.

உள்ளே இவர்களை சந்திக்கவே முடியாத தூரத்தில், பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு அந்தப் பக்கமாக ஏசி அறைகளில் உட்கார்ந்து கொண்டு பேப்பர் படிக்கும் இவர்களால் மக்கள் பணம் தான் வேஸ்ட்!.

-தட்ஸ் தமிழ்