சென்னையில் கூடிய TNTJ மாநிலச் செயற்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலச் செயற்குழு கூட்டம் நேற்று (06.06.2010 ஞாயிற்றுக் கிழமை) காலை 10.30 மணிக்கு சென்னை தி.நகர். சர்.பி.டி. தியாகராயர் மண்டபத்தில் கூடியது. இச்செயற்குழுவில் ஏகமனதாக பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

1. எதிர் வரும் ஜூலை 4ல் சென்னை தீவுத்திடல் நடைபெறவிருக்கும் மாபெரும் மாநாட்டை வெற்றி பெறச் செய்வதற்கு அனைத்து உறுப்பினர்களும் அயராது உழைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. தங்களது பகுதிகளில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் மத்திய அரசின் இடஒதுக்கீடு இன்றைய (நாளைய) நம் தேவை என்பதை விளக்கி அவர்களை சென்னை நோக்கி அணி திரள வைக்கும் பணியில் பம்பரமாய் சுழன்று பணியாற்றுமாறு இச் செயற்குழு பணிக்கிறது. முஹல்லாக்கள், பள்ளி நிர்வாகங்கள், முஸ்லிம் நிறுவனங்கள் மற்றும் பிற முஸ்ம் அமைப்புக்கள் ஆகியவற்றை அணுகி இம்மாநாட்டின் தேவையை வலியுறுத்திட இச் செயற்குழு வேண்டுகோள் வைக்கிறது. மேலும் ஜூலை 4 மாநாட்டில் பங்கேற்பதற்கு ஏற்ப முஸ்லிம் வணிக நிறுவனங்கள் விடுமுறை அளித்து தாங்களும் தங்களது ஊழியர்களும் அதிக எண்ணிக்கையில் சங்கமிக்க உதவுமாறு நிறுவனங்களின் உரிமையாளர்களை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

2. பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட குணங்குடி ஹனீபா உள்ளிட்ட சிறைக் கைதிகளை நீண்ட காலம் விசாரணை என்ற பெயரில் சிறையில் வைத்து அவர்களின் இளமையை அழித்ததற்கு கண்டனத்தை இச் செயற்குழு பதிவு செய்கிறது.

3. தற்போது நடைபெற்று வரும் மக்கள்தொகை கணக்கெடுப்பில் முஸ்லிம்கள் அனைவரின் எண்ணிக்கையும் விடுபட்டு விடாமல் இருப்பதற்கு விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை முஸ்லிம்கள் மத்தியில் நிகழ்த்துமாறு இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. மேலும் இடம் பெயர்ந்து வாழும் முஸ்லிம்களின் எண்ணிக்கையையும் ஒருங்கிணைத்து அவர்களின் மொத்த மக்கட்தொகையளவை வெளியிடுமாறு மத்திய அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
இதற்கென இந்திய வெளியுறவு அமைச்சகத்தையும் மற்றும் வெளிநாட்டு தூதரங்களையும் அணுகி ஒரு தனிப்பிரிவை ஏற்படுத்தி இடம் பெயர்ந்த இந்தியர்களின் மொத்த எண்ணிக்கையையும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளுமாறு இந்திய அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

4. பாபர் மசூதி இடிப்பில் பங்கேற்ற அத்வானி போன்றோர் மீது நடவடிக்கை எடுப்பதில் மென்மையான அணுகு முறையைக் கையாண்டு வரும் மத்திய காங்கிரஸ் அரசை இச்செயற்குழு கண்டிக்கிறது. அவர்களை தப்புவிக்க சட்டமும் துணை போவதைக் கண்டு இச் செயற்குழு தனது வருத்தத்தை பதிவு செய்கிறது

5. கோவில்களில் பணிபுரிவோரின் வாரிசுகளில் சிறப்பான மதிப்பெண் பெறும் 100 பேருக்கு லேப்டாப் கம்ப்யூட்டர் வழங்கப்படுகிறது. அதுபோல் உலமாக்கள் மற்றும் பள்ளிவாசல் ஊழியர்களின் பிள்ளைகளுக்கும் வழங்கிட இச்செயற்குழு அரசைக் கேட்டுக் கொள்கிறது.

6. மாவோயிஸ்ட் பிரச்சினைகள் மற்றும் அவ்வப்போது தலைதூக்கும் அனைத்து தீவிரவாத நடவடிக்கைகளையும் ஒடுக்கிட அவற்றை சரியாகக் கையாண்டிட மத்திய அரசை இச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

7. அடிக்கடி பாலஸ்தீனத்தில் முஸ்லிம்களைக் கொன்று குவித்து வரும் இஸ்ரேன் காட்டுமிராண்டித் தனத்தை வன்மையாகக் கண்டிப்பதோடு அதன் மீது பொருளாதாரத் தடையை ஏற்படுத்த உலக நாடுகளை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இந்தியாவில் வாழும் 20 கோடி முஸ்லிம்களின் உணர்வுகளை மதித்து இஸ்ரேலுடன் உள்ள உறவைத் துண்டிக்குமாறு மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

8. முஸ்லிம்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டில் நடந்த குளறுபடிகளைச் சரி செய்வதாக தமிழக அரசு முஸ்லிம் சமுதாயத்துக்கு கடந்த தேர்தலின்போது உறுதியளித்தனர். அதை நிறைவேற்ற எந்த முயற்சியும் எடுத்ததாகத் தெரியவில்லை. எனவே கொடுத்த வாக்கை நிறைவேற்றுமாறு தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

9. முஸ்லிம்களில் பிற்பட்டவர்களுக்கு 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டாலும் பிற்பட்ட முஸ்லிம்களும் மற்ற முஸ்லிம்களும் பொதுப் பட்டியலிலும் விண்ணப்பிக்க சட்டப்படி உரிமை இருந்தும் அதிகாரிகள் முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்து வருகின்றனர். பொதுப் பட்டியலில் உள்ள 3 சத இடங்களிலும் முஸ்லிம்கள் போட்டியிடலாம் என்று தெளிவான ஆணை பிறப்பிக்குமாறு முதல்வரை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

10. சிறுபான்மை மக்களுக்கு மத்திய அரசு வழங்கும் கல்வி உதவி, கல்விக் கடன் ஆகியவை சென்ற ஆண்டு அதிகாரிகளின் ஆணவப் போக்காலும் கல்வி நிலையங்களின் அலட்சியப் போக்காலும் பெரும்பாலான முஸ்லிம்களுக்கு கிடைக்கவில்லை. அதுபோல் இந்த ஆண்டு நடக்காமல் இருக்க தெளிவான வழிகாட்டுதலை வழங்கி அலைக்கழிக்காமல் முஸ்லிம் சமுதாயம் பயன் பெற தெளிவான வழிகாட்டுதலை அறிவிக்குமாறு தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

இந்த செய்தி தமிழ் தெலுங்கு ஆங்கில பத்திரிக்கைகளில் வெளியானது: