சீனா உயிகுர் கலவரம்: பள்ளிவாசலில் தொழுகைக்கு தடை!

china_mosqஉயிகுர்-ஹான் மக்களுக்கு இடையே நடந்த மோதலில் அல்-கொய்தா அமைப்புக்கு பங்கு இருப்பதாக சீன அரசு குற்றம்சாட்டியுள்ளது. மேலும், அப்பகுதியில் தொழுகை நடந்த சீனா தடை விதித்துள்ளது. சீனாவின் வட மேற்கில் உள்ள உரும்கி என்ற பகுதியில் முஸ்லீம்களான உயிகுர் இனமக்கள் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 1960 வரை சீனாவிடம் இருந்து கொஞ்சம் ஒதுங்கி இருந்த இந்த பகுதி அதன் பின்னர் சீனாவின் வசம் சென்றது. எண்ணெய் வளம் நிறைந்த இந்த பகுதியில் தொழிற்சாலைகளை அமைக்கிறேன், வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்துகிறேன் என கூறி கொண்டு சீனா, ஹான் இன குடிமக்களை அப்பகுதியில் குடியமர்த்த துவக்கியது. 50 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் வெறும் 10 சதவீதத்துக்கும் குறைவாக இருந்த ஹன் மக்கள் தொகை தற்போது அங்கு பாதிக்கும் அதிகமாகிவிட்டது. இதையடுத்து உயிகுர் மக்கள் சிறுபான்மையினர் ஆகிவிட்டனர். அவர்களின் மத சுதந்திரத்தை சீனர்கள் கட்டுப்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உயிகுர், ஹான் இனத்தவர்களுக்கு இடையில் கடந்த 5ம் தேதி நடந்த கலவரத்தில் சுமார் 156 பேர் பலியானதாக சீன அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இந்த உயிர் இழப்பு 800க்கு மேலிருக்கும் என தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் இதுவரை 1,134 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சீனா அப்பகுதியில் ராணுவத்தை குவித்துள்ளது. இந்நிலையில் 9 உறுப்பினர்களை கொண்ட சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ கூட்டம் நேற்று நடந்தது. அப்போது உரும்கி கலவரம் குறித்து பேசப்பட்டது. அப்போது கட்சியின் தலைவரும், சீன பிரதமருமான ஹூ ஜின்டோவும் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில், உரும்கி கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டை பிரிக்க நினைப்பவர்கள் கடும் தண்டனைக்கு ஆளாவார்கள். ஜிங்ஜியாங் நகரில் முழு அமைதி கொண்டு வரப்படும் உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சீன வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் கின் கேங் கூறுகையில், இந்த கலவரத்தில் ஈராக் மற்றும் அல் கொய்தா தீவிரவாத அமைப்புகளுக்கு தொடர்பு உள்ளது. இதற்கான ஆதாரங்கள் சீன அரசிடம் உள்ளது என்றார். தொழுகைக்கு தடை… இந்த கலவரத்தை தொடர்ந்து சீன அரசு ஜின்ஜியாங் மாகாணத்தில் தொழுகை மேற்கொள்ள தடைவிதித்துள்ளது. அனைத்து மசூதிகளின் வாசலில் உள்ள கேட்களில், வீட்டில் தொழுகை செய்து கொள்ளுங்கள் என்ற வாசகத்தை ஒட்டியுள்ளது. மேலும், மசூதிகளை மூடிவிட்டு அதை சுற்றிலும் இயந்திர துப்பாக்கிகளை கொண்ட ராணுவ வீரர்களை நிறுத்தியுள்ளது. ஜிங்ஜியாங் மாகாணத்தில் வெளிநாட்டினர் நுழைய அனுமதி மறுத்துள்ளது. தற்போது அங்கிருப்பவர்களையும் உடனே நகரை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது. அப்பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்கவும், மக்களின் நன்மைக்காகவும் இந்த தடை கொண்டு வந்துள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

-அஜ்மல்