சவூதியில் வேலை செய்யும் வெளிநாட்டவர்களுக்கு “ஃபேமிலி விசா”

saudiசவூதி அரேபியாவில் வேலை செய்யும் வெளிநாட்டவர்கள், குறிப்பாக இந்தியர்களுள், வெகு சிலரே தங்கள் மனைவி-மக்களோடு தங்கி பணிபுரிந்து வருகின்றனர். மற்ற பெரும்பாலோர் தங்கள் குடும்பத்தை தாயகத்திலிருந்து பிரிந்தே, சவூதியில் பணிபுரிந்து வருகின்றனர். மிகக்குறைந்த சம்பளத்தில் கடுமையான வேலைகளைச் செய்யும் அதே நேரத்தில், தங்கள் இளமையையும் தொலைக்க நேரிடுகின்றது. அவர்களும், தங்கள் குடும்பத்தை சவூதிக்கு கொண்டு வர முடியாததற்கு குறைந்த சம்பளம், அரசாங்கம் விசா தராமை போன்ற பல காரணங்கள் உள்ளன.

சவூதி அரேபியாவில் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையில் (இக்காமா) அவர்களின் செய்யும் தொழிலும் (புரஃபஷன்) குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் நிறைய பேர்களுக்கு, அவர்கள் செய்யும் வேலைக்கும், இக்காமா குறிப்பிடப்பட்டிருக்கும் தொழிலுக்கும் சம்பந்தமே இருக்காது. ஆனால், தங்கள் மனைவி-மக்களை ஃபேமிலி விசாவில் அழைத்து வருவதற்கு, சவூதி வெளியுறவு அமைச்சகம், “மருத்துவர், பொறியியலாளர், டெக்னீஷியன், மேலாளர்கள்” போன்ற புரஃபஷன் உள்ளவர்களுக்கு இத்தனை நாட்கள் விசா வழங்கி வந்துள்ளது. பலரும், நல்ல வேலையில், நல்ல சம்பாத்தியத்தில், நல்ல படிப்பு படித்திருந்தாலும், அவர்களது இக்காமாவில் புரஃபஷன் தவறாக இருந்ததால், தங்கள் குடும்பத்தோடு சேர்ந்து தங்கி வேலை புரிய முடியாமல் இருந்து வந்தது.

தற்போது, நல்ல சம்பளத்தில் நல்ல வேலையில் உள்ளவர்களின் புரஃபஷன் என்னவாக இருந்தாலும், அவர்களுக்கு ஃபேமிலி விசா வழங்க சவூதி சவூதி அரசு முன்வந்துள்ளது. இதன் மூலம், சுமார் 70 லட்சம் வெளிநாட்டவர்கள் பயன் பெறுவார்கள் என்று, “அல்-யவ்ம்” அரபு பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. இனி ஃபேமிலி விசாவானது அவரவர்கள் வாங்கும் சம்பளத்திற்கேற்ப நிர்ணயிக்கப்பட உள்ளது. இதற்கான முன்னறிவிப்பாக, ஓரிரு வாரங்களுக்கு முன்னதாக, மூன்று நாட்களுக்கு மட்டும் ரியாதில் விண்ணப்பித்த அனைவருக்கு ஃபேமிலி விசா வழங்கப்பட்டது. தற்போது, அதுவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல், அரசின் அறிவிப்பிற்குப் பிறகு, சம்பள அடிப்படையில் மட்டும் ஃபேமிலி விசா வழங்கப்படும் என்றும் அந்த பத்திரிகை கூறியுள்ளது. இம்மாதிரியாக விசா வழங்குவது எந்த தேதியில் அமுலுக்கு வரும் என்பதை பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். முன்னதாகவே, தங்களது பாஸ்போர்டில் தங்களது மனைவியின் பெயரைச் சேர்க்கவும் (Spouse Name), இந்தியன் எம்பஸியை அணுகி வருகின்றனர்.

அதே வேளையில், குறிப்பிட்ட நாட்கள் மட்டும் தங்கும் வகையில் வழங்கப்படும் “விசிட் விசா”, விண்ணப்பிக்கும் அனைவருக்கும், புரஃபஷனை கணக்கில் கொள்ளமால், கடந்த மூன்று வாரங்களாக ரியாத் வெளியுறவுத் துறை அலுவலகத்தில் வழங்கபட்டு வருவது குறிப்பிடத் தக்கது. தற்போது ஓட்டுநர், வீட்டு வேலை செய்பவர்களுக்கு விசிட் விசா வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது என்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

அரசின் இந்த முடிவிற்கு பலரும் நன்றி தெரிவித்துள்ள இவ்வேளையில், தற்போது குடும்பத்தோடு சவூதியில் பணிபுரிபவர்களில் சிலர், வீட்டு வாடகையும் இதன் மூலம் துபாய் போல அதிகரிக்கும் என அச்சம் தெரிவித்துள்ளனர்.

செய்தி: ரியாதிலிருந்து ஃபெய்ஸல்