குவைத்திலேயே முதன்
முறையாக குவைத் வாழ் தமிழ் பேசும் மக்களுக்காகவே குவைத் தஸ்மா டீச்சர் சொசைட்டியில் 27-2-09 அன்று மருத்துவ அணி செயலாளர் ஜின்னா அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் மருத்துவ விழிப்புணர்வு முகாம் சரியாக மாலை 5:30 மணிக்கு குவைத் மண்டல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் ராஜா அஹமத் தொடங்கி வைக்க, அதனைத் தொடர்ந்து டாக்டர் நூருல் அமீன் முன்னுரையாற்றியதோடு முதல் அமர்வு 5.50 மணிக்கு முடித்து கொண்டு ஐவேளைக் தொழுகை கடமைகளில் ஒன்றான மக்ரிப் தொழுகையை முடித்து விட்டு இரண்டாம் அமர்வு 6.20 மணிக்கு துவங்கியது.
முதன் முதலாக டாக்டர் மனோகர் (கோவை) கண் சிறப்பு மருத்துவர் கண் பற்றிய அடிப்படை விசயங்களைக் கூறி கிட்ட, தூரப் பார்வை, வெள்ளையெழுத்து, கண்புரை, கண்ணில் அடிக்கடி நீர் வடிவது, கண் எரிச்சல், மாலைக்கண், மாறுகண், கண்ணில் நீர் அழுத்த நோய் ஆகியன வருவதற்கான காரண காரியங்களையும் அவற்றை தடுப்பதற்குரிய வழிமுறைகளையும் எளிய தமிழில் தெளிவாக விவரித்து கூறினார்.
அடுத்ததாக குழந்தை நல சிறப்பு மருத்துவர் டாக்டர் ஜகரிய்யா (விழுப்புரம்) அவர்கள் குழந்தைகள் அடிக்கடி அழுவதற்கான காரணங்களையும் குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் மலச்சிக்கல், சிறுநீர் அடைப்பு பிரச்சினை ஆகியவற்றை தெளிவாக விவரித்துப் பேசினார்கள்.
அதற்கடுத்தப்படியாக இதய மருத்துவ நிபுணர் டாக்டர் நளினி அவர்கள் ஹார்ட் அட்டாக், பக்கவாதம், மூளையில் கட்டி ஆகியவை வருவதற்கான காரணங்களையும் அவற்றை வராமல் தடுக்கும் முறைகளைப் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்கள்.
அதனைத் தொடர்ந்து உடலியக்க மருத்துவர் டாக்டர் ரவிக்குமார் (கோவை) உடலை கட்டுக்கோப்பாகவும், பளபளப்பாகவும், ஆரோக்கியமாக வைத்திருப்பதற்குண்டான எளிய 25 வழிமுறைகளையும் மிகத் தெளிவாக எடுத்துரைத்தார்கள்.
அதற்கடுத்தபடியாக பொது நல மருத்துவர் டாக்டர் நிஜாமுத்தீன் (இலங்கை) அவர்கள் வளைகுடா வாழ் தமிழ் மக்களின் குறைந்த சம்பளத்திற்கான கடின உழைப்புகளைப் பற்றி பேசியும் அவர்களுக்கு ஏதேனும் நோய்நொடிகள் வந்து விட்டால் அவர்கள் செல்லும் அரசு, தனியார் மருத்துவமனையிலுள்ள அவலங்களை விவரித்துக் கூறி காய்ச்சல், வயிற்றுப்போக்கு, இருமல், உடல்வலி, சிறுநீரகக்கல் ஆகியவற்றைப் பற்றி மிகவும் சிறப்பான முறையில் எடுத்துரைத்தார்கள்.
இறுதியாக பல் மருத்துவர் டாக்டர் நூருல் அமீன் (மாயவரம்) பல் வலி, பல் சொத்தை, பல் தேய்மானம், ஈறுவலி, பல்லில் இரத்தக் கசிவு (பல் கேன்சர்) அதனால் ஏற்படும் இதர நோய்களைப் பற்றியும் விரிவாகவும், விளக்கமாகவும் எடுத்துரைத்தார்கள்.
இம்மருத்துவ கருத்தரங்கில் சிறப்பம்சம் என்னவெனில் ஒவ்வொரு டாக்டரும் அவரவருக்குரிய துறை சம்பந்தப்பட்டவற்றை புரஜெக்டர் (திரையில்) மூலம் காண்பிக்கப்பட்டது.
அதன் பின்பு வந்திருந்தவர்களின் கேள்விகளுக்கு பதிலும் அளிக்கபட்ட்டது. இந்நிகழ்ச்சிக்கு ஆண்கள் பெண்கள் உட்பட 300 க்கும் அதிகமானோர் கலந்து பயனடைந்தனர். வந்திருந்த டாக்டர்கள் அனைவருக்கும் நினைவுப்பரிசும், திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள் என்ற நூலும் வழங்கப்பட்டது.
மேலும் அல் சாயா ஃபுட் கம்பெனி(சாதியா) நிறுவனம் சார்பாக வந்திருந்தவர்கள் அனைவருக்கும் தேநீரும், பப்ஸும் வழங்கப்பட்டது. மேலும் சுப்ரீம் கார்கோ நிறுவனம் சார்பாக அனைவருக்கும் புகை,மது,போதை ஒழிப்பு,மூடநம்பிக்கை ஆகியன அடங்கிய டீ.வீ.டியும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தொண்டரணியின் செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
இறுதியாக முகம்மது ஸமீர் அவர்களின் நன்றியுரையுடன் கருத்தரங்கம் சரியாக இரவு 9.50 மணிக்கு இனிதே நிறைவுற்றது.