கும்பகோணம் பாதியார் கலந்துரையாடல்: பாதிரியாரின் விசித்திரமான ஆபத்தான கருத்து !

கும்பகோணத்தில் கடந்த 14.12.10 செவ்வாய்க்கிழமை அன்று பாதிரியார்கள் மத்தியில் “உலக அமைதிக்கு இஸ்லாம் கூறும் தீர்வு என்ன?” அல்தாஃபி ஆற்றிய உரையையும், அல்தாஃபி அவர்களின் உரையைத் தொடர்ந்து, குழுமியிருந்த பாதிரியார்கள் இஸ்லாம் குறித்த தங்களது குற்றச்சாட்டுக்களையும் ஆட்சேபணைகளையும் கேள்விக்கணைகளாகத் தொடுத்தனர். அந்தக் கேள்விகளில் சிலவற்றை சென்ற கட்டுரையில் பார்த்தோம். தொடர்ந்து பாதிரிமார்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அல்தாஃபி அவர்கள் அளித்த பதிலையும் உங்கள் பார்வைக்குத் தருகின்றோம்.

முஸ்லிம்கள் தனித்து விடப்படுவதற்குக் காரணம்:

கேள்வி:
உங்களது பள்ளிவாசல்களுக்குள் நுழைந்தாலே அரபு நாட்டில் நுழைந்தது போல் உள்ளது. முஸ்லிம்கள் தனித்து விடப்படுவதற்கும், அவர்கள் பிற மக்களோடு ஒன்றாமல் தனித்து நிற்பதற்கும் அரபு மொழியில் உங்களது வணக்க வழிபாடுகள் அமந்திருப்பது தான் காரணம். எனவே அரபு மொழி வழிபாட்டை நிறுத்திவிட்டு தமிழ் மொழி வழிபாட்டிற்கு வந்தாலேயே முஸ்லிம்கள் தனித்து பிற மதத்தினரிடத்திலிருந்து அந்நியோனியப்பட்டு நிற்பது மறைந்து விடும் என்று நாங்கள் கருதுகின்றோம். அதற்கு தங்களின் பதில் என்ன?

பதில்:
முஸ்லிம்கள் அரபு மொழியில் தங்களது வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்வதற்கு காரணம் அரபு மொழி தான் இந்த உலகத்திலேயே சிறந்த மொழி என்பதற்காக அல்ல. மாறாக அனைவரும் வணக்கவழிபாடுகள் விஷயத்தில் வேற்றுமையின்றி ஒரே யூனிஃபார்மாக வணக்கவழிபாடுகளை நிறைவேற்றுவதற்காகத் தான் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

”எந்த ஒரு அரபி மொழி பேசாதவரையும் விட, அரபி மொழி பேசுபவர் சிறந்தவரல்ல” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்களது இறுதிப் பேருரையில் குறிப்பிட்டுள்ளார்கள். மொழிவெறியை ஊட்டுவதற்காக இந்த ஏற்பாட்டை இஸ்லாம் செய்திருக்குமேயானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மொழிக்கென்று எந்தச் சிறப்புமில்லை என்று பிரகடனம் செய்திருக்க மாட்டார்கள்.

நமது நாட்டிலும் கூட மொழியைத் தாண்டி ஒரு யூனிஃபார்முக்காக மாற்றுமொழியில் உள்ள விஷயங்களை நாம் ஏற்றுக் கொண்டிருக்கின்றோம். ஏன் உங்களது தாய்மொழியை விட்டுவிட்டு இந்த மொழியில் இதைச் செய்கின்ரீர்கள் என்று யாரேனும் கேட்டால் தேச ஒற்றுமைக்காக நாங்கள் இந்த மொழியை ஏற்றுக் கொண்டுள்ளோம் என்று நாமே பதில் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

உதரணத்திற்கு, வங்காள மொழியில் உள்ள “ஜனகனமன” என்ர பாடலை நாட்டின் ஒற்றுமைக்காக மாற்றுமொழி என்றும் பாராமல் ஏற்றுக்கொண்டு தமிழ்நாட்டில் உள்ளவர்கள் மட்டுமில்லாமல் இந்திய தேசத்திலுள்ள அனைத்து மொழி பேசக்கூடியவர்களும் வங்காள மொழியில் நாட்டுப்பண் பாடுகின்றார்கள். ஏன் உங்களது தாய்மொழியை விட்டுவிட்டு வங்காள மொழியில் நாட்டுப்பண் பாடுகின்றீர்கள். நீங்கள் வங்காளமொழியில் நாட்டுப்பண் பாடும் போது மேற்குவங்க தேசத்திற்குள் நுழைந்தது போன்று நாங்கள் உணர்கிண்றோம் என்று எவரும் குற்றச்சாட்டு வைப்பதில்லை.

மேலும், இந்த நாட்டுப்பண் நம்மை பிறரிடத்திலிருந்து அந்நியப்படுத்துகிறது என்றும் எவரும் சொல்வதில்லை.

எப்படி ஒரு தேசத்தின் ஒற்றுமைக்காக அனைத்து மொழியும் பேச்சக்கூடிய ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட மொழியை ஏற்றுக் கொள்கின்றார்களோ, அதைப் போல இஸ்லாம் என்பது உலகளாவிய மார்க்கம். ஒட்டுமொத்த உலகமும் ஒன்றாக சேர்ந்து வணக்கவழிபாடுகளை நடத்தும் போது ஒரே யூனிஃபார்மாக அது இருக்க வேண்டும் என்பதற்காக அவற்றை அரபு மொழியில் அமைத்துள்ளது. அதே நேரம் இறைவனிடத்தில் பிரார்த்தனை புரிவதாகட்டும், பள்ளிவாசல்களில் நடைபெறும் வெள்ளிக்கிழமை பிரசங்கங்களாகட்டும் இவைகளெல்லாம் தமிழில் தான் நடைபெறுகின்றது. அதாவது அவரவர் தாய்மொழியில் தான் இவற்றை செய்து கொள்கின்றனர். இதற்கு இஸ்லாத்தில் எந்த விதத் தடையுமில்லை என்பதை தாங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்திய ராணுவத்தில் கூட பயிற்சியின் போது “லெஃப்ட் – ரைட்” என்று ஆங்கிலத்தில் தான் சொல்கின்றனர். அதை இந்தியிலோ, அல்லது தமிழிலோ அவரவரது தாய்மொழியிலோ சொல்வதில்லை. இது ஒரு யூனிஃபார்முக்காகத் தான் செய்யப்படுகின்றது. அதைப் போலத் தான் அரபு மொழி விஷயத்தில் இஸ்லாத்தின் நிலைபாடு என்பதை தங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கிறிஸ்த்தவ தீவிரவாதத்தை வனமையாகக் கண்டிக்கின்றோம்:

நீங்கள் கிறிஸ்த்தவர்கள் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டினீர்கள். அத்தைகைய தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எங்களது மதத் தலைமை அதனை வன்மையாகக் கண்டித்துள்ளது. அவர்களது அயோக்கியத்தனத்தை நாங்கள் அங்கீகரிக்கவில்லை. அதைக் கண்டிக்கின்றோம் என்று ஒரு பாதிரியார் தனது கருத்தினை அங்கு பதிவு செய்தார்.

நங்கள் இப்போது தான் முதலில் கேள்விப்படுகின்றோம்:

அதை வரவேற்று பேசிய அல்தாஃபி அவர்கள், கிறிஸ்த்தவர்கள் செய்யக் கூடிய தீவிரவாதத்தை கண்டிப்பதை நாங்கள் இப்போது தான் முதலில் கேள்விப்படுகின்றோம் . பகிரங்கமாக இதைக் கண்டிக்காததிலிருந்து இவ்வளவு நாள் இங்கே இருக்கக்கூடிய நீங்களும் இத்தகைய பயங்கரவாதச் செயல்களை ஆதரிக்கின்றீர்கள் என்று தான் நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம். இப்போது இது தவறு தான் என்று நீங்கள் சொன்னதிலிருந்து தான் இதில் உங்களுக்கு உடன்பாடில்லை என்பதை விளங்கிக் கொண்டோம். ஆனால் உங்களது மதத் தலைமை இதைக் கண்டிக்கின்றது என்று சொன்னீர்கள்.

ஆனால், முஸ்லிம் நாடுகள் மீது போர் தொடுக்கும் போது ”இது இன்னுமொரு சிலுவைப்போர்” என்று முன்னால் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் பிரகடனம் செய்த போது இங்கிருந்த எவரும் அதைக் கண்டிக்கவில்லை. எந்த மதத் தலைமையும் அவருக்கு எதிராகக் குரல் எழுப்பவில்லை என்பதையும் இந்த நேரத்தில் பதிவு செய்து கொள்கின்றோம். தற்போது நீங்கள் கூறிய வார்த்தை எங்களுக்கு ஆறுதலாக உள்ளது என்று அல்தாஃபி கூறினார்.

பெண்களுக்குக் கல்வி வழங்காதது ஏன்?

கேள்வி:
பெண்களுக்கு உங்களது மார்க்கத்தில் கல்வி வழங்கப்படுவதில்லை ஏன்?

பதில்:
எங்களது சமுதாயத்திற்கு இந்த சமூகத்தில் சரியான அளவு இடஒதுக்கீடு வழங்கப்படாததன் காரணமாகவும், அதே நேரத்தில் ஆங்கிலேயர்களை எதிர்க்கின்றோம் என்ற பெயரில் எங்களது முப்பாட்டன்மார்கள் ஆங்கில வழிக்கல்வியை துறந்ததன் விளவாகவும் ஆண்களே கல்வியறிவு பெறாதவர்களாக இருக்கும் நிலையில், எப்படி பெண்களுக்குக் கல்வி புகட்டுவது? என்பது தான் எங்களது நிலை. அதே நேரத்தில் இது குறித்த விழிப்புணர்வுகளை எங்களது பிரச்சாரத்தின் வாயிலாக நாங்கள் ஏற்படுத்தி வருகின்றோம்.

பலதாரமணம் ஏன்?
கேள்வி:
பலதாரமணத்தை இஸ்லாம் ஆதரிப்பது ஏன்?

பதில்:
ஒவ்வொருவரும் வரையரையின்றி திருமணம் செய்து கொண்டிருந்த கால கட்டத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை ஒருவர் செய்வதாக இருந்தால் அதற்கு எண்ணற்ற நிபந்தனைகளைப் பிறப்பித்து இஸ்லாம் அதை நான்கு திருமணத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற கட்டளையை பிறப்பித்து அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. அதே நேரத்தில் பைபிளிலும் கூட தாவீது ராஜா பல பெண்களை மணமுடித்ததாக உள்ளது என்று அல்தாஃபி கூறியவுடன் அருகிலிருந்த பாதிரியார் அது அப்படி அல்ல, ஒருவனுக்கு ஒருத்தி என்பது தான் கிறிஸ்தவக் கோட்பாடு. மணமுடிப்பதாக இருந்தால் ஒரே ஒரு பெண்ணைத் தான் மணமுடிக்க வேண்டும். அதே நேரத்தில் வைப்பாட்டியாக எத்தனை பெண்களையும் வைத்துக் கொள்ளலாம். தாவீது ராஜாவிற்கு இருந்தது மனைவியில்லை என்ற ஒரு விசித்திரமான, ஆபத்தான கருத்தைப் பதிவு செய்தார்.
(அத்துடன் நேரம் முடிந்து விட்டதால் இதற்குப் பதிலளிக்க முடியாமல் போய்விட்டது.)

கேள்வி பதில் நிகழ்ச்சிக்கு பிறகு பாதிரிமார்களைத் தனியாக சந்தித்து இது போன்ற ஒரு கலந்துரையாடலை நாங்கள் ஏற்பாடு செய்கின்றோம். அதில் தற்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 40பாதிரிமார்களும் கலந்து கொள்ளுங்கள். அந்த நிகழ்ச்சியில் கிறிஸ்த்தவ மார்க்கம் குறித்த எங்களது இஸ்லாமிய சகோதரர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் என்று அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அடிப்படையில் கடந்த 04.01.11 செவ்வாய் அன்று நாம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அவர்களைச் சார்ந்த பாதிரியார்களும் பாதிரியார்களாக பயிற்சி எடுப்பவர்களுமாக 27 நபர்கள் கலந்து கொண்டனர்.