குமரியில் நடந்தேறிய காவி பயங்கரவாதம்

விரைந்து வாருங்கள்! குமரி மாவட்டத்தில் ஒரு குஜராத். மிடாலத்தில் வீடுகள், கடைகள் பற்றி எரிகின்றன, மக்கள் உடுத்த உடையின்றி ரோட்டில் கிடக்கிறார்கள், விரைந்து வாருங்கள்! என இரவிபுதூர்கடை டி.என்.டிஜே கிளை நிர்வாகி சிராஜ் நமக்கு தகவல் தர, அங்கு விரைந்தோம்.

அது கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் கடற்கரை பகுதிகளில் ஒன்றான மிடாலம் எனும் உதய மார்த்தாண்டம்;. அங்கு சிறிதளவில் முஸ்லிம்களும் இந்துக்களும் வசித்து வருகின்றனர். ஊருக்குள் நுழையுமுன் சாலை முழுவதும் சாம்பலாக கிடக்க, விசாரித்ததில் மணக்குடி எனும் அரசு பேருந்து எரிக்கப்பட்ட விபரம் கிடைத்தது. பஸ்ஸிலிருந்த பயணிகளின் உடமைகள் சூறையாடப்பட்டு அவர்கள் ஓட ஓட விரட்டப்பட்ட செய்தியையும் பார்த்தவர்கள் நம்மிடம் சொன்னார்கள். ஊர் முழுவதும் வஜ்ரா வாகனங்கள் உட்பட ஏராளமான போலீஸ் வாகனங்கள் கண்ணில்பட்டது. போலீஸ் அணிவகுப்பு நடத்தப்பட்டு அதிகாரிகள் அவர்களுக்கு தகவல் பரிமாறிக் கொண்டிருந்தனர்.

ஊருக்குள் சென்றதும் முதலில் நம் பார்வையில் பட்டது ரேசன்கடை. மூட்டை மூட்டையாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த அரிசி மூடைகள், எண்ணெய் பேரல்கள் என அனைத்தும் தீவைக்கப்பட்டு ஆங்காங்கே சிதறி கிடந்தன. இங்கிருந்து தான் மண்ணெண்ணெய் திருடப்பட்டு வீடுகள், கடைகள் கொளுத்தப்பட்டன என நமக்கு தகவல் கிடைத்தது. புகையும் சாம்பலுமாக காட்சியளித்த ஒரு வீட்டுக்கு சென்றோம். வீட்டிலிருந்த ஃபிரிட்ஜ், ஃபேன், கிரைண்டர் உட்பட அனைத்தும் தீக்கிரையாக்கப்பட்டிருந்தது. சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வீசப்பட்டிருக்க வேண்டும். அது ஒரு கிறிஸ்தவ மீனவரின் வீடு. வீட்டில் எந்தவொரு பொருட்களும் மிச்சமின்றி சுவர்கள் வெடித்து விழும் நிலையில் இருந்தது. குழந்தைகளின் சர்டிபிகேட், பாட புத்தகம், உடைகள் அனைத்தும் கொளுத்தப்பட்டு விட்டனவே! எங்களுக்கு மாற்று உடை கூட இல்லையே என ஒரு பெண்மணி கதறிக் கொண்டிருந்தார்.

சம்பவம் நடந்ததெப்படி என்ற விசாரணையில் இறங்கினோம்.

விநாயகர் சிலையை கடலில் கரைப்பதற்காக ஊர்வலம் வந்தவர்கள் வழக்கத்திற்கு மாறாக காவல்துறை அனுமதி கொடுத்த பாதையில் செல்லாமல் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் வசிக்கும் பகுதியில் செல்ல திட்டமிட்டனர். இதையறிந்த மீனவர்கள் ஊருக்குள் வரவேண்டாம், வேறு வழியில் செல்லுங்கள் எனக் கூற ஊருக்கு மேல்பகுதியில் போலீசார் சமரச பேச்சில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் ஏற்கனவே திட்டம் தீட்டி காத்திருந்த 50க்கும் மேற்பட்ட ஒரு கும்பல் ஆட்டோக்கள், பைக்குகளில் ஊரின் கீழ்ப்பகுதியிலிருந்து ஊருக்குள் பெட்ரோல், வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களுடன் புகுந்து கிறிஸ்தவ, முஸ்லிம் வீடுகளை கொள்ளையடித்து விட்டு தீக்கிரையாக்கி இருக்கின்றன.

அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த மணக்குடி எனும் பேருந்தை நிறுத்தி அதிலிருந்த பயணிகளின் நகைகளை கொள்ளையடித்து விட்டு அவர்களை கடுமையாக தாக்கி துரத்தியடித்தனர். மாஹீன் என்ற ஒரு முஸ்லிமுக்கு சொந்தமான ஆட்டோவை நிறுத்தி அதை பெட்ரோல் ஊற்றி தீவைத்தனர். அதை ஓட்டி வந்த முஸ்லிம் டிரைவர் உயிருக்கு பயந்து ஒரு முஸ்லிம் ஹோட்டலுக்குள் ஓட அங்கு புகுந்த கும்பல் கடையிலிருந்த பணத்தை திருடிவிட்டு அதன் உரிமையாளரை தாக்கிவிட்டு ஹோட்டலுக்கு தீயிட்டது. அருகருகே இருந்த கிறிஸ்தவ, முஸ்லிம்களின் அனைத்து கடைகளும் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. ஒரு கிறிஸ்தவர் நடத்தி வந்த நகைக்கடன் வங்கியின் லாக்கர் உடைக்கப்பட்டு அதிலிருந்த லட்சக்கணக்கான பணமும் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டன. பணத்தை அள்ளி தெருவிலும் வீசியுள்ளனர். அருகே நின்று கொண்டிருந்த இரண்டு போலீசார் உயிருக்கு பயந்து ஓட்டமெடுத்ததாக பார்த்தவர்கள் குறிப்பிட்டனர். போலீஸ் மட்டுமல்ல இந்த வெறியாட்டத்தைக் கண்டவர்கள் அனைவரும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓட்டமெடுத்தனர். இதை அறிந்தவர்கள் கூட ஊருக்கள் வந்து தங்கள் உடமைகளை பாதுகாக்க முனைந்த போது அங்கு சென்றால் உயிருக்கு உத்தவாதம் இல்லை எனக் கூறி உறவினர்கள் தடுத்து விட்டனர்.

அன்றைய தினம் முதலமைச்சர் கலைஞர் நாகர்கோவிலுக்கு வருகை தந்ததால் பாதுகாப்பிற்காக மாவட்டத்தின் அனைத்து போலீசாரும் சென்று விட்டதால் அப்பகுதியில் பாதுகாப்பிற்கு ஆளில்லை என்பதும் இந்த கொள்ளை நடக்க ஒரு காரணம்.

சம்பவங்களை பார்த்த போது இது எதேச்சையாக நிகழ்ந்ததல்ல, திட்டமிடப்பட்ட செயல் என்பது தெளிவாக விளங்கியது. வன்முறையாளர்கள் வெடிகுண்டுகள், பெட்ரோல் போன்றவைகளை கொண்டு வந்துள்ளனர். வெடிச்சத்தம் கேட்டதை மக்களும் உறுதி செய்தனர். மேலும் வரிசையாக இருக்கும் வீடுகளில் இந்துக்களின் வீடுகளுக்குள் இந்த கொள்ளையர்கள் நுழையவில்லை. கிறிஸ்தவர்களின் வீடுகள் மற்றும் முஸ்லிம்களின் கடைகள், ஆட்டோக்களை மட்டுமே அறிந்து, குறிவைத்து சேதப்படுத்தியுள்ளனர். பூட்டி இருந்த ஒரு வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த லாப்டாப், ஃபிரிட்ஜ், டிவி என அனைத்து பொருட்களையும் அடித்து தகர்த்துவிட்டு பீரோவை உடைத்து அதிலிருந்த நகைகள், மீனவ சங்கத்திற்கு சொந்தமான பல லட்ச ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்த கும்பல் அடுத்த வீட்டில் சென்று சுவரில் மாட்டப்பட்டிருந்த கிறிஸ்தவ வசனங்கள் அடங்கிய அட்டைகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் உடைத்து விட்டு அந்த வீட்டுக்கு தீவைத்துள்ளது. ஆனால் அதற்கு நேர் எதிர் வீடான ஒரு இந்துவின் வீட்டில் ஒரு கீறல் கூட விழவில்லை.

இவ்வாறு இந்துக்களின் வீடுகள் பாதுகாக்கப்பட்டு கிறிஸ்தவ, முஸ்லிம்களின் கடைகள், வீடுகள் தெரிவு செய்யப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டன. ஒரு கும்பல் வீடுகள், கடைகளை உடைத்து நொறுக்க, மற்றொரு கும்பல் அதிலிருக்கும் விலையுயர்ந்த பொருட்களையும் நகைகளையும் பணத்தையும் சூறையாடியுள்ளன. ஒரு வீட்டை தீக்கிரையாக்க முற்பட்ட போது அங்கிருந்த கை, கால்கள் ஊனமுற்ற, வாய் பேச முடியாத ஒரு சிறுவனை தூக்கிக்கொண்டு ஓட முடியாமல் அச்சிறுவனின் தாய் கதறி இந்த வெறியர்களின் காலில் விழ அந்த வீட்டில் கொள்ளையடிப்பதுடன்; நிறுத்திவிட்டு அதற்கு அக்கும்பல் தீ வைக்காமல் சென்றுள்ளது. அந்த காட்சி நமக்கு குஜராத்தையே நினைவூட்டியது.

விபரங்களை கேட்டறிந்த டி.என்.டி.ஜே நிர்வாகிகள் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் நிவாரணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளை செய்வதாகவும் கயவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முழுவீச்சில் முயற்சி செய்வதாகவும் உறுதியளித்தனர்.

மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூவுடன் பாதிப்படைந்த பகுதிகளை பார்வையிட்ட மாநில செயலாளர் காஜா நூஹ், மாவட்ட தலைவர் ஜலீல் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டுமென்பதை கலெக்டரிடம் தெரிவித்தனர். அவரும் உடனடி நிவாரணம் வழங்குவதாக உறுதியளித்தார். பெருத்த நஷ்டத்தால் பாதிப்படைந்த மக்கள் கலெக்டர் மற்றும் எஸ்.பியின் வருகையின் போது ஆவேசப்பட்ட போது டி.என்.டி.ஜே நிர்வாகிகள் அவர்களை ஆறுதல்படுத்தினர்.

காவல்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்ட டி.என்.டி.ஜே நிர்வாகிகள், சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த வன்முறையில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லையென்றால் உடனடியாக டி.என்.டி.ஜே போராட்டத்தில் குதிக்கும் என்றும் குறிப்பிட்டனர். நாகர்கோவிலில் முப்பெரும்விழாவுக்கு முதல்வர் வந்திருப்பதால் கடுமையான நடவடிக்கைகளை தற்போது எடுக்க இயலாது, இந்த விழா முடிவுற்றதும் குற்றவாளிகளை கைது செய்வதாகவும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.

கொள்ளையர்கள் வந்த வாகனங்களான ஆட்டோக்கள் மற்றும் பைக்குகளை அங்கேயே போட்டு விட்டு ஓடிவிட்டதால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது மிக சுலபம். எனவே உடனடியாக குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்.
தங்களுக்கு வாழ்வாதாரத்தை அளித்துக் கொண்டிருந்த கடைகள், ஆட்டோக்கள் தீக்கிரையாக்கப் பட்டதால் திக்கற்று நிற்பவர்களுக்கு அரசு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும்.

உடுத்த உடையின்றி தவிப்பவர்களுக்கு அரசு மாற்று ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்.

மீனவர்கள் இயற்கையிலேயே சற்று கோபம் மிகுந்தவர்கள். ஆனால் இந்த சம்பவத்தில் அரசு நீதியாக நடக்கும் எனக்கருதி அமைதி காத்து வருகின்றனர். வன்முறை வெறியாட்டங்கள் நடந்த பிறகும் கூட எதிர் தாக்குதலில் ஈடுபடாமல் சிலையை கரைக்க அரசுடன் ஒத்துழைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட அவர்களுக்கு நீதி கிடைக்கவில்லையாயின் அவர்கள் வெகுண்டெழுவார்கள். அது மதக்கலவரமாக மாறும். அதை கட்டுப்படுத்துவது வெகு சிரமம். எனவே அரசு துரிதமாக செயல்பட்டு நியாயம் வழங்க வேண்டும் என்பதே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கோரிக்கை.

நேரடி களத் தொகுப்பு : அபு ஆஃபியா

புகைப்படங்கள்