குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு இலவச கல்வி!

குடும்பத்தில் முதலாவதாகப் பட்டம் பெறும் மாணவ,​​ மாணவிகளுக்கு கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்கும் என அறிவித்துள்ளதால்,​​ இத்திட்டத்தில் பயன் பெறத் தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.​ சண்முகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

அரசு,​​ அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள்,​​ மருத்துவக் கல்லூரிகள்,​​ பல் மருத்துவக் கல்லூரிகள்,​​ வேளாண்மைக் கல்லூரிகள்,​​ கால்நடை மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சட்டக் கல்லூரிகள் ஒற்றைச் சாளர முறையில் சேர்க்கை பெறும் மாணவ,​​ மாணவிகளது குடும்பத்தில் இதுவரை யாரும் பட்டதாரிகளே இல்லையென்றால்,​​ அம்மாணவர்கள் தொழில்கல்வி பயிலுவதை ஊக்குவித்திட,​​ சாதிப் பாகுபாடின்றியும்,​​ வருமானத்தைக் கணக்கில் கொள்ளாமலும் முழு கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்றுக் கொள்ளும்.

முதல் பட்டதாரிச் சான்றிதழ் தேவைப்படும் மாணவர்கள் விண்ணப்பித்ததும் ஐந்து நாள்களுக்குள் உரிய விசாரணை நடத்தி,​​ சான்றிதழ் வழங்க வருவாய்த் துறை அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.​ தலைமையிடத்து துணை வட்டாட்சியர் நிலைக்கு குறையாத அலுவலர்கள் இதை வழங்குவர்.

இச்சான்று பெறுவதற்கான விண்ணப்ப மாதிரிப் படிவம்,​​ அந்தந்த வட்ட அலுவலகங்களில் தகவல் பலகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

தினமணி- 1-5-2010