குஜராத்தில் 800 சாராய வியாபாரிகள் கைது, மோடி உருவ பொம்மை எறிப்பு!

gujarathகுஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 200 எட்டியுள்ளது. பல்வேறு மருத்துவமனைகளில் 40 பேர் வரை கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தேசப்பிதா மகாத்மா காந்தி பிறந்த மாநிலம் என்பதால் குஜராத்தில் பூரண மதுவிலக்கு அமலில் இருக்கிறது. ஆனால், கள்ளச் சாராய விற்பனை கொடிகட்டி பறக்கிறது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் நகரின் மஜுர்காம், நகவ் ஆகிய பகுதிகளில் கள்ளச் சாராயம் குடித்த பலர் பலியாயினர். இதை தொடர்ந்து பலரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் நடந்து கிட்டதட்ட 5 நாட்கள் முடிந்துவிட்ட நிலையில் ஒவ்வொரு நாளும் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது.

இதை தவிர்த்து மருத்துவமனைக்கு வரும் வழியிலும் அல்லது மருத்துவமனைக்கு வராமலே இறந்தவர்களின் எண்ணிக்கை 40 என கூறப்படுகிறது. இந்த தகவலை மருத்துவமனை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு காரணமான கள்ளச்சாராய வியாபாரி ஹரிசங்கர் ஹாகர் என்பவரை இன்று அதிகாலை போலீசார் கைது செய்தனர்.

இதை தொடர்ந்து போலீசார் சுமார் 30 பெண்கள் உட்பட 800 வியாபாரிகளை போலீசார் சுற்றி வளைத்தனர். தற்போது போலீசார் கைது செய்திருக்கும் அனைவரும் சிறு சிறு வியாபாரிகள் என்றும், இவர்களுக்கு பின்னால் இருந்து செயல்படும் பாஜக முன்னாள் தலைவர் ஒருவரை கைது செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் கோஹில் தெரிவித்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு அமைக்கப்ப்டடுள்ள நீதிபதி கமல் மேதாவின் ஒரு நபர் கமிட்டி நேற்று மருத்துவமனைக்கு சென்று விசாரணை மேற்கொண்டது.

இந்த சம்பவம் தொடர்பாக நேற்று குஜராத் சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. அப்போது சில எம்எல்ஏக்கள் மைக்குகளை உடைத்தனர். இதையடுத்து 7 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மைக்குகளை உடைத்த மூன்று காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு ரூ. 3 ஆயிரத்து 600 அபராதம் விதிப்பதாக சபாநாயகர் அசோக் பட் தெரிவித்தார்.

இந் நிலையில் இன்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ரகளையில் ஈடுபட்டனர். சட்டசபை அறைகளின் வாசல் கண்ணாடிகள், ஜன்னல் கண்ணாடிகள் உடைத்து எறியப்பட்டன. சட்டசபைக்குள் வைக்கப்பட்டிருந்த தலைவர்களின் படங்களும் உடைக்கப்பட்டன.

பிறகு வெளியில் வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மோடி பதவி விலகக்கோரி கோஷமிட்டனர். இதனால் குஜராத் சட்டசபை வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.

மாநிலத்தின் பல பகுதிகளிலும் குஜராத் முதல்வர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் இருவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என அம்மாநில காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

பல உயிர்கள் பலியான பிறகு தான் காவல்துறைக்கு 800 சாயரியா வியாபாரிகள் இருப்பது தெரிந்ததோ?
பலியான பிறகு சாராய வியாபாரிகளை கைது செய்த காவல்துறை பலியாவதற்கு முன் என்ன செய்தது?
மதுவிலக்கு வேறும் சட்டத்தில் தானா? உண்மையிலேயே மதுவிலக்கு நடைமுறையில் இருந்தால் இவ்வளவு உயிர்கள் பலியாகி இருக்குமா?