“கிரேடு’ திட்டத்திற்கு ஆசிரியர்கள் வரவேற்பு: மாணவர்களின் குடுமி இனி ஆசரிரியர்கள் கையில்! நேர்மையாக நடப்பார்களா ஆசிரியர்கள் ?

சென்னை:”பள்ளி தேர்வுகளில், “கிரேடு’ முறை அமல்படுத்தப்படும்’ என்ற தமிழக அரசின் அறிவிப்பை, ஆசிரியர்களும், மாணவர்களும் வரவேற்றுள்ளனர்.

இதுகுறித்து, சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கலாவல்லி கூறியதாவது:”கிரேடு’ முறையை வரவேற்கிறேன். இதைப்பற்றி, மாணவிகளிடம் விரிவாக விளக்கிக் கூற திட்டமிட்டுள்ளோம். புதிய முறை, மாணவர்களின் படிப்பிற்கு அப்பாற்பட்டு, அவர்களிடம் உள்ள திறமைகளை வெளிக்கொண்டு வரவும் உதவும். மேலும், மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாது.மாணவர்களில், நன்றாகப் படிப்பவர்களும் இருப்பர்; சுமாராக படிப்பவர்களும் இருப்பர். சிலர், அன்றைய பாடங்களை அன்றே படிக்காமல் மொத்தமாக சேர்த்து வைத்து, ஆண்டு இறுதியில் விழுந்து விழுந்து படிப்பர். இனி, அனைவரும் முறையாக படிப்பில் கவனம் செலுத்துவதுடன், இதர திறமைகளிலும் ஆர்வம் காட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது, மாணவர்களின் மேம்பாட்டுக்கு பெரிதும் உதவும்.இவ்வாறு கலாவல்லி கூறினார்.

பெயர் வெளியிட விரும்பாத, அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: தமிழக அரசின் புதிய முயற்சி வரவேற்கக் கூடியது தான். அதில், மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், திட்டத்தின் வெற்றி, ஆசிரியர்களின் ஈடுபாட்டைப் பொறுத்தே அமையும். பாடம் மட்டுமில்லாமல், மாணவர்களின் இதர திறன்களை மதிப்பீடு செய்து, 40 மதிப்பெண்கள் அளிக்க வேண்டிய பொறுப்பு, ஆசிரியர்களிடம் தரப்பட்டுள்ளது.இதனால், ஆசிரியர்கள், ஒவ்வொரு மாணவ, மாணவியின் செயல்பாட்டிலும் கவனம் செலுத்தி, பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்களுக்கு முன்னதாக, ஆசிரியர்கள் முழு பொறுப்புடன் பணியாற்ற வேண்டும். முக்கியமாக, ஆசிரியர்களின் கையில், 40 மதிப்பெண்கள் வழங்கும் பொறுப்பு இருப்பதால், தேவையான மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்களும், பிடிக்காத மாணவர்களுக்கு குறைத்து மதிப்பெண்கள் வழங்கவும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.ஆசிரியர்கள் நேர்மையான முறையில், மாணவர்களின் திறன்களை மதிப்பீடு செய்யாவிட்டால், மாணவர்களுக்கு மிகப்பெரும் பாதிப்புகள் ஏற்படும். எனவே, இதில் ஆசிரியர்கள் எவ்வித தவறும் செய்யாத அளவிற்கு, மதிப்பீடு பணிகளை மேற்கொள்ள உரிய விதிமுறைகளை உருவாக்கி, அரசு அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தி.நகர் அஞ்சுகம் அரசு மேல்நிலைப்பள்ளியின், 10ம் வகுப்பு மாணவர்கள் மகேஷ், பிரவீன்ராஜ், ரமேஷ், கணேஷ் உள்ளிட்டோர் கூறும்போது, “”இத்திட்டத்தின் கீழ் எப்படி செயல்பட வேண்டும் என்பது எங்களுக்கு முழுமையாக தெரியாது. எனினும், மதிப்பெண்களை வைத்து, மாணவர்களை பிரித்துப் பார்க்கும் நிலை, புதிய திட்டத்தால் இருக்காது,” என்றனர்.

தினமலர்