கிரானைட் முறைகேடுகளை விசாரிக்கும் சகாயம் குழுவை ரத்த செய்யக் கோரிய தமிழக அரசின் மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் அதிரடி!

sakayam_ias_001தமிழ்நாட்டில் நடந்ததாக கூறப்படும் மிகப்பெரிய கிரானைட் மற்றும் கனிம மணல் முறைகேடுகள் குறித்து விசாரிப்பதற்காக ஐ ஏ எஸ் அதிகாரி சகாயம் தலைமையில் சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த விசாரணைக்குழுவுக்கு தடைவிதிக்கும்படி தமிழக அரசு செய்த மேல் முறையீட்டு மனுவை இந்திய உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்றம் அமைத்துள்ள சகாயம் தலைமையிலான விசாரணைக் குழுவுக்கு தடை விதிக்கவும், இந்த விவகாரத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்ட சிறப்பு குழுவே விசாரணைகளை மேற்கொள்ள அனுமதி வழங்க கோரியும் தமிழக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இது போன்ற புதிய குழு அமைக்கப்படுவதால் இந்த வழக்கு விசாரணையின் வேகம் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் தமிழகத்தில் நடைபெற்ற கிரானைட் மற்றும் கனிமவளக் கொள்ளைகள் தொடர்பான விசாரணைகள் சரியான முறையில் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் ஏற்கனவே 88 சுரங்கத்தொழில் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாகவும் தமிழக அரசு தனது மனுவில் கூறியிருந்தது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அமர்வு முன்பாக இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற போது, தமிழக அரசின் கோரிக்கையை ஏற்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த பிரச்சனைக்காக பொதுநல வழக்கு தொடுத்த டிராபிக் ராமசாமி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக கருத்துக் கூறிய நீதிபதிகள், சகாயம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள புதிய குழு நன்மைக்காகத் தான் என்றும், இதற்காக தமிழக அரசு அச்சம் கொள்வதற்கு அவசியம் இல்லை என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

வழக்கின் பின்னணி

கடந்தவாரம் (செப்டம்பர் 11,2014) தமிழ்நாடு முழுவதும் நடக்கும் கிரானைட் முறைகேடு மற்றும் கனிம மணல் கொள்ளை குறித்து விசாரிப்பதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணைக்குழு ஒன்றை அமைத்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்தக்குழு இரண்டு மாதங்களுக்குள் தனது அறிக்கையை தாக்கல்செய்ய வேண்டுமென்றும் நீதிமன்றம் அப்போது கூறியிருந்தது.

தமிழ்நாடு முழுவதும் சட்டவிரதமாக மேற்கொள்ளப்படும் கனிம மணல் கொள்ளை, கிரானைட் முறைகேடு தொடர்பாக விரிவான விசாரணை நடத்தவேண்டும் என்று கோரி சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்தது.

மதுரை மாவட்ட ஆட்சியராக ஐஏஎஸ் அதிகாரியான சகாயம் இருந்தபோது, கிரானைட் முறைகேடு விவகாரத்தில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள், இந்த முறைகேட்டினால் அரசுக்கு சுமார் 16,000 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக அவர் அளித்த அறிக்கை ஆகியவை குறித்தும் , அவர் இடமாற்றம் செய்யப்பட்டது குறித்தும் தனது மனுவில் ராமசாமி குறிப்பிட்டிருந்தார். இதனால் இந்த கனிம வளம் கொள்ளையடிக்கப்படுவது குறித்து விசாரிக்க, சகாயம் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், தமிழகம் முழுவதும் நடக்கும் கனிமவள முறைகேடு குறித்து விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் ஒரு குழுவை நியமித்து உத்தரவிட்டிருந்ததுடன் அந்தக்குழு இரண்டு மாதங்களுக்குள் தனது அறிக்கையை நீதிமன்றத்திடம் அளிக்க வேண்டுமென்றும் தெரிவித்திருந்தது.

அந்த வழக்கின் விசாரணையின்போது தமிழக அரசால் சகாயம் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவது ஏன் என்றும் நீதிபதி கேள்வியெழுப்பியிருந்தார்.

சென்னை உயர்நீதிமன்றம் நியமித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையிலான புதிய விசாரணைக் குழுவுக்கு தடை விதிக்க கோரி தமிழக அரசின் சார்பில் இந்திய உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் மனுவை இந்திய உச்சநீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தள்ளுபடி செய்திருக்கிறது.

– தமிழ் பிபிசி