காவல்துறையின் அத்து மீறலை கண்டித்து மதுரையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

alhgfdcshakulமுஸ்லிம்கள் வீட்டில் அத்து மீறி நள்ளிரவில் புகுந்து சோதனை என்ற பெயரில் வெறியாட்டம் ஆடியுள்ளது மதுரை மாவட்ட கவல்துறை. வெறியாட்டம் போட்ட திருப்பரங்குன்றம் டி.எஸ்.பி மயில்வாகனன் மற்றும் அவனியாபுரம் காவல்துறை ஆய்வாளர் புகழேந்தி ஆகியோரைக் கண்டித்து மதுரையில் கடந்த 14-1-2010 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை அண்ணாசிலை, நெல்பேட்டை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஷம்சுல்லுஹா ரஹ்மானி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்பாடுகள் மிக வீரியத்துடன் நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே! வந்தே மாதரத்திற்கு ஆதரவு தெரிவித்து மதுரை மாவட்ட இந்து முன்னனியினர் ஒட்டிய போஸ்டர்களுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் கொடுத்த பதிலடியாகட்டும்,
நபிகள் நாயகத்தை இழிவாக பேசிய மதுரை ஆதீனத்திற்கு எதிராக மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் அறிவித்த முற்றுகை போராட்டமாகட்டும், தங்களது வீரியமிக்க போராட்டங்கள் வாயிலாக சமுதாயத்தின் பாதுகாப்பு அரணாக தவ்ஹீத் ஜமாஅத் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 11-01-2010 அன்று நள்ளிரவு 12 மணிக்கு டி.என்.டி.ஜே மதுரை மாவட்ட செயளாலர் ஹெச். சாகுல் வீட்டிற்குள் அத்து மீறி புகுந்த காவல் துறையினர் உங்களது வீட்டை ரைடு செய்ய வேண்டும் என்று கூறி வெறியாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் அங்கிருந்த அவரது மனைவி மற்றும் தாயரை அழைத்து இந்தப் பெண்களெல்லாம் யார்? என்று கேட்டு கொச்சைப்படுத்தியுள்ளனர்.

மேலும் அவரது வீட்டின் அனைத்து பகுதியிலும் உள்ள பொருட்களைக் களைத்து உங்களது வீட்டில் வேறு என்ன என்ன பொருட்களை எங்கு எங்கு வைத்துள்ளீர்கள் என்று ஒரு தீவிரவாதியை விசாரிப்பது போன்று விசாரித்துள்ளனர். மேலும் அவரது வீட்டிலிருந்த பீரோவில் இருந்த பொருட்களையும் ரைடு என்ற போர்வையில் துளாவிப் பார்த்துள்ளனர்.

ஏதோ ரைடு என்ற போர்வையில் நடுச்சாமத்தில் வந்து பூச்சாண்டி காட்டினால் முஸ்லிகள் பயந்து விடுவார்கள் என்று நினைத்துவிட்டனர் போலும் அந்த தரக்கெட்ட டி.எஸ்.பி மயில்வாகனனும் அவனியாபுரம் காவல்துறை ஆய்வாளர் புகழேந்தியும்.

ஆனால் தமிழகத்தில் இரத்தம் சிந்தி தவ்ஹீதை வளர்த்த நமது ஏகத்துவ சகோதரர்களின் வரலாறு தெரியாத மடையர்கள் சீப்பை ஒழித்துவிட்டால் கல்யாணத்தை நிறுத்திவிடலாம் என்று கூறுகெட்ட ரேஞ்சுக்கு யோசித்து, இந்த கேடுகெட்ட நள்ளிரவு ரைடை நடத்தியுள்ளனர்.

ஒவ்வொரு டிசம்பர் 6களின் போதும் நள்ளிரவு வேளைகளில் முஸ்லிம்களின் வீடுகளில் அத்துமீறி நுழைந்து சோதனை என்ற பெயரில் வெறியாட்டம் போட்ட காவல் துறையினரின் முஸ்லிம்களுக்கு எதிரான துவேசப் போக்கை மதுரையிலிருந்து ஆரம்பிப்பதற்கான அடையாளமாகவே டி.என்.டி.ஜே மதுரை மாவட்ட செயளாலரின் வீடு நள்ளிரவில் சோதனையிடப்பட்ட சம்பவம் உணர்த்துகின்றது
இதை கண்டிக்கும் வகையிலும், இனி மேல் எந்த ஒரு இஸ்லாமிய சகோதரனுடைய வீட்டிலும் கவல்துறையின் இதுபோன்ற பெட்டைத்தனமான அராஜகம் நடந்தேறி விடக் கூடாது என்ற தொலைநோக்கோடும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் தரங்கெட்ட டி.எஸ்.பி. மயில்வாகனனையும், ஆய்வாளர் புகழேந்தியையும் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் நடத்தியது.

காலை 9.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக அறிவித்திருந்த மதுரை அண்ணாசிலையில் ஒலிப்பெருக்கி அமைக்க வந்த ஏற்பாட்டாளர்களை காவல் துறை கைது செய்தது. சவுண்ட் சர்வீஸ்காரர்களுடைய வாகனத்தை சீஸ் செய்து மிகுந்த கெடுபிடி காட்டியுள்ளது மதுரை மாவட்ட காவல்துறை. மேலும், மதுரை மாவட்டத்திற்கு புதிதாக வந்துள்ள ஏ.சி. வெள்ளத்துரை முஸ்லிம்களை மிரட்டும் தோனியில் பேசியதுடன், ஆர்ப்பாட்டம் ஆரம்பமாவதற்கு முன்பாகவே ஸ்பாட்டில் நின்று கொண்டிருந்த டி.என்.டி.ஜே.வினரை கைது செய்யப்போவதாக அறிவித்துள்ளார். எப்போதும் தடையை மீறிய போராட்டம் என்றால், மக்கள் குழுமியவுடன்தான் கைது செய்வார்கள், ஆனால் நீங்களோ வரம்பு மீறி செல்கின்றீர்கள் என்று, மதுரை மாவட்ட நிர்வாகிகள் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என்று அழைக்கப்படும் ஏ.சி. வெள்ளத்துரையிடம் எச்சரிக்கை செய்துள்ளனர். அதைத்தொடர்ந்து உயர்மட்ட காவல்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்ட மதுரை மாவட்ட நிர்வாகிகள் ஏ.சி. வெள்ளத்துறையின் அணுகுமுறை சரியில்லை என்று எச்சரித்துவிட்டு, இந்த நிலை தொடருமேயானால், தற்போது மதுரையில் மட்டும் நடைபெறும் இப்போராட்டம் தமிழகம் எங்கும் வெடிக்கும் என்ற எச்சரிக்கையை விடுத்தவுடன், என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் அமைதியாகியுள்ளார். இவரை கட்டுப்பாட்டுக்குள் வைக்கா விட்டால் காவல் துறைக்கு கெட்ட பெயர் அதிகமாகும்.

அடக்க நினைத்தால் ஆர்ப்பரிப்போம்!

ஆர்ப்பாட்ட இடத்தில் போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே ஸ்பாட்டில் இருக்கின்றவர்களை முன்கூட்டியே கைது செய்துவிடலாம் என்ற காவல் துறையின் சதியை அறிந்த மதுரை மாவட்ட நிர்வாகிகள் டி.என்.டி.ஜே.யின் கிளை நிர்வாகிகளை உடனடியாக தொடர்பு கொண்டு அண்ணாசிலைக்கு அருகில் இருக்கின்ற நூர் பள்ளிவாசலில் குழும வேண்டும் என்ற உத்தரவை பிறப்பிக்க அலர்ட்டான கிளை நிர்வாகிகள், மக்களை நூர் பள்ளியில் திரட்ட மதுரை பரப்பரப்பானது.

இன்று பொங்கல் பண்டிகை நாளாக உள்ளது, எனவே எங்களுக்கு ஒத்துழைப்பு தாருங்கள் என்று டென்ஷனில் இருந்த உயர் அதிகாரிகள் சற்று இறங்கி வந்துள்ளனர்.

முஸ்லிம்களின் நியாயமான கோரிக்கையை உணர்ந்து கொண்ட காவல் துறை இறுதியாக அண்ணாசிலை அருகில் ஆர்ப்பாட்டம் வேண்டாம் ஓபுளாபடித்துறை அருகில் நடத்திக் கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்ள கண்டன ஆர்ப்பாட்டம் ஓபுளாபடிதுறை அருகே நடந்தது. கண்டன உரையாற்றிய டி.என்.டி.ஜே. மாநில மேலாண்மைக்குழு தலைவர் ஷம்சுல் லுஹா காவல் துறையை கடுமையாக எச்சரித்தார். “நாங்கள் சட்டத்தை மதிக்கின்றோம். ஆனால் சட்டத்தை மதிக்க வேண்டிய காவல் துறை நள்ளிரவில் அத்துமீறி வீடு புகுந்து வெறியாட்டம் போட்டது ஏன்…?” என்ற கேள்வியை எழுப்பி முஸ்லிம்கள் நாங்கள் சட்டத்தை கையில் எடுத்தால் இந்த நாடு தாங்காது என்று எச்சரிக்கையும் விடுத்தார்.

மேலும் இத்தகைய வெறியாட்டத்தை ஒருக்காலும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்ற எச்சரிக்கையுடன் இது தொடர்ந்தால் தீவிரமான போராட்டங்கள் வெடிக்கும் என்றும் எச்சரித்தார். ஒடுக்க முயன்றால் அடங்கிப்போகும் கூட்டமல்ல இந்த ஏகத்துவக் கூட்டம். அடக்க நினைத்தால் ஆர்ப்பரித்து எழக்கூடிய கூட்டம்தான் இந்தக் கூட்டம் என்பதை நள்ளிரவு ரைடு நிரூபித்துள்ளது என்றால் அது மிகையல்ல.