கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி தொற்று இரத்தம் ஏற்றிய விவகாரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 8 மாத கர்ப்பிணி பெண்ணிற்கு ஹெச்.ஐ.வி தொற்றுள்ள இரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் வெளியானதும் அதை மருத்துவமனை நிர்வாகம் ஒப்புக் கொண்டு அதற்கான சிசிக்சை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை ஏதோ தலைவலிக்கு சிகிச்சை கொடுத்ததைப் போல அரசு நிர்வாகம் மிகச் சாதாரணமாக கையாள்வதாக தெரிகின்றது. இரத்தம் ஏற்றுதல் என்பது உயிரோடு விளையாடக்கூடிய விவகாரம் ஆகும். ஒரு பிரிவு இரத்தம் உள்ள நபருக்கு மாற்று பிரிவு இரத்தத்தை ஏற்றினால் அவர் மரணமடைய வாய்ப்பு உண்டு.

அப்படி ஒரு ஆபத்தான விவகாரத்தில் ரத்த வங்கி ஊழியர்கள் பொடும்போக்காக நடந்து கொண்டுள்ளார்கள். ஒருவரிடம் இரத்தம் எடுக்கும் போதும் சரி, அதை மற்றவருக்கு ஏற்றும் போது சரி அதை சரியான முறையில் பரிசோதித்து ஏற்றுவதே சரியானதாகும். ஆனால் இவர்களின் அலட்சியப் போக்கினால் ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் உயிரும் மானமும் சேர்ந்து ஊசலாட்டத்திற்கு ஆளாகியுள்ளது.

தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற முடியாத ஏழைகள் அரசு மருத்துவமனையை நாடி வருகின்றார்கள். ஆனால் அவர்களின் உயிருடன் விளையாடும் வேலையை அரசு மருத்துவமனைகள் செய்து வருகின்றன என்பது இந்த சம்பவத்தின் மூலம் உண்மையாகியுள்ளது. இதனால் அரசு மருத்துவமனைகளும் இரத்த வங்கிகளும் மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளன.

மருத்துவமனைகள் நேரடியாக இரத்தம் ஏற்றினால் அதனால் சிக்கல்கள் வரலாம் என்பதால்தான் இரத்த வங்கிகளை அரசாங்கம் நடத்துகின்றது. அங்கு பணிபுரிபவர்கள் தங்களின் பணியில் கவனமின்மை காரணமாகவும் அலட்சியம் காரணமாகவும் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார்கள். அவர்களை பணி நீக்கம் செய்து சுகாதாரத்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அந்தப் பெண்ணிற்கு அரசு வேலை வழங்குவதாக தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

ஆனால் இதெல்லாம் செய்த தவறுகளை பூசி மெழுகுவதாக உள்ளது. இந்த விவகாரத்தை., பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணில் இடத்தில் இருந்து பார்க்க வேண்டியது அவசியம். இந்த அலட்சிய செயலில் ஈடுபட்ட இரத்த வங்கி ஊழியர்கள் மட்டுமின்றி இது தொடர்பில் இருந்த மருத்துவர்கள் செவிலியர்கள் என அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.

அரசு மருத்துவமனைகளின் நம்பகத்தன்மையை மக்களிடம் உறுதிப்படுத்த வேண்டியது சுகாதாரத்துறையின் கடமையாகும். பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு உரிய இழப்பீடுகள் வழங்க வேண்டும்.

இதுபோன்ற இன்னும் ஒரு சம்பவம் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மருத்துவமனை மற்றும் இரத்த வங்கி ஊழியர்களின் அலட்சியத்தால் அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடும் இந்தச் செயலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கிறது.

ஊடகத் தொடர்புக்கு:9789030302

இப்படிக்கு
இ.முஹம்மது
மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்