கண் சிகிச்சை முகாம் குறித்த முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

கிளை, மாவட்ட நிர்வாகிகளின் கவனத்திற்கு

அல்ஹம்துலில்லாஹ். இலவசக் கண் மருத்துவச் சிகிச்சை முகாம்களைப் பிற தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து நாம் நடத்துகிறோம்.

இதில் சில விமர்சனங்கள் எழுகின்றன.

மருத்துவ ரீதியாக மக்கள் இலவசமாகப் பயன்பெறுவார்கள் என்ற எண்ணத்தில் நாம் மக்களைத் திரட்டும் நிகழ்ச்சியைச் சில தனியார் மருத்துவமனைகள் தங்கள் மருத்துவமனைக்கு ஆள்பிடிப்பதற்குப் பயன்படுத்திக் கொள்வதாகத் தோன்றுகிறது.

பெயரளவில் கண்களுக்குச் சொட்டு மருந்தை மட்டும் செலுத்திவிட்டு இதர முழுச் சிகிச்சைக்கு எங்கள் மருத்துவமனைக்கு வாருங்கள் என்று அதில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் அழைப்பு கொடுத்துச் செல்கிறார்கள்.

அத்தகைய தனியார் நிறுவனங்களுக்கு ஜமாஅத்தின் அங்கீகாரத்தை வழங்குவதைப் போன்று இன்ன மருத்துவமனையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தும் இணைந்து நடத்தும் என்ற வாசகத்தைப் பெரிதான எழுத்தில் பளிச்சென்று அச்சடித்துக் குறிப்பிட்ட நிகழ்ச்சியை விளம்பரம் செய்து வருகிறோம்.

இன்னும் சில மருத்துவமனைகள் பெயருக்கு இலவசம் என்று போட்டு விட்டு உரிய தொகையை டிஸ்கவுண்ட் என்ற பெயரில் வாங்கி விடுகிறார்கள் என்ற அதிருப்தியும் மக்களிடையே உண்டு.

அதுபோகக் கல்லூரியில் பயிலும் மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் நோக்கில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவதும் காலாவதியான மருந்துகளைப் பயனாளிகளுக்கு வழங்கிப் பலர் கண் பார்வையை இழந்த சம்பவங்களும் ஆங்காங்கே நடந்துள்ளன.

இத்தகைய விளைவுகளைத் தவிர்க்கும் வகையில் இலவசக் கண் மருத்துவச் சிகிச்சை முகாம்கள் நடத்தப்படுவதாக இருந்தால் பின்வரும் ஒழுங்குகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது

இலவசம் என்று விளம்பரப்படுத்துவதாக இருந்தால் பெயரளவில் இல்லாமல் லென்ஸ் வழங்குவது, அறுவை சிகிச்சை செய்வது போன்றவைகள் கூட உண்மையில் இலவசமாக இருக்க வேண்டும்.

குறைந்த அளவு தொகை பெறுவதாக இருந்தால் அது போன்ற கண் மருத்துவச் சிகிச்சைகளை இலவசம் என்று விளம்பரம் செய்யக் கூடாது என்பதுடன் அறுவை சிகிச்சை, லென்ஸ் போன்றவைகளுக்குப் பெறப்படும் தொகை வெளியில் பெறப்படும் தொகையை விடக் கணிசமாகக் குறைவாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை விளம்பரம் செய்யும் போது இன்ன மருத்துவமனையும் தவ்ஹீத் ஜமாஅத்தும் இணைந்து நடத்தும் என்ற சொல்லைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அதற்கு மாற்றாக மருத்துவமனையின் பெயரைக் குறிப்பிட்டு இன்னார் நடத்தும் நிகழ்ச்சி என்று குறிப்பிட்டு விட்டு, அதில் நிகழ்ச்சி ஏற்பாடு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்று குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும்.

இனி இந்த ஒழுங்கு முறைகளை பேணியே கண் மருத்துவ சிகிச்சை முகாம்களை நடத்த வேண்டும் என்று கிளை, மாவட்டங்களுக்குத் தலைமை வலியுறுத்துகிறது.

இப்படிக்கு
M.S. சையது இப்ராஹீம்
பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்