கண்ணியப்படுத்த வேண்டிய விதத்தில் கண்ணியப்படுத்துவோம் :

ஒரு மனிதன் தான் பெற வேண்டிய அறிவுகளிலேயே தலையாய அறிவு தன்னைப் படைத்த இறைவனைப் பற்றி அறிய வேண்டிய அறிவுதான். ஆனால் இன்றைய காலகட்டத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது.

படைத்த இறைவனைத்தவிர மற்ற அறிவுகள் குறித்தெல்லாம் கரைத்துக் குடித்துள்ள மனிதன் தன்னைப்படைத்தது யார் என்று அறிவதுதான் தலையாய அறிவு என்பதைப்பற்றி மட்டும் சிந்திக்க மறந்துவிட்டான்.

அதற்கு சிறந்த சான்றாக சில சம்பவங்கள் கடந்த மாதத்தில் நடந்துள்ளதை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

உருவாகும் முன்னரே உருகத் தொடங்கியது பனி லிங்கம் : அமர்நாத் யாத்திரை கேள்விக்குறி!

கடந்த வாரத்தில் பரபரப்பான தலைப்பிட்டு வெளியான செய்தியின் தலைப்புதான் தாங்கள் மேலே பார்ப்பது.

ஒவ்வொரு வருடமும் அமர்நாத் யாத்ரீகர்கள் புனித யாத்திரை மேற்கொள்வார்கள். அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும். புனித யாத்திரையில் போதிய வசதிகள் இல்லாததால் பலர் மனவேதனை அடைவர். ஆனால் இந்த ஆண்டு அமர்நாத் குகை கோவிலுக்கு யாத்திரை செல்லும் பக்தர்கள் தங்களது யாத்திரையை துவங்குவதற்கு முன்பே சோகத்தில் ஆழ்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அந்த சோகத்திற்கான காரணம்தான் நம் அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது. அமர்நாத் குகைக் கோவிலில் பனி படர்ந்து அவை லிங்கம் போன்று கூம்பு வடிவில் காட்சி தரும். அப்படி கடும் குளிரின் காரணமாக உருவாகும் கூம்பு வடிவிலான பனிக்கட்டியைத்தான் சிவலிங்கம் என்று கூறி அமர்நாத் யாத்திரிகர்கள் புனிதப் பயணம் சென்று வணங்கி வருவது வாடிக்கை.

இந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி முதல், அடுத்த ஜூலை மாதம் 21ஆம் தேதி வரை பனி லிங்கத்தை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யாத்திரை தொடங்க, இரு வாரங்களே உள்ள நிலையில், ஜம்மு – காஷ்மீரில் வெப்பநிலை அதிகரித்துள்ளதால், பனி லிங்கம் உருகத் தொடங்கியுள்ளது.

தற்போதைய நிலவரத்தின் படி, 40 சதவீத பனி லிங்கம் உருகிவிட்டதாக, செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும், ஓரிரு தினங்களில் மாநிலத்தில் வெப்பத்தின் அளவு குறையக்கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வெப்ப நிலை குறைந்தால், பனி லிங்கம் மீண்டும் முழுமை பெற வாய்ப்பு இருப்பதாக, அப்பகுதி மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஜம்மு – காஷ்மீரில் வெப்பம் கடுமையானதாக இருக்கின்ற காரணத்தால் அவ்வாறு உருவாகும் பனிக்கட்டிகள் (பனி லிங்கங்கள்) வெப்பத்தில் கரைய ஆரம்பித்துவிட்டதாம். எனவே தங்களது கடவுள் வெயிலில் உருகி விட்டால் அவரை (அந்தப் பனி லிங்கத்தை) தரிசிக்க முடியாமல் போய் விடுமே என்று அவர்கள் ஆழ்ந்த வருத்தத்தில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வெயில் குறைந்தால் தங்களது கடவுள் உயிர் பெறுவார் என்று நம்பிக்கை கொண்டுள்ளனர்.

கடவுளைப் பற்றி சிந்திக்க வேண்டிய மனிதன் அதுகுறித்து கிஞ்சிற்றும் அறிவு இல்லாமல் இருப்பது வேதனையளிக்கின்றது.

வெயிலில் உருகி ஓடி ஒன்றுமில்லாமல் போவது எப்படி கடவுளாக இருக்க முடியும். இதைக் கடவுளாக நம்பி நாம் இத்தனை கடுங்குளிரிலும் நமது உயிரை பணயம் வைத்து வருகின்றோமே இது சரியா என்று இவர்கள் சிந்தித்தால் இவர்களுக்கு நேர்வழி கிடைக்கும்.

ஒரு பக்கம் இப்படி ஒன்றுமில்லாமல் உருகக்கூடிய பனிக்கட்டிகளை கடவுளாக நினைத்து வழிபடுகின்றார்கள் என்றால் மறுபுறம் தமிழகத்தில் நடந்த மற்றுமொரு சம்பவம் இவர்கள் கடவுளுடைய விஷயத்தில் எத்தகைய அறிவுடையோராக இருக்கின்றார்கள் என்பதை பறைசாற்றக்கூடிய விதத்தில் அமைந்துள்ளது.

கடவுளைத் தாக்கிய நபர் கைது:

சனீஸ்வரர் சிலை மீது தேங்காய் உடைத்த பக்தர் கம்பி எண்ணுகிறார்

குச்சனூர்: ஏழரை வருடங்களாக தன்னை பிரியமாக(!) பிடித்து வைத்துக் கொண்டு ஆட்டிப் படைத்ததாக சொல்லி சனீஸ்வர பகவான் தலையில் தேய்காயை வீசி எறிந்து ஆத்திரத்தை கொட்டி இருக்கிறார் ஒரு பக்தர்.

தேனி மாவட்டம் குச்சனூரில் அருள்மிகு சனீஸ்வர பகவான் என்ற கோயில் உள்ளது. ராகு, கேது, சனிஸ்வரன் மூவரும் ஒரே இடத்தில் கோயில் கொண்டிருப்பது இத் திருத்தலத்தின் சிறப்பு என்று சொல்லப்படுகின்றது.

இங்கே தினமும் பொதுமக்கள் மட்டுமல்லாமல் பல வி.வி.ஐ.பி.க்கள் கூட வந்து தரிசித்து செல்வது வழக்கம். உள்துறை அமைச்சராக இருந்தபோது, ஸ்பெக்ட்ரம், மாவோயிஸ்ட்கள் உள்ளிட்ட பிரச்னைகளால் நிம்மதியை தொலைத்துவிட்டு நின்ற ப.சிதம்பரம் குடும்பத்தோடு குச்சனூர் வந்து சென்றார். 2010 ஆம் ஆண்டு இலங்கை அதிபர் ராஜபக்சே தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் இங்கு வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் சென்றுள்ளார் என்பது இந்த கோயிலின் கூடுதல் சிறப்பு என்று சொல்கின்றனர்.

இந்தநிலையில், தேனி பங்களா மேடு பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் இங்கே சாமி தரிசனம் செய்ய லேசான தள்ளாட்டத்துடன் வந்துள்ளார். தனக்கு ஏழரைச் சனி முடிவதால் பரிகாரம் செய்ய வந்திருப்பதாக சொல்லி இருக்கிறார் சரவணன். கடந்த சில ஆண்டுகளாக சரவணனுக்கு சனீஸ்வர பகவானால் ஏகப்பட்ட சிக்கலாம். வியாபாரம் மற்றும் குடும்பத்தில் ஏகப்பட்ட சிக்கல்ளை சந்தித்திருக்கிறார். இதையெல்லாம் அங்கிருந்தவர்களிடம் புலம்பல் கதையாக சொல்லிக் கொண்டு இருந்தவர், திடீரென சனி பகவான் மீது கோபம் அடைந்து, நேராக கருவறைக்கு அருகில் சென்று, ‘என்னய பாடா படுத்தி எடுத்துட்டியேப்பா… உன்னாலதானே இம்புட்டு கஷ்டமும். வியாபாரத்தையும் படுக்க வைச்சிட்டே! ” என்று சொல்லிவிட்டு, கையில் இருந்த தேங்காயை சனி பகவானைக் குறிவைத்து எறிந்துள்ளார்.

இதைப் பார்த்துவிட்டு பதறிப்போன கோயில் நிர்வாகத்தினர், சரவணன் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்குவதற்குள், அவரைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்திருக்கிறார்கள். சனீஸ்வர பகவானை அவமதிப்பு செய்ததாக சரவணன் மீது வழக்குப் பதிவு செய்த சின்னமனூர் போலீஸார், அவரை சிறைக்கும் அனுப்பி இருக்கிறார்கள்.

கடவுள் தனக்கு கஷ்டத்தைக் கொடுத்ததாகச் சொல்லி கடவுளை அடித்த நபர் கம்பி எண்ணுவதாக வந்த செய்தியைக் கேட்டு சிரிப்பதா? அல்லது அழுவதா? என்று தெரியவில்லை.

கடவுளை தன் வீட்டு வேலைக்காரனைப்போல எண்ணி, அவனை அடிக்கப்போகும் அளவிற்கு கடவுளைப்பற்றி நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.

கடவுளுக்கு காணிக்கையாக 4000 குவாட்டர் பாட்டில்கள்:

இதே குச்சனூரில் அங்குள்ள கருப்பணசாமிக்கு 4,000 குவார்ட்டர் பாட்டில்களை பக்தர்கள் படையலிட்டதாக வந்த செய்திகளும் இவர்கள் கடவுளை எந்த அளவிற்கு கற்பனை செய்து வைத்துள்ளார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

குச்சனூர் சோனைக் கருப்பணசாமிக்கு 4,000 மது பாட்டில்களை படையலிட்டு பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூரில் இருக்கும் சனீஸ்வரன் கோவிலில் சோனைக் கருப்பணசாமி கோவில் தனி சன்னதியாகவே உள்ளது. ஆடி மாதம் 4வது வாரம் முடிந்து கருப்பணசாமிக்கு பொங்கல் வைத்து திருவிழா நடந்தது.

திருவிழாவுக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமிக்கு காணிக்கையாக மது பாட்டில்களை வழங்கினர். பக்தர்கள் அளித்த 4,000 மதுபாட்டில்கள் சாமிக்கு படைக்கப்பட்டன. பூசாரி ஜெயபாலமுத்து தனது வாயில் துணியைக் கட்டிக் கொண்டு பூஜைகள் நடத்தினார். பின்னர் சாமி இருந்த அறைக்கதவை பூட்டிக் கொண்டு சாமி சிலையின் பின்புறமுள்ள துவாரத்தில் மதுவை ஊற்றினார்.

அந்த துவாரத்தில் மதுவை ஊற்றினால் அதை கருப்பணசாமி ஏற்றுக்கொள்வார் என்பது ஐதீகம். இந்தத் திருவிழாவையொட்டி சாமிக்கு 13 ஆடுகள் மற்றும் 10 சேவல்கள் பலி கொடுக்கப்பட்டன. தொடர்ந்து 2,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 9 மணிக்கு துவங்கிய விழா நள்ளிரவு 1 மணி வரை நடந்தது என்று பத்திரிக்கைகளில் சில மாதங்களுக்கு முன்பு செய்தி வாசித்தோம்.

தங்களைப்போல கடவுளும் குடிகாரராக இருக்கின்றார் என்று இவர்கள் கடவுளைப்பற்றி நினைத்தால் கடவுளுடைய பயம் இவர்களுக்கு வருமா?

கடவுளை கண்ணியப்படுத்த வேண்டிய விதத்தில் கண்ணியப்படுத்தவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

படைத்த இறைவன் ஒருவன்தான்; அவன் எந்தத் தேவையுமற்றவன். அவன் யாரையும் பெறவுமில்லை; யாராலும் பெறப்படவுமில்லை. அவனுக்கு ஒப்பாக ஒன்றுமில்லை. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றல் பெற்றவன் என்று நம்பும் போது இத்தகைய இழிவான நிலையில் கடவுளை வைத்துப்பார்க்கும் நிலை வராது.

எனவே படைத்த இறைவன் குறித்த அறிவை முதலில் நாம் அறிவோம். மனிதனாக வாழ்வோம்.

1.”அல்லாஹ் ஒருவன்” எனக் கூறுவீராக!

2. அல்லாஹ் தேவைகளற்றவன்.

3.(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.

4.அவனுக்கு நிகராக யாருமில்லை.

(அல்குர்ஆன் அத்தியாயம் 112)