கடையநல்லூர் நகராட்சியின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து டி.என்.டி.ஜே ஆர்ப்பாட்டம்

kdnl_arpattam_2kdnl_arpattam_1கடையநல்லூர் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கின்ற ஊர்களில் ஒன்றாகும். சமீப காலமாக கடையநல்லூர் நகராட்சியின் செயல்பாடுகள் திருப்திகரமானதாக இல்லை. கடையநல்லூர் முழுவதும் மக்கள் வசிக்கின்ற பகுதிகளிலும், ஒன்று கூடுமிடங்களிலும், மருத்துவமனை, மற்றும் பள்ளிக்கூடங்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் அருகிலும் குப்பைக் கழிவுகளாகவும், பள்ளம் மேடுகளாகவும், பன்றிகளின் கூடாரங்களாகவும் காணப்படுகிறது.

இதனால் பொதுமக்களும், வயோதிகர்களும் பல்வேறு விதமான இன்னல்களுக்கும் இனம் புரியாத நோய்களுக்கும் உள்ளாகின்றனர். இது தொடர்பாக பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டும் எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. கடையநல்லூர் நகராட்சியில் நாங்கள் பாரம்பரியமிக்க கட்சி, தாய்ச்சபையினர் என்று தம்பட்டம் அடிக்கக்கூடிய கட்சியினர் கவுன்சிலர்களாக இருந்தும் முஸ்லிம் பகுதிகள் முழுமையாக நகராட்சி நிர்வாகத்தால் புறக்கணிக்கப்பட்டே வருகின்றன.

இதே நேரத்தில் நகராட்சியால் திடீரென்று வீட்டு வரி இருபத்தைந்து சதவீதமும் வணிக உபயோகங்களுக்கு 150 சதவிதமும், தொழில் நிறுவனங்களுக்கு 100 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த வீட்டு வரி உயர்வு சம்பந்தமான அறிவிப்பு நோட்டீஸ் முஸ்லிம்பகுதிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முஸ்லிம் கவுன்சிலர்கள் யாரும் எவ்வித எதிர்ப்பையும் தெரிவித்ததாகத் தெரியவில்லை. அவர்கள் மறைமுகமாக இலஞ்சத்தை பெற்றுக் கொண்டே இதற்கு துணைபோயிருக்கின்றார்கள் என்றே தெளிவாகத் தெரிகிறது.

சொந்த பந்தங்களையெல்லாம் பிரிந்து பாலை வனத்தில் இரத்தத்தை சிந்தி சம்பாதிக்கின்ற முஸ்லிம்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு பால்கறக்கின்ற மடுவாகத் தெரிகின்றனர். இதன்காரணமாகத்தான் வரிவுயர்வு சம்பந்தமான அறிவிப்பு நோட்டீஸ் முஸ்லிம் பகுதிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் முஸ்லிம்கள் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் பெறுவதற்காகச் செல்லும் போது ஆயிரக்கணக்கில் நகராட்சி அலுவலர்களுக்கு இலஞ்சம் கொடுத்தால்தான் அதற்கான சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ள முடிகின்றது.

மேலும் நெல்லை மாவட்டத்தில் அதிகம் வருமானம் வரக்கூடிய நகராட்சியாக கடையநல்லூர் நகராட்சி திகழ்கின்ற போதிலும் துப்புரவுப் பணிக்கான வாகனங்கள் இரண்டு மட்டுமே உள்ளன. இந்த இரண்டிற்கு ஒரு டிரைவர் மட்டுமே உள்ளார். இவர்தான் நகராட்சி கமிஷ்னர் மற்றும் சேர்மன் ஆகியோரின் வாகனங்களுக்கும் டிரைவராக உள்ளார். இதன் காரணமாக குப்பை அள்ளும் லாரிகள் பலநாட்கள் வராமல் குடியிருப்புபகுதிகள் அனைத்தும் சுகாதாரச் சீர்கேடடைந்து வருகிறது.

மேலும் துப்புரவுத் தொழிலாளர்கள் பலநாட்களுக்கு பணிக்கு வருவதில்லை. மொத்தத்தில் கடையநல்லூர் நகராட்சி இலஞ்ச லாவண்யம் கொழிக்கும் இடமாகத்தான் உள்ளதே தவிர மக்களுக்குத் தேவையான சுகாதார வசதிகளிலோ நோய்த்தடுப்பு நடவடிக்கைகளிலோ போதிய கவனம் செலுத்துவதில்லை. கடையநல்லூர் நகராட்சியின் அவல நிலையை தட்டிக்கேட்பதற்கு எந்த அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் முன்வராத நிலையில் இஸ்லாமிய சமுதாயத்தின் பேரியக்கமாகத் திகழக்கூடிய தவ்ஹீத் ஜமாஅத் அறப்போராட்டத்தில் களமிறங்கியது.

தவ்ஹீத் ஜமாஅத் முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் எஸ்.எஸ்.யு. ஸைஃபுல்லா ஹாஜா அவர்களின் தலைமையில் 25. 11. 2008 செவ்வாய் அன்று கடையநல்லூர் நகராட்சி முன்னிலையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்களும், பொதுமக்களும், மாற்றுமத சகோதரர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர். ஸைஃபுல்லா ஹாஜா அவர்கள் தமது உரையில் நகராட்சியின் அவலநிலைகளை விரிவாக எடுத்துரைத்தார்கள். இனிமேலும் நகராட்சி நிர்வாகம் வீட்டு வரி உயர்வை ரத்து செய்யவில்லையென்றால் தவ்ஹீத் ஜமாஅத் தலைமையில் மாபெரும் வரிகொடா இயக்கம் கடையநல்லூரில் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

கடையநல்லூர் நகராட்சி நிர்வாகம் இனிமேலாவது முறையாகச் செயல்படுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.