எடப்பாடி அரசின் மதவிரோதப் போக்கு மாறவேண்டும்! – தமிழக அரசுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்!!

எடப்பாடி அரசின் மதவிரோதப் போக்கு மாறவேண்டும்!
– தமிழக அரசுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்!!

சமீப காலமாக தமிழக அரசு மத்திய பாஜகவின் பினாமி அரசாகவே செயல்பட்டு வருகிறது.
இதை மெய்ப்பிக்கும் விதமாக,
மாட்டிறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடை விவகாரத்தில் மௌனம் காத்தது,
நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசின் அநீதிக்கு சாமரம் வீசியது என்று பட்டியல் நீள்கிறது.

அந்த வரிசையில், அனைத்துப் பள்ளிகளிலும் யோகா கட்டாயமாக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சமீபத்தில் அறிவித்திருப்பது மாபெரும் அநியாயமாகும்.
தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பும் பாஜகவின் பினாமி அரசாக தமிழக அரசு செயல்படுவதை மீண்டும் உறுதிப் படுத்தும் செயலாகும்.

முஸ்லிம்கள் உடற்பயிற்சிக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் அதில் யோகா பயிற்சியில் ஓம் என்ற வார்த்தையை உச்சரிப்பதும், சூரியனை வணங்குவது என்றும் ஒரு குறிப்பிட்ட மதத்தின் வணக்க வழிபாட்டு நிகழ்வுகள் அடங்கியுள்ளன.

இப்படி ஒரு குறிப்பிட்ட மதத்தின் அனுஷ்ட்டானங்களை அனைவரும் பயிலும் பள்ளிகளில் கலப்பது என்பது ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல.
யோகாவில் சூரியனை வழிபடுவதும் ஒரு பயிற்சியாக உள்ளது. முஸ்லிம்கள் படைத்த இறைவனைத்தவிர வேறு யாரையும் வணங்கமாட்டார்கள். இந்த அடிப்படைக்கு மாற்றமாக உள்ள யோகா என்ற பெயரில் சூரிய வழிபாட்டை முஸ்லிம்கள் ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டார்கள்.

இந்த இந்திய திருநாட்டில் அவரவர் தான் விரும்பும் சித்தாந்தத்தை பின்பற்ற முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அடிப்படைக்கு எதிராக அனைவரும் யோகா செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் கூறியிருப்பது இந்திய அரசியலமைப்பு சாசனத்தையே தரைமட்டமாக்கும் தேச விரோத செயல் ஆகும்.

எனவே இந்த அறிவிப்பை இவர் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கிறது.
இல்லையேல் இதற்கு எதிராக கடுமையான போராட்டங்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முன்னெடுக்கும் என்பதையும் எச்சரிக்கையாகக் கூறிக் கொள்கின்றோம்.

இப்படிக்கு,
எம்.எஸ்.சையது இப்ராஹீம்
மாநிலப் பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்