எச்சரிக்கை! எச்சரிக்கை!!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் எவரும் வியாபாரத்திற்காக யாரிடமும் ஷேர் வாங்கக் கூடாது என்று முன்னரே பல முறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் அருளால் இயன்ற அளவு இந்த விதியை அனைவரும் கடைப்பிடித்து வருகின்றனர்.
எனினும் ஒரு சில முன்னால் நிர்வாகிகள், பேச்சாளர்கள், தவ்ஹீத் ஜமாஅத் பிரமுகர்களாக அறியப்பட்டவர்கள் கொள்கைச் சகோதரர்களுடன் தமக்கிருக்கும் அறிமுகத்தைப் பயன்படுத்தி பலரிடமும் கடன் வாங்கி உரிய காலத்தில் திருப்பிச் செலுத்துவதில்லை என்று அறிகிறோம்.
செய்யாத தொழிலுக்கு ஷேர் வாங்கி ஏமாற்றி வருவதாகவும் கேள்விப்படுகிறோம்.

இத்தகையோரின் இந்தச் செயலால் கொள்கைச் சகோதரர்களும், அப்பாவிகளும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஜமாஅத்தின் நற்பெயருக்குப் பெரிதும் களங்கம் கற்பிக்கும் வகையில் இவர்களின் நடவடிக்கை அமைந்துள்ளது.

மாநில நிர்வாகிகளாக இருந்தாலும் அவர்களை நம்பி கடன் கொடுக்கவோ, பங்கு சேரவோ கூடாது; அதற்கு ஜமாஅத் பொறுப்பேற்காது என்ற அறிவுரையை மீண்டும் நினைவூட்டுகிறோம்.
ஜமாஅத்தின் பிரமுகர்களில் இது போன்ற செயலில் ஈடுபட்டவர்கள் பற்றிய புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இத்தகையோருக்கு இரண்டு மாதங்கள் அவகாசம் அளிக்கப்படுகின்றது.

டிசம்பர் 19 ஆம் தேதிக்குள் உரியவர்களிடம் அவரவர்க்குரிய தொகையை முறைப்படி செலுத்தி விட வேண்டும்.
டிசம்பர் 19 க்குள் பிறருக்கு வழங்க வேண்டிய கடன் தொகையை வழங்க தாமதித்தால் அந்த மோசடிக்காரரின் பெயர், முகவரி, புகைப்படம் ஆகியவற்றை தவ்ஹீத் ஜமாஅத்தின் அனைத்து சமூக ஊடகங்களிலும் வெளியிட்டு இவருக்கும், ஜமாஅத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை; இவர் ஜமாஅத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுகிறார் என்று பகிரங்கமாக பொதுமக்கள் அனைவரும் அறியும் வகையில் அறிவிப்பு செய்யப்படும் என்று எச்சரித்துக் கொள்கிறோம். உணர்வு வார இதழிலும் அறிவிப்பு செய்யப்படும்.
மேலும் யார் யாரிடம் எப்படி மோசடி செய்தார் என்பதும் விரிவாக விளக்கப்படும். இதில் தயவு தாட்சண்யமில்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்.

காலாகாலத்துக்கும் இழிவைச் சுமந்து கொண்டு அவமானப்படுவதைத் தவிர்க்க அல்லாஹ்வுக்கு அஞ்சி பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை வழங்கி விடுமாறு அவர்களை உரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

மோசடி செய்வது எந்த நபிக்கும் தகாது. மோசடி செய்தவர் மோசடி செய்த பொருளை கியாமத் நாளில் கொண்டு வருவார். பின்னர் ஒவ்வொருவருக்கும் அவர் செய்தது முழுமையாக வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 3:161

(முஹம்மதே!) அல்லாஹ் உமக்குக் காட்டித் தரும் அடிப்படையில் மக்கள் மத்தியில் நீர் தீர்ப்பு வழங்குவதற்காக உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை உமக்கு நாம் அருளினோம். மோசடி செய்வோருக்கு வாதிடுபவராக நீர் ஆகி விடாதீர்!
திருக்குர்ஆன் 4:105

நம்பிக்கை கொண்டோரே! அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் மோசடி செய்யாதீர்கள்! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டவற்றிலும் மோசடி செய்யாதீர்கள்!
திருக்குர்ஆன் 8:27

உங்களுக்கிடையே மோசடி செய்வதற்காக சத்தியங்களைச் செய்யாதீர்கள்! அவ்வாறு செய்தால் உறுதிப்பட்ட பாதம் சறுகிப் போய் விடும். அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்ததால் தீங்கைச் சுவைப்பீர்கள். உங்களுக்குக் கடும் வேதனை கிடைக்கும்.
திருக்குர்ஆன் 16:94

பாதிக்கப்பட்டவர்கள் இவர்களுக்கு எதிராக எத்தகைய நடவடிக்கை எடுத்தாலும் அதில் ஜமாஅத் தலையிடாது என்பதையும், தேவைப்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பக்கபலமாக ஜமாஅத் நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்காக
பொதுச் செயலாளர்
எம்.எஸ்.சையது இப்ராஹீம்