ஊழலற்ற நாடுகளில் இந்தியாவிற்கு 84 வது இடம்!- சர்வதேச ஆய்வு தகவல்!

ஊழலற்ற நாடுகளில் பட்டியலில் இந்தியா 84வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அதாவது 3ல் ஒரு இந்தியர் ஊழல் பேர்வழியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு, ஊழல் அடிப்படையில் உலக நாடுகளை பட்டியலிட்டுள்ளது. ஊழல் அற்ற நாடுகளுக்கு 10 புள்ளிகள் என்ற அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ள இதில் இந்தியா, 3.4 புள்ளிகளுடன் 84வது இடத்தில் உள்ளது.

நியூசிலாந்து 9.4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. சோமாலியாவில் ஊழல் தலைவிரித்தாடுவதாக இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாடு 1.1 புள்ளிகளுடன் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை, 3ல் ஒருவர் (30 சதவீதம்) ஊழல் புரிவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓரளவுக்கு லஞ்சம் வாங்குபவர்கள் 50 சதவீதம் பேர். நேர்மையானவர்கள் வெறும் 20 சதவீதம்தான். குறிப்பாக, ஏழை மக்கள் பொது சேவைகளை பெறுவதற்காக அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுப்பது அதிகரித்து வருவதாக டிரான்ஸ்பரன்சி அமைப்பின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சிலரிடம் அதிகப்படியான பணம் இருக்கிறது. இவர்களைதான் சமூகம் மதிக்கிறது. ஆனால், அவர்கள் எந்த வழியில் பணத்தை ஈட்டினார்கள் என்பதைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. 20 சதவீதம் பேர் மட்டுமே மனசாட்சிப்படி நடந்து கொள்கிறார்கள். ஊழல் எப்படி வளர்கிறது என்பதை கண்காணித்தது எனது வாழ்வின் மோசமான பணி என அண்மையில் ஓய்வு பெற்ற மத்திய ஊழல் தடுப்பு ஆணையர் பிரதியுஷ் சின்ஹா தெரிவித்தார். அனைத்து நிலைகளிலும் ஊழல் இருப்பதை பல்வேறு சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றன.

டெல்லியில் காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடைபெற்றுள்ள ஊழல்கள் அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு முன்பு, ஐபிஎல் போட்டிகளில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதவிர, கிரிக்கெட் போட்டியின்போது, சூதாட்டத்தில் பல ஆயிரம் கோடி புழங்குகிறது.

தினரகன் 9-10-2010