உண்மையாகும் நபிகளாரின் முன்னறிவிப்பு

உங்களுக்கு முன்னிருந்த(யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற் கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்? என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், வேறெவரை? என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) நூல்: புகாரி 3456

மேற்கண்ட நபிகளாரின் முன்னறிவிப்பை முஸ்லிம்கள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் பெயர்தாங்கி முஸ்லிம்களில் சிலர் உண்மைப்படுத்தி வருகின்றனர். அத்தகைய நிகழ்வுகளில் ஒன்றுதான் கடந்த வாரம் நடந்த சமயநல்லிணக்க நிகழ்ச்சி என்ற பெயரில் சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி.

பா.ம.க ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சி யில், முஸ்லிம்கள் என்று தங்களை சொல்லிக்கொள்ளும், இரண்டு போலி உலமாக்கள் கலந்து கொண்டு, அரசியல் கூத்தாடி ராமதாஸோடு இணைந்து கேக் வெட்டி கிறிஸ்துமஸை கொண்டாடியுள்ளனர். அது அவர்களுடைய புகைப்படத்தோடு மறுநாள் அனைத்து பத்திரிகைகளிலும் வெளியானது.

ஆம்! சென்னை புரசைவாக்கம் ஜும்ஆ மசூதி இமாம் முஜிபுர் ரஹ்மான் மற்றும் வட பழனி ஜும்ஆ மசூதி இமாம் சர்வேஷ் ரசாதி ஆகியோர்தான் அந்த போலி உலாமாக்கள்.

இதன் மூலம், உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள் என்ற நபிகளாரின் முன்னறிவிப்பை இவர்கள் உண்மைப்படுத்தியிருக்கின்றார்கள். உடும்புப் பொந்துக்குள் நுழையாதது மட்டும்தான் இன்னும் குறையாக உள்ளது.

மாற்றுச் சமுதாயம் உடும்புப் பொந்துக்குள் நுழையாமல் இருப்பதால்தான் அதையும் இன்னும் விட்டு வைத்துள்ளார்கள் என்று நினைக்கின்றோம். அவர்கள் உடும்புப் பொந்துக்குள் நுழைந்தால் நாங்களும் அவர்களோடு சேர்ந்து உடும்புப் பொந்துக்குள் நுழைவோம் என்ற இவர்களது பிரகடனத்தைத்தான் மேற் கண்ட இவர்கள் செயல் வெளிப் படுத்துகின்றது.

இந்த கிறிஸ்தவ கலாச்சாரத்தை பின்பற்றி ஏசு பிறந்த நாளை கிறிஸ்தவர்கள் கொண்டாடுவதைப் போன்றுதான், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாளை நம்முடைய முஸ்லிம் சமுதாயமும் கொண்டாடி வருகின்றது. அதுவும் நபிகளாருடைய மேற்கூறப்பட்ட முன்னறிவிப்பை உண்மைப் படுத்துவதாகத்தான் அமைந்துள்ளது.

நபிகளாரின் எச்சரிக்கையை அவர்களுடைய விஷயத் திலேயே அவர்களுக்கே பிறந்த நாள் கொண்டாடி உண்மைப்படுத்தி வருவதுதான் மிகவும் வேதனைக்குரிய விஷயமாக உள்ளது. ஏசு பிறந்த நாளுக்கு கேக் வெட்டி அவரது பிறந்த நாளைக்கொண்டாடும் இந்த போலி உலாமா கூட்டம் நபிகளாரின் பிறந்த நாளை கொண்டாடுகிறோம் என்ற பெயரில் பிரம் மாண்ட கேக் வெட்டி மீலாது விழாவை கொண்டாடப் போகிறோம் என்று அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.