உணவு வகைகளும் சில ஒப்பீடுகளும்!

கண்ணை மூடிக்கொண்டு சிலர் பின்பற்றிவரும் கோட்பாடுகளுக்கு உதாரணமாக டார்வினின் பரிணாமக் கொள்கையை சொல்வதுண்டு. அந்தவகையில் தற்போது மனிதனின் உணவுப் பழக்கங்களும் புதிதாக சர்ச்சைக்கு ஆளாகி வருகிறது.

அதாவது அசைவத்தை உணவில் சேர்த்துக் கொள்பவர்கள் ஜீவகாருண்யத்திற்கு எதிரானவர்கள் என்றும், மாறாக சைவம் மட்டுமே உண்பவர்கள் இரக்க உணர்வின் ஒட்டுமொத்த குத்தகைக்காரர்கள் என்ற ரீதியிலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் புதிய கோட்பாட்டுப் பிரச்சாரத்தில் எந்த அளவுக்கு உண்மை உண்டு என்பதைப் பற்றி அலசுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

உணவுக்கும் உணர்வுக்கும் தொடர்பு இருக்கத்தானே செய்யும் என்ற எண்ணம் மேலோட்டமானதே தவிர, ஆழமான ஒன்றல்ல. உலகின் ஆதித்தொழில் என்பது விவசாயம் அல்ல, வேட்டையாடுதலே என்பதை முதலில் இவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். அவ்வாறு வேட்டையாடி வளர்ந்த மனிதனின் உணவுப்பழக்கம் காலத்திற்கேற்ப மாறிவருகிறது.

வேட்டையாடுவதைவிடுத்து தேவைக்கேற்ப அசைவ உணவுகளை, தானே உற்பத்தி செய்வதோடு, மித மிஞ்சியவற்றை ஏற்றுமதி செய்து நாட்டிற்கு அந்நியச் செலவானியும் ஈட்டித் தருகிறான்.

சைவம் மட்டுமே உண்பவர்களுக்கு ஒருவகையில் உதவக்கூடியவனாகவும் அசைவம் உண்பவன் இருக்கிறான் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், அதுதான் உண்மை.

மனிதர்களில் பெரும்பாலோர் இவ்வாறு அசைவத்தை உண்பதால்தான் இவர்களைப் போன்ற சைவபட்சிணிகளுக்கு காய்கறிப் பற்றாக்குறை வராமல் இருக்கிறது. எல்லோரும் சைவத்திற்கு மாறுவோம் என்று இறங்கினால், பற்றாக்குறை மட்டுமல்ல, அதன் விலையும் விண்ணைத் தொட்டுவிடும் என்பதே அடிப்படை உண்மை.

அதுபோல் பூமியில் 70 சதவிகித அளவுள்ள கடலில் இனிமேல் யாரும் மீன் பிடிக்கச் செல்லவேண்டாம் என்று முடிவெடுப்பதாக வைத்துக் கொள்வோம். அவ்வாறாயின் மீதமுள்ள 30 சதவிகித நிலப்பரப்பிற்குத்தான் ஆபத்து என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

தாவரங்களும் உயிர் வாழ்வனவைதான். ஒரு குளக்கரையின் ஓரத்தில் இருக்கும் ஆலமரமானது அதன் நீரை உறிஞ்சியே உயிர் வாழ்கிறது. செடிகொடிகளானது எந்தக்கட்டுப்பாட்டில் வளர்க்கப்பட்டாலும் தனக்கு வேண்டிய ஆக்சிஜன் மற்றும் ஒளியைப் பெற்று ஜீவிப்பதற்கு அதை நோக்கியே படருவதை நாம் காணக்கூடியதாக இருக்கிறது.

இன்னும் கடலுக்கடியில் வாழும் சில தாவரங்கள், உயிரினங்களை அப்படியே ஈர்த்து ஜீரணித்து உயிர் வாழ்வதையும் நவீன உலகம் கண்டு வருகிறது. ஆக தாவரங்களுக்கு உணர்வில்லை உயிரில்லை என்பது சொத்தை வாதமாகும். புலன்களின் எண்ணிக்கையில்தான் அவை விலங்குகளிலிருந்து வேறுபடுகிறதே தவிர, அவை உயிரற்ற (அல்லது உணர்வற்ற) ஜடப்பொருள் அல்ல என்பதை ஜீவகாருண்யம் பேசுவோர் புரிந்து கொள்வது நல்லது.

அந்த வகையில் மட்டுமல்ல, வெறும் தண்ணீரைப் பருகினால்கூட கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்களையும் கலந்துதான் நம்மோடு சேர்ந்து இவர்களும் அருந்துகிறார்களே தவிர, வேறல்ல.

பசு சுரக்கும் பாலானது அதன் கன்றுக்குத்தானே தவிர, மனிதர்களுக்கு அல்ல. ஆயினும் கன்றுக்குத் தேவையான அளவே சுரக்கும் சக்தி கொண்ட பசுக்களை செயற்கை முறையில் (பசுவை இம்சித்து) கூடுதல் பால் சுரக்க வைத்து, அதைப் பருகுவதை அவர்களது அறிவு ஏற்றுக் கொள்வது விந்தையான ஒன்றாகும்.

அடுத்து இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டு அபத்தமான ஒன்றாகும். அதாவது ஹார்ட் அட்டாக் உள்ளிட்ட நோய்கள் வருவதற்கு முழு முதற்காரணம் அசைவம் உண்பதே என்பதாகும். இதிலும் உண்மை இல்லை. அசைவ உணவில் உள்ள கொழுப்பு இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாயை அடைத்து ஹார்ட் அட்டாக் உண்டு பண்ணுகிறது என்ற வாதம் சரியல்ல.

American Heart Association என்ற அமைப்பு “இதய நோய் வராமல் தடுக்கக் கண்டிப்பாக குறைந்தது வாரத்திற்கு இரண்டு முறை மீன் உணவு சாப்பிடவேண்டும்” என்று பரிந்துரைக்கிறது. மேலும் மீனில் உள்ள கொழுப்பு, omega 3 fattyacid, EPA, DHA போன்றவை மனிதனுக்கு அத்தியாவசியமாகும். இந்தப் பொருள்கள் சைவ உணவில் இருப்பதே இல்லை என்பதை இவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

மீனை உணவில் சேர்ப்பவர்களுக்கு atherosclerosis என்னும் இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிந்து அடைப்பு ஏற்படும் தன்மை வெகுவாகக் குறைவதோடு, ஒரு வகை தீங்கு விளைவிக்கும் triglyceride என்ற கொலஷ்ட்ராலின் அளவைக் குறைத்து, அதனால் ஏற்படும் விளைவுகளான ஹார்ட் அட்டாக், பக்கவாதம் போன்ற நோய்களை விட்டும் காக்கிறது.

மீனைத் தன் உணவில் சேர்க்காதவர்களுக்கு இந்த நன்மைகள் கிடைப்பதே இல்லை. மேலும் இந்தப் பொருள்கள் மனிதனின் மனச்சோர்வைத் தடுக்கும் வல்லமை பெற்றவை. அத்துடன் இந்தப் பொருள்களுக்கு இரத்தத்தை உரையவிடாமல் மெல்லியதாக்கும் தன்மையும் உண்டு. இதனால் இரத்தம் உறையாமல் ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்கப்படுகிறது.

ஒரு மனிதனுக்குத் தேவையான சத்துக்கள் மற்றும் நோய் எதிர்ப்புக் காரணிகள் அசைவத்தில் மட்டுமோ அல்லது சைவத்தில் மட்டுமோதான் உண்டு என்பதை விஞ்ஞானம் ஏற்கவில்லை.

ஒரு சில சத்துக்கள் காய்கறிகளில் மட்டுமே இருக்கும். அதே நேரத்தில், வேறுசில சத்துக்கள் அசைவ உணவுகளில் மட்டுமே இருக்கும். அதேபோல் இன்னும் சில அத்தியாவசிய சத்துக்கள் கடல் உணவில் மட்டுமே இருக்கலாம்.

ஆக மனிதன் தனது உணவுத்தேவையை இவையெல்லாம் கலந்து சரிவிகிதத்தில் அமைத்துக் கொள்ளும்போது மட்டுமே ஓரளவுக்கேனும் வாழ்வாங்கு வாழ இயலும். கடல் உணவு மற்றும் இதர அசைவ உணவு போன்றவற்றை முற்றாக ஒதுக்கும்போது, லோ பிரஸ்ஸர், மயக்க உணர்வு மற்றும் ஐம்புலன்களின் செயல்பாடுகளில் குறைபாடு போன்றவற்றை எதிர்கொண்டே ஆகும் நிலைக்கு மனிதன் தள்ளப்படுவான்.

ஆலிவ் எண்ணெய் போன்றவற்றில் சிறிதளவு இதய நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்றாலும் இந்த எண்ணைகளை சூடுபடுத்தினால், அந்த நன்மை கிடைக்காது. எனவே சைவ உணவை மட்டும் பயன்படுத்தினால், ஹார்ட் அட்டாக் போன்றவற்றைத் தடுக்கும் பாதுகாப்பு கிடைக்காமல் போகும் என்றே American Heart Association குறிப்பிடுகிறது.

சைவ உணவுகளில் உள்ள வைட்டமின் B 12 ஐ , மனித உடலால் எளிதில் பயன்படுத்த முடியாது. எனவே மனித உடல் பயன்படுத்திக் கொள்ளத்தக்க வைட்டமின் B 12 சைவ உணவில் இல்லை என்றே சொல்லலாம். ஆகவே சைவப் பிரியர்களுக்கு வைட்டமின் B 12 குறைபாடும். அதன் மூலம் வரும் ஒரு வித இரத்த சோகை, முதுகுத் தண்டு வடம் பாதிப்பு ஆகியனவும் வரும் வாய்ப்புக்கள் மிக அதிகம்.

கால்சியம் அதிகம் கொண்டது பால்தான் என்றாலும் அதில் உள்ள கால்சியமானது ஜீரண மண்டலத்திற்குச் செல்கிறதே ஒழிய, இரத்தத்தில் போய்ச் சேர்வது இல்லை.

இதேபோல் இரும்புச்சத்தும் அதன் உறிஞ்சும் தன்மையில் சைவ உணவிற்கும் அசைவ உணவிற்கும் வேறுபடுகின்றன. தாவர உணவில் சிறிது இரும்புச் சத்து இருந்தாலும், அவை ஜீரண மண்டலத்தில் இருந்து உறிஞ்சப்பட்டு இரத்தத்தில் போய்ச் சேருவது மிகக் குறைவாகும்.

இதைப்போல் சைவ உணவுகளில் சிலவற்றில் புரதம் இருந்தாலும், முழுப் புரதம் கிடைக்கும் வாய்ப்பு குறைவு என்பதால், சுத்த சைவப் பிரியர்களுக்கு புரதக் குறைப்பாடு மற்றும் அதனால் ஏற்படும் பல விளைவுகளும் வரும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. மாமிசப் புரதமே முழுப் புரதத் தேவையையும் பூர்த்தி செய்கிறது எனலாம்.

தற்போது காய்கறிவிற்கும் விலைகளுக்கு தினசரி சிக்கன் போன்றவற்றை வாங்கிச் சாப்பிட்டுவிடலாம்போல் தெரிகிறது என்பதை சமீபத்தில் ஒருநாளிதழ் வெளியிட்ட கார்ட்டூன் ஒன்று விளக்குகிறது. இதிலும் ஒரு விஷயம் என்னவென்றால் அந்த நாளிதழை (தினமலர்) நடத்துவோர் சுத்த சைவப்பிரியர்களாவர்.