ஈரோட்டில் கூடிய TNTJ மாநில செயற்குழு: தீர்மானங்கள்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயற்குழு கடந்த 07-03-2010 ஞாயிறு அன்று மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல் தாஃபி தலைமையில் ஈரோடு பவானி  மெயின் ரோட்டில் அமைந்துள்ள கே.கே.எஸ்.கே. மஹால் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற இது மாநில மேலாண் மைக்குழு தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி துவக்க உரையுடன் காலை 10.30க்கு ஆரம்பமானது.

பின்னர், பெருகிவரும் ஜமாஅத்தின் பணிகள் நிமித்தமாக கூடுதலாக ஒரு துணைத்தலைவர் பொறுப்பின் அவசியத்தை மாநிலத்தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி மாநில செயற்குழு உறுப்பினர்களுக்கு  விளக்கினார்.

கூடுதல் துணைத்தலைவர் பொறுப்பிற்கு மாநிலச் செயளா லர் கோவை ரஹ்மத்துல்லாஹ்வை மாநில நிர்வாகிகள் மற்றும் மாநில மேலாண்மைக்குழு இணைந்த கூட்டுக்கூட்டம் நிய மித்ததற்கு மாநில செயற்குழுவின் ஒப்புதல் பெறப்பட்டது.

அதைத் தொடர்ந்து,  முஸ்லிம் சமுதாயத்தின் வாழ்வாதாரக் கோரிக்கையான மத்திய அரசில் இடஒதுக்கீட்டு  கோரிக் கையை வென்றெடுக்கவும் ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் அம்சங்களை வலியுறுத்தவும் ஜூலை4 ஆம் தேதி சென்னை தீவுத் திடலில் முஸ்லிம்களின் கோரிக்கை மாநாட்டை நடத்த வேண்டியதன் அவசியத்தை மேலாண்மைக்குழு உறுப்பினர் பீ.ஜைனுல் ஆபிதீன் விளக்கி செயற்குழுவின் ஒப்புதலைப் பெற்றார். அதைத்தொடர்ந்து ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமை மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது எப்படி? என்ற ஆலோ சனைகளை மாவட்ட நிர்வாகிகள் வழங்கினர். மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்க மாநாட்டுக்குழு அமைக்கப் பட்டு அந்த குழுபற்றிய அறிவுப்பும் வெளியிடப் பட்டது. வழக்கம்போல் நடத்தப்படும் கோடை கால நல்லெழுக்கப் பயிற்சி தொடர்பாகவும் மாவட்டவாரியாக ஆலோசனைகள் பெறப்பட்டன.

மாவட்ட நிர்வாகத்தின் பணிகளை இன்னும் வீரியப்ப டுத்த, அவர்களை ஊக்குவிக்கும் முகமாக  டிஎன்டிஜேயின் ரியாத் மண்டலம் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டன. தங்களது  மாவட்டத்தின் செயல்பாடுகளை உடனுக்குடனே தவ்ஹீத் ஜமாஅத்தின் www.tntj.net இணையதளத்திற்கு அதிக செய்திகளை அனுப்பி வைத்து முதலிடம் பெற்ற இரமநாதபுரம் மாவட்டத் திற்கு ரூ. 18,000ம், இரணடாம் இடம்பெற்ற கோவை மாவட் டத்திற்கு ரூ. 17,000ம், மூன்றாம் இடம் பிடித்த தஞ்சை வடக்கு மாவட்டத்திற்கு ரூ. 15,000ம் வழங்கப்பட்டது.

மேலும் அதைத் தொடர்ந்து பத்து இடங்களை பிடித்த மாவட்டங்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாயும் வழங்கப் பட்டது. மேலும் 39 மாவட்டங்களுக்கும் பீ.ஜே. மொழி பெயர்த்த 156 திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பு மாற்று மத அன்பர்களுக்கு அன்பளிப்பாக வழங்குவதற்காக வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தின் அமைப்பு நிர்ணய சட்டம் குறித்தும் அதில்  செய் யப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மற்றங்கள் குறித்த விளக் கத்தையும் பீ.ஜே. செயற்குழு உறுப்பினர்களுக்கு விளக்கினார்.

அதில் மேலாண்மைக்குழுவின் அதிகார வரம்பு என்ன? மாநில நிர்வாகத்தின் வரவு செலவுகளை சரி  பார்க்க தணிக்கைகுழு அமைக்கப்பட்டதன் விபரங்க ளையும் அவர் விளக்கினார். மேலும் தணிக்கை குழு வின் தலைவராக அன்வர்பாட்ஷா, உறுப்பினர்களாக  சைஃபுல்லாஹ் ஹாஜா, அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்ஸி, தம்மாம் தவ்ஃபீக், துபை முஹம்மது  சர்புதீன் ஆகி யோர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டதற்கான அங்கீ காரத்தையும் செயற்குழு வழங்கியது. அதைத்தொடர் ந்து தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு செயற்குழு இனிதே நிறைவு பெற்றது.

07-3-2010 மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டில் காங்கிரஸின் துரோகமும் டி.என்.டி.ஜே.யின் போராட்டமும்
1.    2004 ல் நியமிக்கப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தனது விசாரணை அறிக்கையை 2007ல் மத்திய  சமர்ப்பித்தார். அதை உடனடியாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து விவாதிக்காமல் பத்திரிக்கைகள் மூலம் அறிக்கை விபரம் கசியத்தொடங்கிய பிறகு மிகவும் தாமதமாக 2009ல் நாடாளுமன்றத்தில் கமிஷன் அறிக்கையை மட்டும் சமர்ப்பித்துவிட்டு அரசின் நடவடிக்கை அறிக்கையை கூட சமர்ப்பிக்காமல் கமிஷன் அறிக்கையின் மீதும் விவாதிக்காமல்? சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு விவகாரத்தில் பச்சை துரோகம் செய்துவரும் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

2.    இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய ஜூலை 4 ல் சென்னைத் தீவுத் திடலில் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கைப்படி முஸ்லிம்களுக்கு மத்திய அரசுப் பணிகளில் 10 சதவீத இடஒதுக்கீட்டை அமுல்படுத்தக்கோரி 15 லட்சம் முஸ்லிம்களை திரட்டி கோரிக்கையை வென்றெடுப்பது என இச்செயற்குழு தீர்மானிக்கிறது.

3.    முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தருவதாக கடந்த 2004 தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்து காங்கிரஸ் மத்தியில் ஆட்சியை பிடித்தது. முழு ஐந்தாண்டு காலம் ஆட்சியில் இருந்தும் வெறும் கமிஷனை அமைத்ததைத் தவிர இடஒதுக்கீட்டிற்காக வேறு எந்த முயற்சியும் காங்கிரஸ் அரசு மேற்கொள்ளவில்லை. முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கைக்குப் பிறகு பொதுக்கருத்து எட்டப்பட வேண்டும் என்ற சாக்கைச் சொல்லி இடஒதுக்கீட்டை தள்ளிப்போட்டு வருகின்றது. காங்கிஸின் இந்த மெத்தனப்போக்கையும் அலட்சியப்போக்கையும் வன்மையாகக் கண்டிப்பதுடன் ரங்கனாத் கமிஷன் அறிக்கையை உடனே அமுல்படுத்துமாறு மத்திய அரசை இம்மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

ஆந்திர இடஒதுக்கீடு பறிப்புக்கு கண்டனம்

4.    அண்மையில் முஸ்லிம்களுக்கு உரிய இடஒதுக்கீட்டை ஆந்திர உயர்நீதிமன்றம் ரத்து  செய்து தீர்ப்பளித்தது. மூன்றாவது முறையாக ஆந்திர உயர் நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்து முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டில் மண்னை அள்ளிப்போட்டுள்ளது. உடையில் கறுப்புச் சட்டையும் உள்ளத்தில் காவிச் சிந்தனையும் கொண்ட நீதிபதிகள் இந்த நீதித்துறையில் குடியேறி இருப்பதை தெள்ளத்தெளிவாக இந்தத் தீர்ப்பு எடுத்துக்காட்டுகிறது. சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு மத அடிப்படையிலான ஒதுக்கீடுதான் என்ற விபரம் பாமரனுக்கும் தெரிந்த உண்மையாகும். அத்துடன் ஆந்திரத்தில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது முஸ்லிம்களில் பிற்பட்டோர்கள் என்ற அடிப்படையில் தான் என்பது மற்றொரு உண்மையாகும். இந்த உண்மைகளுக்குப் புறம்பாகவும் மாநிலத்தில் உள்ள ஒரு பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு போதுமான அளவு பிரதிநிதித்துவம் இல்லை என அரசு கருதினால் அவர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்ற 16(4) பிரிவு அரசியல் சட்டத்துக்கு எதிராகவும்  முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை மதரீதியானது என்று காரணம் காட்டி ரத்து செய்திருப்பது முஸ்லிம்களுக்கு இழைத்த மாபெறும் அநீதியும் அநியாயமும் ஆகும். ஆந்திர நீதிமன்றம் முஸ்லிம்களுக்கு இழைத்த இந்த                 அநியாயத்தையும் அக்கிரமத்தையும் இம்மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கின்றது.

புதுவை மாநில அரசுக்கு கோரிக்கை

5.    புதுவை மாநிலத்தில் அரசுப் பணிகளில் முஸ்லிம்களுக்கு 2.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவதாக புதுவை சட்டமன்றத்தில் புதுவை காங்கிரஸ் அரசு தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்தத் தீர்மானத்தை சட்டமாக்குவோம் என்றும் ஆந்திராவைப் போன்று புதுவையில் வட்டியில்லா கடன் வழங்குவோம் என்றும் புதுவை காங்கிரஸ் தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் காலம் கடத்துகின்ற புதுவை அரசை இச்செயற்குழு வன்மையாக கண்டிப்பதோடு உடனே அந்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு புதுவை அரசை இச்செயற்குழு வலியுறுத்திக் கேட்டுள்ளது. மேற்குவங்க அரசுக்கு நன்றி

6.    முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க முன்வந்துள்ள மேற்குவங்க அரசை இச்செயற்குழு பாராட்டுகின்றது. அத்துடன் அம்மாநிலத்தில் 25 சதவீதம் முஸ்லிம்கள் வாழுகின்றனர். அவர்களின் அந்த எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீடு அளிக்குமாறு அம்மாநில அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

சாமியார்கள் ஒடுக்கப்படவேண்டும்

7.    இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் மனிதன் ஒருபோதும் கடவுளாக முடியாது. மனிதனுக்கு எந்த கடவுள் தன்மையும் கிடையாது. மனிதத்தன்மையை விட்டு மனிதன் மாறி தெய்வீகத்தன்மை அடைய முடியாது இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே தரகர்கள் இருக்கக்கூடாது என்பது இஸ்லாத்தின் கடவுள்கொள்கையாகும். இந்தக் கடவுள்கொள்கையை மக்கள் புரியாத காரணத்தினால் ஒழுக்கமிக்க சாதாரண மனிதனை விட சாமியர்களை கடவுளாக நம்பி ஏமாறுகின்றனர். மக்களின் இந்த அறியாமையை பயன்படுத்தி பல சாமியார்கள் மக்களை ஏமாற்றிவருகின்றனர். எனவே மனிதன் கடவுளாக முடியாது என்ற அடிப்படையை மக்கள் விளங்கி சாமியர்களின் சதிவலையில் விழாமல் தங்களை காத்துக்கொள்ள வேண்டுமென அனைத்து சமுதாய மக்களையும் இம்மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

8.    இந்த சாமியார்களின் பட்டியலில் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்தவர் நித்யானந்தா என்ற மோசடி பேர்வழி. இந்த நித்யானந்தா மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டுமென தமிழக கர்நாடக மற்றும் மத்திய மாநில அரசுகளை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

9.    நாடுமுழுவதும் ஆன்மீகத்தின் பெயரால் வளம்வருகின்ற இந்த சாமியார்கள் ஏராளமான நிலங்களை வளைத்துப்போட்டுள்ளனர். மேலும் பல்லாயிரம் கோடி அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் அவர்களிடத்தில் உள்ளன. அவர்கள் அவற்றை எந்த வழியில் பெற்றார்கள் என்பதை மத்திய மாநில அரசுகள் அமுலாக்கப்பிரிவு அதிகாரிகள் மூலம் கண்டுபிடித்து முறைகேடாக அவர்களிடம் உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும் என மத்திய மாநில அரசுகளை இந்த செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

10.    கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்க உதவுகின்ற இந்த ஆசிரமங்களுக்கு அளிக்கின்ற வரிச்சலுகைகளை ரத்துசெய்ய வேண்டுமென மத்திய அரசை இந்த செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

11.    தங்களை கடவுளர்களாக காட்டிக்கொண்டு சட்டத்திற்கு புறம்பாக ஆசிரமங்கள் என்ற பெயரில் சொத்துக்களை குவித்து வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றுகின்ற பிரபலமான ஆண் பெண் சாமியார்களின் பாதங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய மாநில அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் விழுந்து வணங்கி ஆசிபெறுவதால் இந்த சாமியார்களின் சட்டவிரோதமான செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்குவதற்கு அதிகாரிகள் தயங்குகிறார்கள். சாமியர்களின் பெருக்கத்திற்கு இதுவே காரணம் என்று இச்செயற்குழு கருதுகிறது.  மதச்சார்பின்மையை காக்கின்ற வகையில் மத்திய மாநில அமைச்சர்களும் அதிகாரிகளும் இவர்களுடைய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக்கூடாது என்று இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

12.    மதத்தின் பெயரால் செவிடர்களை செவியேற்கச் செய்கின்றோம். குருடர்களை பார்க்கச் செய்கின்றோம் முடவர்களை நடக்கச் செய்கின்றோம் என்று மந்திரம் செய்வதாக நேரிலும் தொலைக்காட்சியிலும் நடத்தப்பட்டுவரும் அனைத்து மதத்தவர்களின் நிகழ்ச்சிகளை தடை செய்ய வேண்டுமென மத்திய மாநில அரசுகளை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

புனே குண்டுவெடிப்பு

13.    புனே ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பை இந்த மாநில செயற்குழு கண்டிக்கின்ற அதே வேளையில் கண்காணிப்புக் கேமராவில் கூட குற்றவாளி யார்? என்று கண்டுபிடிக்க முடியாதபோது விசாரணைக்கு முன்பே எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் முஸ்லிம்கள் மீது பழிபோடுவதை இச்செயற்குழு கண்டிக்கின்றது.

14.    மராட்டியம் மராட்டியர்களுக்கே என்று குரலெழுப்பி மும்பையில் இனவெறி தாக்குதலை நடத்திய சிவசேனா மற்றும் நவநிர்மான் சேனா அமைப்பினர்களின் மீது சட்டப்படி தயவுதாட்சணையின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது..

15.    தொடர்ந்து இந்தியர்களின் மீது இனவெறித்தாக்குதல் நடத்திவருகின்ற இனவெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காக்கின்ற ஆஸ்திரேலிய அரசை இம்மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

விலைவாசி உயர்வு

16.    அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயருவதற்கு பெட்ரோல் டீசல் விலை உயர்வு அடிப்படைக் காரணமாக உள்ளது. இந்த விலை உயர்வுக்கு மத்திய மாநில அரசுகள் விதிக்கும் அநியாய வரிகளே காரணமாக உள்ளன. விவசாயி பாட்டாளி மற்றும் பொதுமக்களை மிகப்பெரும் அளவில் இது பாதிப்பதால் மத்திய அரசு உடனே பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்பப்பெறுவதுடன் பிற நாடுகளைப் போன்று நமது நாட்டிலும் பெட்ரோல் டீசலுக்கு வரி விதிப்பதை கைவிடவேண்டும் என்று மத்திய அரசை இம்மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

17.    சிறுபான்மையினர் மேம்பாட்டுக்காக மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்கிய நிதி ஆதாரம் உரியோருக்கு வழங்கப்படாமல் அப்படியே திரும்ப அனுப்பப்படுகின்றது. முஸ்லிம்கள் இந்த நிதி கோரி விண்ணப்பிக்கும் போது அந்த நிதி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்றே சம்பந்தப்பட்டத் துறையினர் பதிலளிக்கின்றனர். இந்த அநீதியை உடனே தடுத்து நிறுத்தி உரியவருக்கு நிதி கிடைக்க ஆவண செய்யுமாறு மத்திய அரசை இம்மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

ஊடக கருத்து சுதந்திரம் பறிப்புக்கு கண்டனம்

18.    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் வரதராஜரின் மரணம் மர்மமாக நீடிக்கிறது. அது ஒரு படுகொலை என பலமான ஐயம் எழுவதால் காவல் துறை விசாரணையை சரியான கோணத்தில் கொண்டுசென்று உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவர கேட்டுக்கொள்வதுடன் இது தொடர்பான செய்தியை வெளியிட்ட மக்கள் தொலைக்காட்சியின் மீது தாக்குதல் நடத்திய மார்க்ஸிஸ்ட் கட்சியினரை இம்மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.

ஈரோட்டில் தொழிற் பூங்கா

19.    நூறாண்டு காலமாக தோல் தொழிலில் சிறப்புற்று விளங்கும் ஈரோடு மாநாகரில் தோல்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு வசதியாக ஈரோட்டில் தோல் தொழில் பூங்காவை ஏற்படுத்தித்தர வேண்டுமென இம்மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

மகளிர் இடஒதுக்கீடு

20.    பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றம தொகுதிகளில் மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கிட வகை செய்யும் சட்ட மசோதாவை நாளை (8.3.2010) பிரதமர் தாக்கல் செய்ய போவதாக தெரிகிறது. இந்த முடிவு எதிர் காலத்தில் இந்திய அரசியலில் கேலிக்கூத்தாகத்தான் அமையும். எதார்த்தத்தில் ஒட்டுமொத்த மகளிர் ஜனத்தொகையில் 33 சதவிகிதம் பெண்கள் அரசியலில் ஈடுபாடு கொண்டிருக்கவில்லை. மேலும் எந்த ஒரு அரசியலில் கட்சியிலும்கூட மொத்த உறுப்பினர்களில் 33 சதவிகித பேர் பெண்களாக இல்லை. சில மகளிர் அமைப்பினர்களின் பெண் பிரமுகர்களின் கோரிக்கைத்தானே தவிர ஒட்டு மொத்த பெண் சமுதாயமும் தனக்கு அரசியலில் இட ஒதுக்கீடு கேட்டு போராடவில்லை. ஒரு கட்சியின் வளர்ச்சிக்கான களப்பணியாகிய பிரச்சாரம் சுவரொட்டி ஒட்டுதல், சிறை செல்லுதல், இன்னபிற தியாகங்களை செய்வதில் 5 சதவிதம் கூட பெண்கள் இல்லாத நிலையில் 33 சதவிகிதம் அளிப்பது அநீதியாகும். இந்தியாவை விட அதிகமாக கல்வி அறிவிலும் பெண் உரிமையைப்பற்றியும் பேசும் மேற்கத்திய நாடுகளில் கூட 10 சதவிகிதம் பெண்கள்கூட அரசியலில் இல்லை எனும் போது கல்வி அறிவிலும் அரசியல் ஈடுபாட்டிலும் மிகவும் பின்தங்கியுள்ள இந்திய பெண்கள் சமுதாயத்தின் மீது வலிய திணிப்பதாகவே அமையும். மேலும் ஒரு குறிப்பிட்ட சில ஆணாதிக்க அரசியல்வாதிகளின் கைப்பாகையாகவே அந்த பெண்கள் இருப்பார்கள். இதை உள்ளாட்சி அமைப்புகளில் வழங்கப்பட்ட பெண்கள் பிரதிநிதிகள் விஷயத்தில் நாட்டுமக்கள் நிதர்சனமாக கண்டுவருகிறார்கள். எனவே இந்த பெண்களுக்கான இடஒதுக்கீடு அநீதி என இந்த செயற்குழு தீர்மானிக்கிறது.

இச் செயற்குழுவின் தீர்மாணம் பற்றிய செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது:

தினகரன்

தினமணி

தினதந்தி