இஸ்ரேலின் தலைநகரம் ஜெரூசலமா?: – அடாவடித்தனமாக நடந்து கொண்ட அமெரிக்க அதிபருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்!

இஸ்ரேலின் தலைநகரம் ஜெரூசலமா?:
– அடாவடித்தனமாக நடந்து கொண்ட அமெரிக்க அதிபருக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனம்!

கடந்த டிசம்பர் 6 அன்று, அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப், இஸ்ரேலின் தலை நகராக ஜெரூஸலம் நகரை தான் அங்கீகரித்துவிட்டதாக அறிவிப்பு செய்திருக்கிறார். இது உலக முஸ்லிம்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம்களின் நெஞ்சில் குத்தும் செயலாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இதைப் பார்க்கிறது. உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் இதற்கான கண்டனங்களைப் பதிவு செய்துவரும் இவ்வேளையில் தமிழக முஸ்லிம்கள் சார்பிலும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பிலும் கண்டனங்களை வன்மையாக இங்கே பதிவு செய்கிறோம்.

இஸ்ரேல் என்ற பகுதியே உலக நாடுகளின் சதித்திட்டங்களினால் உருவானதுதான் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
முஸ்லிம்களின் பூமியை ஆக்கிரமிப்பு செய்து, முஸ்லிம்களை அடக்குமுறை செய்து ஆயுத பலத்தினால் வெளியேற்றி, அவர்களது பூர்வீக இடத்தை பறித்துக் கொண்ட யூதர்கள், முஸ்லிம்களிடமிருந்து கைப்பற்றிய பாலஸ்தீனத்தின் பகுதிக்கு இஸ்ரேல் என்று பெயர் சூட்டிக் கொண்டார்கள் என்பதுதான் வரலாறு.

அன்று முதல் இன்றுவரை பாலஸ்தீனத்திற்கு எதிரான ஆயுதத் தாக்குதல்களையும், அடக்குமுறைகளையும் இஸ்ரேலானது நடத்தி வருகிறது.
இவர்கள் இதுவரை இஸ்ரேலின் தலை நகரமாக டெல்அவிவ் நகரத்தையே பயன்படுத்தி வந்தார்கள். டெல்அவிவ் நகரத்தில்தான் வெளிநாடுகள் தமது தூதரகங்களையும் வைத்துள்ளன. அமெரிக்காவும் இதுவரை டெல்அவிவ் நகரத்தில் தான் தனது தூதரகத்தை வைத்திருந்தது என்பது இங்கே கவனிக்கத்தக்க ஒன்றாகும்.

நிலமை இவ்வாறிருக்க, கடந்த 06.12.17 அன்று ஜெரூஸலம் பற்றிய புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். அதில் இனி ஜெரூஸலம்தான் இஸ்ரேலின் தலை நகரம் என்ற புதிய குழப்பத்தை விதைத்திருக்கிறது அமெரிக்க ஏகாதிபத்தியம். மேலும் சர்வதேச நாடுகள் தங்களது தூதரகங்களை உடனேயே டெல்அவிவிலிருந்து ஜெரூசலத்திற்கு மாற்றிக் கொள்ளும்படியும் கூறப்பட்டிருக்கிறது.

பாலஸ்தீன அரசாங்கத்தின் புதிய தலைநகரமாக கிழக்கு ஜெரூஸலம் அமையவிருந்த நேரத்தில்தான், அமெரிக்க அதிபரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுவரை ஜெரூஸலம் தங்கள் தலை நகரம் என்று இஸ்ரேல் கூறி வந்தது. சர்வதேச நாடுகள் இஸ்ரேலின் இந்தக் கூற்றை நிராகரித்தே வந்தன. ஜெரூஸலம் நகரத்தின் மீது இஸ்ரேலுக்கு எந்தவொரு ஆதிக்கமும் இல்லையென்று ஐ.நா சபையும் குறிப்பிட்டு வந்தது.

கடந்த 1948ல் நடைபெற்ற அரபு – இஸ்ரேல் போருக்குப் பின் ஜெரூஸலம் இரண்டாக பிளவு பட்டது. மேற்கு ஜெரூஸலம் இஸ்ரேல் கட்டுப்பாட்டிலும், கிழக்கு ஜெரூஸலம் ஜோர்டான் நாட்டின் கட்டுப்பாட்டிலும் வந்தது. பின்னர் 1967ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தத்தில் முழு நகரத்தையும் கைப்பற்றியது இஸ்ரேல்.
உலக முஸ்லிம்களின் புனிதத் தலங்களில் ஒன்றான மஸ்ஜிதுல் அக்ஸா இங்குதான் இருக்கிறது என்பது நாமறிந்த ஒன்றாகும். இந்த நிலையில் வெளியான இந்த அறிவிப்பானது முஸ்லிம்களை சீண்டும் விதமாக அமைந்துள்ளது.

இந்த விவாகரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைமையானது பின்வரும் அம்சங்களை வலியுறுத்துகிறது.

பாலஸ்தீனத்திற்கு சொந்தமான ஜெரூஸலம் நகரத்தை இஸ்ரேலின் தலை நகரமாக அங்கீகரித்து அமெரிக்க அதிபர் வெளியிட்ட அறிவிப்பை உடனே அவர் திரும்பப் பெற வேண்டும்.

அரபு நாடுகள் உள்ளிட்ட உலக நாடுகள் அமெரிக்காவின் இந்த அபாண்டமான அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்த வேண்டும்.

ஐநா மன்றத்திற்கும் இந்த விவகாரத்தில் சர்வதேச அழுத்தம் கொடுக்கப்படவேண்டும்.

மேலும் அமெரிக்க அதிபரின் இந்த செயல்பாட்டுக்கு இந்திய அரசும் தனது அதிருப்தியையும் கண்டனத்தையும் உடனடியாகப் பதிவு செய்ய வேண்டும்.

இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்காக
பொதுச் செயலாளர்
எம்.எஸ்.சையது இப்ராஹீம்