இந்திய வரலாற்றின் கரும்புள்ளி அயோத்தி கி.பி. 1528-2002

babriஇந்திய வரலாற்றின் கரும்புள்ளியாகவும் மதவாத அரசியலுக்கு அடித்தளமாகவும் இருக்கும் அயோத்திப் பிரச்சனை குறித்து ஒரு பார்வை:

கி.பி. 1528: முகலாய மன்னர் பாபரிடம் பணியாற்றிய மீர்பாகி அயோத்தியில் மசூதியைக் கட்டினார்.

கி.பி. 1853: இந்த இடத்தில் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில் இருந்தது என்றும், இது ராமர் பிறந்த இடம் எனவும் இந்துக்கள் உரிமை கொண்டாடினர். அயோத்தியில் இப்பிரச்சனை தொடர்பாக இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நடந்த மோதலில் 75 பேர் கொல்லப்பட்டனர்.

கி.பி. 1857: மசூதி இருந்த இடத்தின் ஒரு பகுதியை இந்து சமயத் துறவிகள் கைப்பற்றி ஆலய வழிபாட்டை நடத்தினர்.

கி.பி. 1859: வழிபாட்டுத் தலங்களைப் பிரிக்கும் வகையில் சுற்றுச் சுவரை அப்போதைய பிரிட்டிஷ் அரசு கட்டியது.

கி.பி. 1934: இந்தியா முழுவதும் இந்து-முஸ்லிம் கலவரம் வெடித்தது. பாபர் மசூதியின் ஒரு பக்க சுற்றுச் சுவரும் மேல் பகுதியும் சேதப்படுத்தப்பட்டன.

கி.பி. 1949: மசூதியின் பூட்டை உடைத்து உள்ளே சென்று ராமரின் சிலையை அங்கு வைத்தனர். இதையடுத்து இப்பகுதியை சர்ச்சைக்குரிய இடமாக அரசு அறிவித்து பூட்டிவிட்டது.

கி.பி. 1983: ராமர் பிறந்த இடத்தை (?) மீட்டு, அங்கு ராமர் ஆலயம் கட்டுவதற்கான குழுவை விசுவ இந்து பரிசத் இயக்கம் உருவாக்கியது. இதற்காக எல்.கே. அத்வானி தலைமையில் ரத யாத்திரை நடைபெற்றது.

கி.பி. 1986: பாபரி மஸ்ஜித் தலத்தின் வாயிற்கதவின் பூட்டைத் திறந்து இந்துக்களின் வழிபாட்டுக்கு அனுமதிக்குமாறு பைசாபாத் மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையில் பாபர் மசூதி செயல்கமிட்டி அமைக்கப்பட்டது.

கி.பி. 1989: மசூதிக்கு அருகில் ராமர் கோயில் கட்டுவதற்கான சிலைவழிபாட்டுக்கு முந்தைய ராஜீவ் காந்தி அரசு அனுமதி வழங்கியது. அங்கு ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் 500 பேர் கொல்லப்பட்டனர்.

கி.பி. 1990: ராமர் கோயில் கட்டும் இயக்கத்துக்கு ஆதரவு திரட்ட அத்வானி ரத யாத்திரை நடத்தினார்.
அயோத்தியில் ஒரு லட்சம் கரசேவகர்கள் திரண்டனர். சர்ச்சைக்குரிய இடத்தைத் தகர்க்க முயற்சித்தவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 30 பேர் உயிரிழந்தனர்.

கி.பி. 1992: ஜூலை மாதம் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் துவங்கின.

கி.பி. 1992: டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அங்கு தற்காலிக ராமர் கோயில் அமைக்கப்பட்டு பூஜை தொடங்கியது. இதைத் தொடர்ந்து நடந்த வன்முறைகளில் 3 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

கி.பி. 1993: பாபர் மசூதி இடத்தைச் சுற்றியிருந்த 67 ஏக்கர் நிலத்தை முந்தைய நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அரசு கையகப்படுத்தியது. அங்கு ராமனின் வரலாறு பற்றி கதாகலாட்சேபம் நடத்தும் பூங்கா அமைக்கத் திட்டமிட்டப்பட்டது.

கி.பி. 1994: அரசு கையகப்படுத்திய இடத்தில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. முன்பிருந்த நிலையே நீடிக்க வேண்டும் எனவும் அது தீர்ப்பளித்தது.

கி.பி. 2002 ஜனவரி: ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ளப் போவதாக விசுவ இந்து பரிசத் இயக்கம் அறிவித்தது.

கி.பி. 2002 பிப்ரவரி 16: சர்ச்சைக்குரிய அயோத்திப் பிரச்சினைக்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பே சரியான தீர்வாக அமையும் என்று பிரதமர் வாஜ்பாய் அறிவித்தார். நீதிமன்றத் தீர்பபுக்குக் கட்டுப்படுவதாக விசுவ இந்து பரிசத்தும் ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைப்பும் அறிவித்தன.

கி.பி. 2002 மார்ச் 6: அயோத்தி வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்துமாறு அலாகாபாத் உயர்நீதி மன்றத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

கி.பி. 2002 மார்ச் 10: பாபர் மசூதி இடத்தைச் சுற்றிலும் சுவர் எழுப்பிவிட்டு பூஜை நடத்த அனுமதிக்கலாம் என்ற காஞ்சி சங்கராச்சாரி முன் வைத்த ஒரு திட்டத்தை இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் நிராகரித்தது.

கி.பி. 2002 மார்ச் 11: அயோத்தியில் பூஜை நடத்துவதில் நீதிமன்றத் தீர்ப்புப்படி மத்திய அரசு நடந்து கொள்ளும் என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் வாஜ்பாய் அறிவித்தார்.

கி.பி. 2002 மார்ச் 13: அயோத்தியில் தற்போதைய நிலையே தொடர்ந்து நீடிக்க வேண்டும். அங்கு பூஜையோ இதர நிகழ்ச்சிகளோ நடத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.