இணையத்தில் நேரத்தை தொலைக்கும் இளைஞர்கள்

வீட்டுச் சாவியைத் தெருவில் தொலைத்துவிட்டு கூகுளில் தேடும் காலம் இது. நமது இருப்பைக்கூட ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. வலைப்பூக்களும் அவற்றுக்கான பின்னூட்டங்களும்தான் பலருக்கு முகவரியே.

இன்னும் பலருக்கு வேலையே இணையத்தில்தான். அந்தக் காலம் போல வழக்கமான 8 மணி நேர வேலை என்றில்லாமல், வீட்டிலிருந்தபடியே இணையத்தில் வேலை செய்ய முடிகிறது. அந்த அளவுக்கு இணையம் நம்முடன் பின்னிப் பிணைந்திருக்கிறது.

அங்கேயிங்கே சுற்றாமல் நல்ல பிள்ளையாக இருக்கும்வரை எல்லாம் சரிதான். இல்லாவிட்டால் நேரமும் வேலையும் கெட்டுப் போகும். வேலை செய்ய வேண்டிய நேரத்தில் “யூ ட்யூபிலும்’ “ஆன்லைன்’ ஆட்டங்களிலும் நேரத்தைத் தொலைத்துவிட்டு மன அழுத்தத்தில் ஆழ்ந்திருக்கும் இளைஞர்கள் அதிகரித்து வருகின்றனர். ஒன்று அவர்கள் வேலையிழப்பார்கள் அல்லது பொருளைத் தொலைப்பார்கள். இந்த மாதிரியான வலிகளையும் இதர அழுத்தங்களையும் தவிர்ப்பதற்கு, இணையத்தில் செலவிடும் நேரத்தைத் திட்டமிடுவதே சரியான வழி.

நேரத்தை நிர்வகிக்கும் உத்திகளில் இன்றைக்கு மொபைல் போனும் இணையமும் முக்கிய இடம் பிடிக்கின்றன.

இணையத்தில் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. சில தகவல்கள் நம்மைத் தேடி வருகின்றன. இ-மெயில் வழியாகவும், வலைப்பூக்கள் உள்ளிட்ட இன்னபிற விவாத மேடைகள் வழியாகவும் தேவையான, தேவையற்ற தகவல்கள் நம்மைக் கடந்து போகின்றன. ஒரு இ-மெயில் சுவையான, பரபரப்பான, சுண்டி இழுக்கும் தலைப்புடன் வருகிறதென்றால், அதைத் திறந்து பார்க்காமல் நம்மால் இருக்க முடிவதில்லை.

தேவையானதா, தேவையற்றதா என்பது நமது புத்திக்கு எட்டும் முன்பே இ-மெயிலைத் திறந்து விடுகிறோம். கண்ணைக் கவரும் படங்கள், இழுத்துச் செல்லும் நகைச்சுவை, அனாவசியத் தகவல்கள், மொக்கைக் கதைகள் என நேரம் போகிறது. இதுபோதாதென, நாம் பெற்ற இன்பத்தைப் பிறரும் பெற அதைப் “பார்வார்ட்’ செய்வது வேறு.

இ-மெயில் சேவை மற்றும் சமூக வலைச் சேவை செய்யும் நிறுவனங்களெல்லாம் இப்போது இலவச இணைப்பாக அரட்டைப் பெட்டி வசதியையும் தந்திருக்கின்றன. இதனால், ஆன்லைனில் இருப்பவர் யார் என்பதைக் கண்டறிந்து அரட்டை தொடங்கிவிடும். எதிரே இருப்பவர் ஏதாவது முக்கிய அலுவலில் இருக்கிறாரா, இல்லை ஆனந்த சயனத்தில் இருக்கிறாரா என்பதெல்லாம் இந்த அரட்டைக்குப் பொருட்டேயில்லை.

ஹாய் எனத் தொடங்கி பை என முடிப்பதற்குள் குறைந்தது அரைமணி நேரம் வெட்டியாகக் கழிந்துவிடும். வேலை நெருக்கடிகள் வரும்போதுதான் இதெல்லாம் நம் மூளைக்கு உரைக்கும்.

இணையதளங்களை பார்க்கும் போது, பல சுவாரசியமான விஷயங்கள் நம்மைக் கடந்து செல்லும். பாப் அப் எனப்படும் திடீர் விரிவுத் திரைகள் மூலமாகவோ, கவர்ச்சி விளம்பரங்கள் மூலமாகவோ அவை வரலாம். உண்மை என்னவென்றால் கவர்ச்சியாக வரும் இவையெல்லாம் பெரும்பாலும் போலியானவைதான்.

ஏதோ கெட்ட உள்நோக்கத்துடன் வரும் இவற்றையெல்லாம் தொடர்ந்து செல்வதைப் போல முட்டாள்தனம் வேறெதுவும் இருக்க முடியாது. இதுபோன்ற இழுத்துச் செல்லும் இணைப்புகளைத் தொடர்ந்து செல்வது நேரம் விரையத்துடன், தகவல் திருட்டுக்கும் வழி வகுக்கும்.

“மல்டி டாஸ்கிங்’ எனப்படும் ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்வது இன்னும் ஆபத்து. நண்பர்களுடன் அரட்டை, வலைப்பூக்களை வாசிப்பது, குழு விவாதங்களில் பங்கேற்பது, இணைய விளையாட்டுக்களை ஆடுவது என மூளை குழம்பிப் போகும் அளவுக்கு அனைத்தையும் ஒரே நேரத்தில் செய்து கொண்டிருப்பார்கள். எல்லாவற்றையும் முடித்துவிட்டு பணி செய்யலாம் என்று எண்ணும்போது, கண்களும் மூளையும் ஒத்துழைக்காது. நேரமும் இருக்காது.

இணையத்தில் தேவையில்லாமல் நேரத்தைத் தொலைப்பது என்பது, பணிகளை மட்டுமல்ல குடும்பத்தையும் பாதிக்கும். எந்நேரமும் கணினியும் இணையமுமாக இருக்கும் தந்தையையும் தாயையும் பார்த்துக் குழந்தைகள் மன உளைச்சலுக்கு உள்ளாகக் கூடும். கணவன் – மனைவிக்கு இடையே நெருக்கம் குறையும். உறவினர்களையும் நண்பர்களையும் இழக்க வேண்டியிருக்கும்.

இணையம் என்பது நேரம் கொல்லும் கண்டுபிடிப்பல்ல. எண்ணற்ற பயன்கள் அதனுள் ஒளிந்திருக்கின்றன. தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. எது, எப்போது அவசியம் என்கிற தெளிவு மட்டும் இருந்துவிட்டால், எந்த ஆபத்தும் நம்மை நெருங்க முடியாது.

– 12-5-2010 தினமணி

தேடித்தந்தவர்- ஃபைசல் ரியாத்