ஆம்லேட்டுக்காக கொலை – குளச்சலில் நடந்த கொடூரம்

ஆம்லேட்டுக்காக ஒருவர் கொலையா!!!! என ஆச்சிரியப்படும் நமக்கு மேலும் ஆச்சரியம் இது நடந்தது குமரி மாவட்டம் குளச்சல் பகுதியில். ..

ஆம்லெட் சாப்பிட்டதற்கு காசு தருவது தொடர்பாக ஏற்பட்ட சண்டையில், குளச்சலில் வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த டிரைவிங் ஸ்கூல் மாஸ்டர் கைது செய்யப்பட்டார்.

குமரி மாவட்டம் குளச்சல் பள்ளிமுக்கு ஆசாத்நகரைச் சேர்ந்தவர் முகமது. இவரது மகன் அல்அமீன். அல்அமீனும், அவரது நண்பர் முகமது இர்ஷாதும் சமையல் வேலை பார்த்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு இவர்கள் இருவரும் குளச்சல் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த ஹோட்டலுக்கு குளச்சல் காலடிவிளையைச் சேர்ந்த யாசின் என்பவரும் சாப்பிட வந்தார்.

டிரைவிங் ஸ்கூல் மாஸ்டரான யாசினுக்கு சமையல் வேலைகளும் தெரியும். ஆகவே அவ்வப்போது சமையல் வேலைகளுக்கும் சென்று வருவார். இதனால் அல்அமீன் மற்றும் முகமது இர்ஷாதுடன் பழக்கம் இருந்து வந்தது. அப்போது தான் சாப்பிட்ட ஆம்லெட்டுக்கு பணம் கொடுத்து விடுமாறு யாசின் கூறினார். ஆனால் அல்அமீனோ மறுத்து விட்டார். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. அவர்களை ஹோட்டல் ஊழியர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். யாசின் அல்அமீனை மிரட்டிவிட்டு சென்றார்.

உடனே அல்அமீன் யாசினை பின்தொடர்ந்து சென்று அவரிடம் தகராறு செய்தார். இதில் ஆத்திரமடைந்த யாசின் தனது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து அல்அமீனை சரமாரியாக குத்தினார். இதில் அவர் அதே இடத்திலேயே இறந்தார். இதைத் தடுத்த முகமது இர்ஷாத்துக்கும் கத்தி குத்து விழுந்தது. படுகாயமடைந்த முகமது இர்ஷாத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு குளச்சல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் விரைந்து வந்து அல்அமீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து யாசினை போலீசார் கைது செய்தனர்.

-தட்ஸ் தமிழ்

தேடித்தந்தவர் – எஸ் சித்தீக் எம் டெக்