ஆன்லைனில் டேடா என்ட்ரி வேலை: லட்சக்கணக்கில் மோசடி! பணத்தை இழந்து பரிதவிக்கும் பொதுமக்கள்!

onlineவீட்டிலிருந்து கொண்டு ஆன்லைனில் வேலை செய்து மாதம் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் தினமும் 2 மணிநேரம் செலவு செய்தால் போதும் என்ற விளம்பரங்க இணையதளத்தில் தற்போது அதிகரித்து விட்டது! இவைகளில் பெறும்பாலானவை மோசடியாகும். இவர்கள் வாடிக்கையாளர்ளிடம் முன்பணமாக பணத்தை பெற்றுக் கொண்டு பின்னர் ஏமாற்றி விடுவர். இது போன்ற ஒரு மோசடி சம்பவம் சமீபத்தில் வேலூரில் நடந்துள்ளது:

வேலூரில் டேட்டா என்ட்ரி மூலம் பல லட்சம் சம்பாதிக்கலாம் என கூறி சுமார் 700 பேரிடம் ரூ. 43.65 லட்சம் மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் வலசை தெருவில் ஸ்ரீநாகலிங்கா அன்னசத்திரம் என்ற பெயரில் அறக்கட்டளை மற்றும் கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தி வருபவர் ஞானசேகரன் (50). அவரது மனைவி பிரேமா (38). இவர்கள் கொசப்பேட்டையில் குடியிருந்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர்கள் கடந்த பல மாதங்களாக ஆன்லைன் டேட்டா என்ட்ரி வழங்குவதாக கூறி பத்திரிகைகளில் விளம்பரம் செய்தனர்.

இதில் ரூ. 5 ஆயிரம் டெபாசிட் கட்டுபவர்களுக்கு ஒரு பக்கத்துக்கு ரூ. 2.80ம், ரூ. 10 ஆயிரம் கட்டினால் ரூ. 3.80ம், ரூ. 15 ஆயிரம் செலத்தினால் ஒரு பக்கத்துக்கு ரூ. 4.80ம் தருவதாகவும், இதன்மூலம் மாதம் 10 ஆயிரம், 20 ஆயிரம் என சம்பாதிக்கலாம் என கூறி ஆசை காட்டியுள்ளனர்.

இதை நம்பி பலரும் அவர்களிடம் பணத்தை டெபாசிட் கட்டியுள்ளனர். அவர்கள் தமிழகம் முழுவதும் விளம்பரம் செய்ததால் வேலூரை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல மதுரை, தஞ்சாவூர், சேலம் என பல நகரங்களை சேர்ந்தவர்களும் இவர்களை தேடி வந்து பணம் டெபாசிட் செய்துள்ளனர்.

துவக்கத்தில் சில மாதங்களாக ஒழுங்காக டேட்டா என்ட்ரி பணிகளை செய்து கொடுத்த அவர் சிலருக்கு ரூ. 2 ஆயிரம் வரை பணம் கொடுத்துள்ளார். இதை கேள்விபட்டு மேலும் பலர் சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஞானசேகரன் யாருக்கும் டேட்டா என்ட்ரி வழங்கவில்லை. இது குறித்து கேட்டபோதும் சரியான தகவல்கள் வரவில்லை.

இதையடுத்து பணம் செலுத்தியவர்கள் நேற்று முன்தினம் காலை அவரது நிறுவனத்தை முற்றுகையிட்டனர். அப்போது அங்கு காரில் வந்த ஞானசேகரனிடம் இது குறித்த நியாயம் கேட்டுள்ளனர். ஆத்திரமடைந்த சிலர் அவரது காரில் கல் வீசி, கண்ணாடியை உடைத்துள்ளனர்.

இந்நிலையில் இந்த மோசடி தகவலை கேள்விப்பட்ட வேலூர் தெற்கு காவல் நிலைய போலீசார் அங்கு விரைந்து சென்று ஞானசேகரனை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது ஞானசேகரன் 585 பேரிடம் தலா ரூ. 5 ஆயிரமும், 51 பேரிடம் தலா ரூ. 10 ஆயிரம், 62 பேரிடம் தலா ரூ. 15 ஆயிரமும் என மொத்தம் 698 பேரிடம் ரூ. 43.65 லட்சம் வசூலித்ததை ஒப்புகொண்டார்.

இதைதொடர்ந்து 70 பேர் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் ஞானசேகரன் அவரது மனைவி பிரேமா ஆகியோரை கைது செய்தனர்.