அலஹாபாத் உயர் நீதி மன்றத்தின் ஒரு பகுதி அழுகியுள்ளது: உச்ச நீதி மன்றம் மீண்டும் சாடல்

அலஹாபாத் உயர் நீதி மன்ற நீதிபதிகளுள் பலர் நேர்மையற்றவர்கள்; தங்களுக்கு வேண்டியவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி வருகின்றனர். இந்திய சட்டத்துறை குறித்த பொதுமக்களின் அடிப்படை நம்பிக்கையை தகர்க்கும் வண்ணம் அதிர்ச்சியளிக்கக்கூடிய பல தீர்ப்புகள் அலஹாபாத் உயர் நீதி மன்றத்தால் வழங்கப்பட்டு வருகின்றன. அலஹாபாத் உயர் நீதி மன்றத்தின் ஒரு பகுதியே அழுகி விட்டது என்று உச்ச நீதி மன்றம் கண்டித்திருந்ததை ஏற்கனவே எழுதியிருந்தோம்.

நடுநிலை மக்களிடையே இந்த தீர்ப்பு பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. அலஹாபாத் உயர் நீதி மன்றம் வெட்கத்தால் தலை குனிந்தது.

உடனடியாக, அளிக்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து அலஹாபாத் உயர்நீதி மன்றம், உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. பிரபல வழக்கறிஞர் பி.பி. ராவ் அலஹாபாத் உயர்நீதி மன்றத்திற்காக ஆஜரானார். உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பினால், அலஹாபாத் நீதி மன்றத்தின் பெயர் கெட்டு விட்டது. இதனால், நீதிபதிகளுக்கு வழக்குகளை விசாரிப்பதில் கடுமையான சிரமம் இருக்கும், எந்த நீதிபதி நல்லவர், எவர் கெட்டவர் என்பது அலஹாபாத் உயர்நீதி மன்றத்திற்கு தெரியாது என்பதாக உச்சநீதி மன்றத்தில் அவர் வாதாடினார்.

எவர் நியாயமானவர், எவர் கெட்டவர் என்பது மக்கள் அனைவருக்கும் தெரிகிறது, நீதிமன்ற அவமதிப்பாக ஆகி விடுமே என்பதற்காக மக்கள் மவுனம் காத்து வருகின்றனர். நல்ல நீதிபதிகளும் உள்ளனர். நாளை நானே இலஞ்சம் வாங்கினாலும், அது மக்களுக்கு தெரிய வந்து விடும்; ஆகவே, முந்தைய தீர்ப்பிலிருந்து எதனையும் மாற்ற முடியாது என உச்ச நீதி மன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்சு கடுமையாக கூறி விட்டார்.

மேலும், உயர் நீதி மன்றத்தின் மேல் முறையீட்டினை நிராகரிப்பதாக அறிவித்து உச்ச நீதி மன்றம் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. நீதிபதிகள் விமர்சிக்கப்பட்டு விட்டார்களே என்று எண்ணாமல், அதற்கான காரணம் என்ன என்பதை ஆய்வு செய்து களையெடுக்கப்படல் வேண்டும். அலஹாபாத் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி இதற்கான ஆவன செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.

நீதிபதி மார்க்கண்டேய் கட்சு சிறந்த சட்ட பாரம்பரியம் மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை எஸ். என். கட்சு அலஹாபாத் உயர் நீதி மன்ற நீதிபதியாக பணியாற்றியவர். இவரது மாமா பி.என். கட்சு அலஹாபாத் உயர் நீதி மன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றியவர். நீதிபதி மார்க்கண்டேய் கட்சு அலஹாபாத், சென்னை, டெல்லி உயர் நீதி மன்றங்களின் தலைமை நீதிபதியாக பதவி வகித்து, 2006 ஆம் வருடம் ஏப்ரலில் உச்ச நீதி மன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். இவர் பல சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கி இருக்கிறார்.

மதுரை உயர் நீதி மன்ற ஒரு வருட நிறைவு ஆண்டு விழாவில் பேசிய அவரது பேச்சுக்கள் குறிப்பிடதக்கவை. நீதி மன்றங்களும், அவற்றின் தீர்ப்புக்களும் மக்களின் விமர்சனத்திற்கு உட்பட்டவை தான், மக்களுக்கு அந்த உரிமை உள்ளது. ஜனநாயகத்தில் மக்களே உயர்ந்த இடத்தில் உள்ளவர்கள். நீதிபதிகள் உட்பட அனைத்து அதிகார மையங்களில் உள்ளவர்களும் “மக்கள் தொண்டர்கள் servants of the people” தான். இந்த பேச்சு சட்ட வல்லுனர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. அதே நேரம், முஸ்லிம் மாணவர்கள் பள்ளி விதிமுறைகளை மீறி தாடி வைப்பதை அனுமதிக்க முடியாது என்று தீர்ப்பளித்து விட்டு, பின்னர் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டு வருத்தமும் தெரிவித்தார்.

இந்திய உச்ச நீதி மன்றத்தின் மேல் சாமானியர்கள் வைத்துள்ள நம்பிக்கை அலஹாபாத் உயர் நீதி மன்றம் குறித்த இத்தீர்ப்பின் மூலம் அதிகரிக்க வழி பிறந்துள்ளது.

ரியாத் ஃபெய்ஸல்