முஸ்லிம்களுக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்: ரங்கநாத் கமிஷன் ஆணையம் மத்திய அரசுக்கு சிபாரிசு!

Ranganath Mishraஅரசு வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று, மத்திய அரசுக்கு ரங்கநாத் கமிஷன் சிபாரிசு செய்துள்ளது.

அதிக அளவில் உள்ள சிறுபான்மையினரான முஸ்லிம்கள் அரசு பணிகளில் ஒரு சில துறைகளில் மட்டுமே உள்ளனர் மேலும் பல துறைகளில் அறவே இல்லாமல் இருக்கின்றனர் என்ற  தகவலையும் ரங்கநாத் கமிஷன் ஆய்வறிக்கையில் வெளியிட்டுள்ளது.

ரங்கநாத் கமிஷன் அறிக்கை

சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான மதம் மற்றும் மொழிவாரி சிறுபான்மையோருக்கான தேசிய கமிஷன், சிறுபான்மையோருக்கு அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி அறிக்கை தயாரித்து உள்ளது.

மத்திய சிறுபான்மையோர் நலத்துறை மந்திரி சல்மான் குர்ஷித் இந்த அறிக்கையை பாராளுமன்ற மக்களவையில் 20 மாத  தாமதத்திற்கு பிறகு நேற்று(18-12-2009) தாக்கல் செய்தார்.

முஸ்லிம்களுக்கு 10 சதவீதம்

மத்திய, மாநில அரசு வேலை வாய்ப்பில் அனைத்து பிரிவுகளிலும் முஸ்லிம்களுக்கு 10 சதவீதமும், இதர சிறுபான்மை வகுப்பினருக்கு 5 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று, அந்த அறிக்கையில் மத்திய அரசுக்கு சிபாரிசு செய்யப்பட்டு உள்ளது.

10 சதவீத இடங்களுக்கு முஸ்லிம்கள் கிடைக்கவி்ல்லை என்றால், அந்த இடங்களை மற்ற சிறுபான்மை இனத்தவர்களுக்கு வழங்கலாம். ஆனால், சிறுபான்மையோருக்கான மொத்த ஒதுக்கீடு அளவான 15 சதவீதத்தில் இருந்து, பெரும்பான்மை சமுதாயத்தினருக்கு ஒரு இடம் கூட வழங்கக்கூடாது என்றும் அறிக்கையில் சிபாரிசு செய்யப்பட்டு உள்ளது.

கல்வி நிறுவனங்களிலும் ஒதுக்கீடு

அரசு வேலைவாய்ப்பு ஒதுக்கீடு போல், அனைத்து பொது கல்வி நிறுவனங்களிலும் முஸ்லிம்களுக்கு 10 சதவீதமும், இதர சிறுபான்மை இனத்தவருக்கு 5 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் சிபாரிசில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும் சிறுபான்மை இனத்தவரின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, அனைத்து அரசு நலத்திட்டங்களிலும் 15 சதவீத பங்கு கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்றும் கமிஷன் சார்பில் யோசனை தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆங்கிலத்தில் படிக்க..