அபுதாபி TNTJ வின் இரத்த தான சேவையை பாராட்டி விருது!

bloodbankabuthabi_blood-certificateகடந்த 14-06-09 அன்று உலக இரத்த தான தினத்தை முன்னிட்டு அபுதாபி ஷேக் கலீபா மெடிக்கல் சிட்டி, இரத்த வங்கிப் பிரிவு ஒரு மாபெரும் பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தது.

அபுதாபியின் பல பகுதிகளிலும் இரத்ததான சேவைகள் செய்யும் பல நிறுவனங்களும் அதில் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். பல குழுக்களும் நிறுவனங்கங்களும் விருதுக்காக அழைக்கப்பட்டிருந்தாலும் இரத்ததானம் செய்யும் பல நிறுவனங்களுக்கு மத்தியில் சேவை மனப்பான்மையுடன் செயல்படும் தன்னார்வத் தொண்டு செய்யும் ஒரே ஒரு இயக்கமும் விருது பெற்றிருந்தது. அந்த இயக்கம் வேறு எதுவும் இல்லை!

குறிப்பிட்ட ஒரு காலவரையை நிர்ணயித்து பொதுவான இரத்த தான நிகழ்ச்சிகளை நடத்துவது, நகரின் முக்கிய இடங்கள் மட்டுமின்றி முஸ்ஸபா மற்றும் ICAD சிட்டி தொழிலாளர் குடியிருப்பு வளாகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் சென்றும் நூற்றுக்கணக்கில் இரத்ததானம் பெற்று வங்கிகளுக்கு சமர்ப்பிப்பது இப்படி பல்வேறு நிலையில் இரத்ததானத்தில் பங்களிப்பு செய்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அபுதாபி கிளை தான் குழுவாகச் செயல்பட்டு பாராட்டுதலையும் நினைவுப் பரிசையும் வென்ற இயக்கம். அல்ஹம்துலில்லாஹ்

தமிழகத்தில் சீரிய முறையில் இரத்த தானம் மற்றும் பல்வேறு மார்க்க மற்றும் சமுதாய பணிகளை செய்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் உறுப்பினர்களை போன்றே, தாயகத்தை பிரிந்து வளைகுடா நாடுகளில் வாழும் அதன் உறுப்பினர்களும் தொடர்ந்து இந்த பணிகளை செய்து வருகின்றனர்.

சுருங்கச் சொன்னால் பல நிறுவனங்கள் கூட எட்டாத எண்ணிக்கையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பில் இரத்த தானம் செய்யப்பட்டிருந்தது. அல்ஹம்துலில்லாஹ்…..

அல்லாஹ்விடம் மட்டும் கூலியை எதிர்பார்த்து செய்யும் இந்த சீரிய பணிக்கு இவ்வுலக விருதுகள் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்றாலும் இது போன்ற விருதுகள் மூலம் குருதி கொடையாளர்களின் ஆர்வம் அதிகரிக்கும் என்ற காரணத்துக்காகவும் விருது வழங்குவது அபுதாபி சுகாதார துறையின் வழக்கம் என்பதாலும் நாம் இதனை இங்கு செய்தியாக தருகிறோம்.

அன்றைய தினம் அபுதாபி ஷேக் கலீபா மெடிக்கல் சிட்டி, இரத்த வங்கியின் வளாகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் ஷேக் கலீபா மெடிக்கல் சிட்டி, இரத்த வங்கியின் இயக்குனர் அதுல் மேத்தா நினைவுப் பரிசை வழங்கி பாராட்டினார்.

எல்லா புகழும் இறைவனுக்கே…..