அபுதாபி ஐகாட் கிளையில் இரத்த தான முகாம்

இரத்ததானம் செய்வதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழகத்தில் மட்டுமல்லாமல் வளைகுடா பகுதிகளிளும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொள்ளும் இரத்தான முகாம்கள் மூலமும் மற்றும் மக்களின் அவசர தேவைகளுக்காவும் இரத்ததை தானமாக வழங்கியும் இறைவனது கிருபையால் உயிர்காத்து வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் ஐகாட் கிளை கடந்த 14-07-2011 அன்று இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் இந்தியாவின் பல பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் தங்கள் பெயர்களை பதிவு செய்திருந்தனர், முஸ்லிமல்லாத சகோதரர்களும் இந்த முகாமில் கலந்து கொண்டது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை பறை சாற்றுவதாக அமைந்தது. அல்ஹம்துலில்லாஹ்!

மாலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இம்முகாமில் அதிகமான சகோதரர்கள் பங்கெடுத்து தங்களின் குருதிகளை கொடையளித்தனர்.

நூற்றுக்கும் அதிகமான சகோதரர்கள் பதிவு செய்ய வந்தபோதும் மருத்துவமனை ஊழியர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க 86 சகோதரர்களை மட்டுமே நிர்வாகிகள் பதிவு செய்திருந்தனர்.

ஆயினும் இரவு 10 மணிவரை 79 சகோதரர்களால் மட்டுமே இரத்ததானம் செய்ய முடிந்தது! அல்ஹம்துலில்லாஹ்..

பெரும்பாலான சகோதரர்கள் தங்களால் இரத்ததானம் செய்ய இயலவில்லை என நிர்வாகிகளிடம் வருத்தம் தெரிவித்தனர்.

இதனையடுத்து இன்ஷா அல்லாஹ் உடனடியாக மீண்டும் ஒரு முகாமினை இப்பகுதியில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.