அதிரையில் நடைபெற்ற கோடைகால பயிற்சி முகாம்!

adirai_summer_camp_2adirai_summer_camp

adirai_summer_camp_3தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கோடைகால பயிற்சி முகாம்கள் ஆண்டுதோறும் மாணவ, மாணவிகளுக்கு மறுமை வெற்றிக்கு சீரிய வழிகாட்டும் கேந்திரங்களாய் திகழ்கின்றன என்பதன் சாட்சிகளே பயனடைந்தவர்களின் பாராட்டுக்களும், பிரார்த்தனைகளும்.

இந்த வருடமும் தமிழக அளவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையின் ஏற்பாட்டில் நடைபெற்ற முகாம்களுடன் கூடுதலாய் அதிராம்பட்டிணத்திலும் இறுதி நேரத்தில் ஓர் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட சுமார் 300 மாணவிகள் பயனடைந்தனர்.

இதில் சின்னஞ்சிறிய கிராமமான புதுப்பட்டிணத்திலிருந்து அதன் சதவிகிதத்திற்கு அதிகமான மாணவிகள் கலந்து பயனடந்தது இனிய நிகழ்வாய் அமைந்தது.

அல்லாஹ்வின் பொருத்தமே குறிக்கோளாய், ரியாத்தில் வாழும் அதிரை அன்வர்தீன் அவர்களின் கடும் முயற்சி மற்றும் புதுப்பட்டிணம் பஷீர் போன்ற சகோதரர்களின் பெரும் பொருளாதார உதவிகள் இவற்றுடன் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் தன்னுடைய இல்லத்தை முகாமிற்காக இன்முகத்துடன் தந்த அன்வர்தீன் மற்றும் அவரின் குடும்பத்தினரின் பெருந்தன்மை, கிளை மற்றும் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகளின் தேனீக்களுக்கு ஈடான உழைப்பு, இவற்றுடன் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமிருந்த மாணவிகளின் வருகை, எளிய முறையில் தோழிகளாய் பழகி பயிற்றுவித்த ஆலிமாக்கள், சிறப்பு அழைப்பாளர்கள், என எல்லா சிறப்புகளும் ஒன்று சேர்ந்து அடுத்த வருடம் ஆண்களுக்கும் சேர்த்து நடத்திடும் எண்ணத்தை வீரியத்துடன் விதைத்துச் சென்றது.

காலையில் சிறார், சிறுமிகளுக்கும், மாலையில் பெரிய மாணவிகளுக்கும் என 2 பிரிவுகளாய், கடந்த 08.05.07 முதல் 22.05.07 வரை 2 வாரங்கள் நடந்த இம்முகாமில் தினமும் ஆலிமா சகோதரிகளான நஜீமா, சித்தி ஜூனைதா இவர்களுடன் சிறப்பு அழைப்பாளர்களான புதுக்கோட்டை மாவட்ட தாயி முஜாஹித் அவர்களும், தெற்கு தஞ்சை மாவட்ட ஏகத்துவ அழைப்பாளர் அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்களும் அவ்வப்போது சிறப்பு வகுப்புகளை நடத்தினர்.

முகாமில் நடத்தப்பட்ட பயிற்சியிலிருந்து தேர்வுகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற சிறார் சிறுமிகளுக்கும், பெரிய மாணவிகளுக்கும் மதிப்புமிகு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன, சிறப்பு பரிசுகளை வெல்ல முடியாதவர்கள் அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும் அனைவருக்கும் இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, நபி வழித் தொழுகை ஆகிய 2 புத்தகங்களும் வழங்கப்பட்டன.

நிறைவு நாள் நிகழ்ச்சியில், தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் சம்பை. சாதிக், மாவட்டச் செயலாளர் ராஜிக், அதிரை கிளை துணைத் தலைவர்; ஹைதர் அலி மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகிக்க அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி பயனுள்ள கல்வி எது ? என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற, புதுப்பட்டிணம் கிளைத் தலைவர் ஹபீப் முஹம்மது அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சிகள் அனைத்தும் அடுத்த வருட கோடைகால கனவுகளுடன் இனிதே நிறைவடைந்தது.