அடுத்த கல்வி ஆண்டு முதல் சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வருகின்றது

அடுத்த கல்வி ஆண்டு முதல் சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வருகின்றதுஅடுத்த ஆண்டு முதல் சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வருகின்றது, சமச்சீர் கல்வி திட்டம் நடைமுறைக்கு வருவதையடுத்து, தனியார் பள்ளி மாணவர்களின் புத்தகச்சுமை பாதிக்கு பாதியாக குறையும் நிலை உருவாகியுள்ளது. பாடங்களின் எண்ணிக்கை 10ல் இருந்து ஐந்தாக குறைய உள்ளது. மெட்ரிக் பத்தாம் வகுப்பிற்கு அமலில் உள்ள செய்முறைத் தேர்வுகளை, அனைத்து மாணவர்களுக்கும் விரிவுபடுத்தவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

வருமா, வராதா என்று தெரியாமல், பெற்றோர் உட்பட அனைத்து தரப்பினரும் குழப்பத்தில் இருந்த நிலையில், அடுத்த கல்வியாண்டில் சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் கருணாநிதி நேற்று முன்தினம் அறிவித்தார். இந்த அறிவிப்பு, கல்வித்துறை வட்டாரத்தில், குறிப்பாக தனியார் பள்ளிகள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு உத்தரவால், சாதக, பாதக அம்சங்கள் குறித்து தனியார் பள்ளி நிர்வாகிகளும், ஆசிரியர்களும் ஆராய்ந்து வருகின்றனர். சமச்சீர் கல்வி வருகையால், தனியார் பள்ளி மாணவர்களுக்குள்ள கல்விச்சுமை பாதிக்கு பாதியாக குறையும். மெட்ரிக் பள்ளிகளில் ஒவ்வொரு வகுப்பிலும் இரு மொழிப்பாடங்கள் இரண்டு தாள்களாக நான்கு பாடங்கள், அறிவியல், கணிதம் பாடங்கள் தலா இரண்டு தாள்களாக நான்கு பாடங்கள் மற்றும் சமூக அறிவியல், பொது அறிவு, கம்ப்யூட்டர் சயின்ஸ் என 11 பாடங்களை மாணவர்கள் படிக்கின்றனர். ஆங்கிலோ இந்தியப் பள்ளிகளில், இந்தப் பாடங்களுடன் மேலும் சில பாடங்கள் நடத்தப்படுகின்றன. இதனால், அரசு பள்ளி மாணவர்களை விட, தனியார் பள்ளி மாணவர்கள் அதிகமான நோட்டு, புத்தகங்களுடன் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் சிறுவர்களுக்குக் கூட 10 பாடங்கள் வரை நடத்தப்படுவதால் மிகவும் சிரமப்படுகின்றனர்.

சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வந்ததும், மொத்த பாடங்களின் எண்ணிக்கை ஐந்தாக குறைந்துவிடும். இதனால், கல்விச்சுமையில் இருந்து மாணவர்களுக்கு விடுதலை கிடைக்கும். 200 மதிப்பெண்களுக்கு படித்து தேர்வெழுதி, அதை நூற்றுக்கு கணக்கிட்டு வழங்கும் முறையும் முடிவுக்கு வருகிறது. மெட்ரிக் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் தலா 200 மதிப்பெண்களுக்கும், அறிவியல் பாடத்தில் 300 மதிப்பெண்களுக்கும் என மொத்தம் 1,100 மதிப்பெண்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. இதேபோல், ஆங்கிலோ இந்திய மாணவர்களுக்கு 1,000 மதிப்பெண்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன.

அனைத்து கல்வி வாரியங்களும் ஒருங்கிணைத்து, பொது கல்வி வாரியம் உருவாக்கப்படுவதால், ஐந்து பாடங்கள், தலா 100 மதிப்பெண்கள் வீதம் 500 மதிப்பெண்கள் என்று பொதுத்தேர்வு முறை நிர்ணயிக்கப்பட உள்ளது. இதனால், தற்போது நடைமுறையில் மாநில பாடத்திட்டத்தின்படி அனைத்து மாணவர்களும், 500 மதிப்பெண்களுக்கு தேர்வெழுத வேண்டும். மெட்ரிக்-ஆங்கிலோ இந்தியப் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது செய்முறைத்தேர்வு நடைமுறையில் இருக்கிறது. இந்த தேர்வை, அனைத்து மாணவர்களுக்கும் விரிவுபடுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, 2011-2012ம் கல்வியாண்டில் இருந்து பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் செய்முறைத் தேர்வுகள் நடைமுறைக்கு வர உள்ளது.

பொது பாடத்திட்டம் தயாரிக்கும் குழுவில் தனியார் ஆசிரியர்களையும் சேர்க்க கோரிக்கை: சமச்சீர் கல்வி குறித்து, முதல்வர் தலைமையில் நேற்று முன்தினம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், சமச்சீர் கல்விக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் நிர்வாகிகள் சங்கத்தின் பொதுச் செயலருமான கிறிஸ்துதாஸ் கலந்து கொண்டார். சமச்சீர் கல்வி நடைமுறைக்கு வருவது குறித்து, அவர் கூறியதாவது: தனியார் பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்று மொழியாக இருக்கிறது. எக்காரணத்தைக் கொண்டும், இதில் மாற்றம் கொண்டு வரக்கூடாது என்ற கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. மேலும், மெட்ரிக் பள்ளிகளில் தற்போது பாடத்திட்டங்கள் எந்த தரத்தில் இருக்கின்றனவோ, அதே தரத்தில் பொது பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளோம். அதையும் அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அனைத்து வகுப்புகளுக்கும் பொதுவான பாடத்திட்டங்களை உருவாக்கும்போது, அந்தப் பணியில் அரசு பள்ளி ஆசிரியர்களுடன், அனுபவம் வாய்ந்த தனியார் பள்ளி ஆசிரியர்களையும் பயன்படுத்திக்கொள்ள அரசு முன்வர வேண்டும். பாடப்புத்தக தயாரிப்புக் குழு அமைக்கப்படும்போது, அதில் தனியார் பள்ளி ஆசிரியர்களை இடம்பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு கிறிஸ்துதாஸ் தெரிவித்தார்.

செய்தி: TNTJ மாணவர் அணி