ஜகாத் ஓர் ஆய்வு - விமர்சனங்களும் விளக்கங்களும்... தொடர்ச்சி....  பாகம் - 2

 

ஜகாத் ஓர் ஆய்வு - விமர்சனங்களும் விளக்கங்களும்

மறு ஆய்வு - முதல் வகை

 

ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மைகள்

காத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்துடையவர்கள் பொதுவாக தங்கள் தரப்பில் எந்தெந்த ஆதாரங்களை எடுத்து வைப்பார்களோ அந்த ஆதாரங்கள் ஏகத்துவம் செப்டம்பர் இதழில் ஆய்வு செய்யப்பட்டிருந்தன. அவற்றில் ஒரு சான்று கூட ஆதாரப் பூர்வமானதல்ல என்பது தெளிவாக விளக்கப்பட்டிருந்தது.


அனாதைகளின் சொத்து
''அனாதைகளின் சொத்து உங்களிடம் இருந்தால் வியாபாரத்தில் முதலீடு செய்யுங்கள்! இல்லாவிட்டால் ஜகாத் அதை விழுங்கி விடும்'' என்ற கருத்தில் அமைந்த எந்த ஒரு ஹதீஸும் சரியானதல்ல என்று நாம் தக்க காரணங்களுடன் ஏகத்துவத்தில் சுமார் பத்து பக்கங்கள் விளக்கி இருந்தோம்.
அல்ஜன்னத் இதழில் இதற்கு எந்த மறுப்பும் கூறவில்லை. இவை சரியான ஹதீஸ் தான் என்று வாதிடவில்லை. இதை அவர்கள் கண்டு கொள்ளவும் இல்லை. இதன் மூலம் அனாதைகள் பற்றிய மேற்கண்ட ஹதீஸ்கள் பலவீன மானவை என்பதை அவர்களும் ஒப்புக் கொண்டு விட்டனர். அல்ஹம்துலில்லாஹ்.
ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஆண்டு தோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்துடையோரின் ஆதாரங்களில் ஒன்று குறைந்து விட்டது.


. இரண்டு ஆண்டுக்கான ஜகாத்தை முன் கூட்டியே வாங்கிய ஹதீஸ்
''அப்பாஸ் (ரலி) அவர்களிடம் இரண்டு வருடங்களுக்கான ஜகாத்தை நபிகள் நாயகம் அவர்கள் முன் கூட்டியே வாங்கினார்கள்'' என்ற ஹதீஸையும் மாற்றுக் கருத்துடைய வர்கள் எடுத்து வைத்து வந்தனர்.
இந்தக் கருத்தில் உள்ள அறிவிப்புக் கள் ஒன்று கூட சரியானது அல்ல என்பதையும், சரியான அறிவிப்பு எது? என்பதையும் சுமார் ஒன்பது பக்கங்களில் நாம் விளக்கினோம்.
ஏகத்துவத்தின் ஆய்வை மறு ஆய்வு செய்த அல்ஜன்னத் இதழ் இதற்கு எந்த மறு மொழியும் கூறவில்லை. இது சரியான ஹதீஸ் தான் என்று வாதிடவில்லை. எனவே இதிலும் நாம் எழுதியதை ஒப்புக் கொண்டு விட்டனர்.


ஒரு ஆண்டு நிறைவடையும் வரை...
ஒருவனுக்கு ஒரு பொருள் கிடைத்தால் ஒரு ஆண்டு நிறைவடையும் வரை அதற்கு ஜகாத் இல்லை என்ற கருத்தில் அமைந்த ஹதீஸ்களையும் மாற்றுக் கருத்துடை யோர் ஆதாரமாகக் காட்டி வந்தனர்.
இந்த ஹதீஸ்களில் எந்த ஒன்றும் சரியானதல்ல என்பதை சுமார் ஐந்து பக்கங்களில் நாம் விளக்கியிருந்தோம்.
நமது கட்டுரையை மறு ஆய்வு செய்த அல்ஜன்னத் இதழ் இதையும் கண்டு கொள்ளவில்லை. இதன் மூலம் நாம் கூறியதை ஒப்புக் கொண்டு விட்டனர்.


அபூபக்கர் ஆட்சியில்....
ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று கூறுவோர் அபூபக்ர் (ரலி) அவர்கள் தொடர்பான ஹதீஸையும் ஆதாரமாகக் காட்டி வந்தனர்.
அந்த ஹதீஸ் சரியானது தான் என்றாலும் அந்த ஹதீஸில் கொடுத்த பொருளுக்கே மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்துக்கு எள்ளளவும் இடமில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக நிரூபித்தோம்.
மறு ஆய்வு செய்த அல்ஜன்னத் அதற்கும் எந்த மறு மொழியும் கூறாததன் மூலம் நமது கருத்தை ஏற்றுக் கொண்டு விட்டனர்.


. கால்நடைகளின் ஜகாத்
கால்நடைகளுக்கான ஜகாத்தை ஆதாரமாகக் காட்டி மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று வாதிட்டு வந்தனர்.
அந்த வாதமும் அர்த்தமற்றது என்பதை ஏகத்துவத்தில் நிரூபித்தோம். இதற்கும் அல்ஜன்னத் மறு ஆய்வில் எந்த மறுப்பும் இல்லை.


தங்கள் தரப்பு வாதத்தை நிரூபிக்க எதையெல்லாம் ஆதாரமாகக் காட்டி வந்தார்களோ அவை அனைத்துமே ஏற்புடையவை அல்ல என்று நாம் எழுதியதற்கு எந்த மறுப்பும் எழுதவில்லை. மறு ஆய்வு செய்பவர்கள், எந்தக் கட்டுரையை மறு ஆய்வு செய்கிறார்களோ அந்தக் கட்டுரையில் கூறப்பட்ட விஷயங்கள் சிலவற்றைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால் அக்கருத்தில் அவர்கள் உடன் படுகிறார்கள்; அதை மறுக்க இயலவில்லை என்பதே பொருள். இதில் அறிவுடையோர் மத்தியில் மாற்றுக் கருத்து இல்லை.


எனவே ஆண்டு தோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதற்குச் சான்றாக மாற்றுக் கருத்துடையவர்கள் இது நாள் வரையிலும் எடுத்துக் காட்டி வந்த மேற்கண்ட ஐந்து சான்றுகளும் ஏற்புடையவை அல்ல என்பதை மாற்றுக் கருத்துடையவர்கள் ஒப்புக் கொண்டு விட்டனர்.


அவர்கள் பதில் சொல்ல முன் வந்த ஒரே விஷயம் அபூதாவூதில் இடம் பெறும் ஹதீஸ் தான். அந்தப் பதிலும் சரியானது தானா? என்பதை இந்த இதழில் பார்ப்போம்.


ஒவ்வொரு ஆண்டும்...
''மனமுவந்து தனது சொத்துக் களுக்கு ஆண்டு தோறும் ஜகாத் கொடுத்து வந்தவன் ஈமானின் ருசியைச் சுவைத்து விட்டான்'' என்ற கருத்தில் அமைந்த ஹதீஸ்களையும் மாற்றுக் கருத்துடையவர்கள் தங்களின் ஆதாரமாகக் காட்டி வருகின்றனர்.
இந்தக் கருத்தில் மூன்று ஹதீஸ்கள் உள்ளன. இம்மூன்றுமே ஆதாரப் பூர்வமானவை அல்ல என்று நாம் ஆய்வு செய்து எழுதியிருந்தோம்.


தப்ரானியில் இடம் பெற்றுள்ள இக்கருத்துள்ள ஹதீஸ் பலவீனமானது என எழுதியிருந்தோம். அதற்கான காரணங்களையும் விளக்கியிருந்தோம்.


அதுபோல் இதே கருத்தில் பைஹகீயில் இடம் பெற்ற மற்றொரு ஹதீஸையும் எடுத்துக் காட்டி அதுவும் பலவீனமானது என்பதைத் தக்க காரணங்களுடன் விளக்கியிருந்தோம். இதே கருத்தில் அபூதாவூதில் இடம் பெற்ற ஹதீஸ் ஒன்றையும் நாம் வெளியிட்டு அதுவும் பலவீனமானது என்பதைத் தக்கச் சான்றுகளுடன் வெளியிட்டு இருந்தோம்.


இது பற்றி அல்ஜன்னத் மறு ஆய்வுக் கட்டுரையில் பின்வருமாறு எழுதியுள்ளனர்.
வருடா வருடம் ஜகாத் வழங்க வேண்டும் என்ற நபி மொழியில் அபூதாவூத் ஹதீஸ் தவிர அபூதாவூதில் இடம் பெற்றிருக்கும் அறிவிப்பாளர் வரிசையைத் தவிர தப்ராணி, பைஹகி, புகாரியின் தாரிக் அல்கபீர், மூஃஜம் ஸஹாபா, அல்ஆஹாது வல்மஃதானி ஆகிய பல்வேறு நூட்களில் உள்ள அறிவிப்பாளர் வரிசையில் பலவீனமானவர்கள் இடம் பெற்றுள்ளதால் மற்றவைகளை நாம் ஆதாரமாகக் காட்டவில்லை. இவ்வாறு பக்கம் 55ல் எழுதியுள்ளனர்.


''ஆண்டு தோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்தில் உள்ள ஹதீஸ்களில் அபூதாவூதில் இடம் பெறும் ஹதீஸ் தவிர வேறு எதுவும் சரியானதாக இல்லை'' என்று தெள்ளத் தெளிவாக அவர்களே அறிவித்து விட்டதால் அவர்களிடம் அபூதாவூதில் இடம் பெற்ற மேற்கண்ட ஹதீஸ் தவிர வேறு ஆதாரம் இல்லை என்பது உறுதியாகின்றது.


இதற்கு மட்டும் தான் அல்ஜன்னத் மறு ஆய்வுக் கட்டுரை மறுப்புக் கூறுகிறது.


அதாவது, ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதை நிலை நாட்டிட மாற்றுக் கருத்துடையவர்கள் எடுத்து வைக்கும் சான்றுகளில் அபூதாவூதில் இடம் பெறும் மேற்கண்ட ஹதீஸைத் தவிர மற்ற அனைத்தும் சான்றுகள் அல்ல என்பதை அவர்களை ஏற்றுக் கொண்டு விட்டனர்.


அபூதாவூதில் இடம் பெறும் ஹதீஸும் அதனடிப்படையில் மாற்றுக் கருத்துடையோரின் வாதமும் சரியானது என்று நிரூபணமானால் மாற்றுக் கருத்துடையோர் கூறுவது சரியான கருத்து என்று ஆகி விடும். அந்த ஹதீஸும் சரியானது அல்ல என்பது நிரூபணமானால் நமது கருத்து சரியானது என்பது உறுதியாகி விடும்.


எனவே மாற்றுக் கருத்துடையோரிடம் கைவசம் உள்ள இந்த ஒரே ஒரு ஆதாரத்தைப் பற்றி அலசினாலே போதுமானது.
''மூன்று காரியங்களை யார் செய்கிறாரோ அவர் ஈமானின் ருசியை சுவைத்து விட்டார். 1. வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நம்பி அல்லாஹ்வை மட்டும் வணங்குதல். 2. ஒவ்வொரு வருடமும் தனது பொருளின் ஜகாத்தை மன விருப்பத்துடன் வழங்குதல். 3. கிழப் பருவம் அடைந்தது, சொறி பிடித்தது, நோயுற்றது, அற்பமானது ஆகியவற்றைக் கொடுக்காமல் நடுத்தரமானதை வழங்குதல் ஆகிய மூன்று காரியங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அபூதாவூதில் இடம் பெறும் இந்த ஹதீஸ் பலவீனமானது என்று நாம் எழுதியதை மறு ஆய்வு செய்து வெளியிட்ட அல்ஜன்னத் கட்டுரையில் கீழ்க்கண்டவாறு தங்கள் வாதத்தைத் துவக்குகின்றனர்.


குற்றச்சாட்டு - 1
'கோடிட்டு காட்டப்பட்ட யஹ்யா பின் ஜாபிர் என்பவர், ஜுபைர் பின் நுஃபைர் என்பவரிடம் நேரிடையாக இந்த ஹதீஸைக் கேட்கவில்லை. இவ்விருவருக்குமிடையில் அறிவிப்பாளர் ஒருவர் விடுபட்டுள்ளார். அதனால் அது தொடர்பறுந்த (முன்கதிஃ) ஹதீஸாகும்.' ஆகையால், இது பலவீனமானது.


பதில் - (ஸஹீஹ் என்பதனை சரிகாணல்)
அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார் என்பது உண்மையே எனினும், அறிவிப்பாளர் விடுபட்டிருப்பதால் மட்டும் ஒரு ஹதீஸ் பலவீனமானது என்ற முடிவுக்கு வரக் கூடாது. விடுபட்டவர் யார்? என அறவே தெரியவில்லை அல்லது விடுபட்டவர் பலவீனமானவர் என கண்டு கொள்ளப்பட்டது போன்ற சூழ் நிலையில் மட்டும் அந்த நபி மொழி பலவீனமானது என்று உறுதியாக முடிவு எடுக்க முடியும்.
விடுபட்டவர் நம்பகமானவர் என வேறு சான்றுகளின் மூலம் அறிந்து கொள்ளப்படுமேயானால், அல்லது வேறொரு தொடரில் அறிவிப்பாளர் விடுபடாமல் அறிவிக்கப்பட்டிருந்தால் அப்போது அதனை பலவீனமானது என ஒதுக்கிவிட முடியாது.
அபூதாவூதில் உள்ள நபி மொழியின் அறிவிப்பாளர் வரிசையில் யஹ்யா பின் ஜாபிர் என்பவருக்கும் ஜுபைர் என்பவருக்குமிடையில் விடுபட்டவர், அப்துர் ரஹ்மான் என்பவர் ஆவார் என்பதை வேறு நூட்களில் இடம் பெற்ற அறிவிப்புகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. 'இவர், இதே அறிவிப்பில் இடம் பெற்ற ஜுபைர் என்பவரின் மகனாவார். இவர் நம்பகமானவர்' என ஹதீஸ் கலை அறிஞர்கள் அனைவரும் கூறுகின்றனர். ஆகையால், இது ஸஹீஹானது தான் என இக்கலை அறிஞர்கள் பலரும், குறிப்பாக சமீபத்தில் தோன்றிய ஹதீஸ் ஆய்வாளர்களில் சிறந்து விளங்கும் நாஸிருத்தீன் அல்பானியும் ஏற்றுள்ளனர். அர்னாவூத் என்பவர் ஹஸன் என்ற தரத்தில் உள்ளது எனக் கூறுகிறார்.
மேலும் அபூதாவூதின் இன்னொரு மூலப் பிரதியில் எந்த அறிவிப்பாளரும் விடுபடாமல் தொடர்ச்சியாகவே அறிவிக்கப் பட்டுள்ளது என்பதை இப்னு ஹஜர் அவர்கள் தன் வசம் இருந்து வந்த வேறொரு மூலப் பிரதியின் மூலம் அல் இஸாபா என்ற நூலில் இனம் காட்டியுள்ளார்.
அல்ஜன்னத் பக்கம் 56


முதல் குற்றச்சாட்டு என்ற தலைப்பில் இவர்கள் எழுதிய விஷயம் நாம் கூறாத ஒன்றாகும். ஆனாலும் இது நம் கவனத்துக்கு வராத ஒன்றாகும்.


அபூதாவூதில் இடம் பெறும் ஹதீஸில் யஹ்யா பின் ஜாபிர் என்பவருக்கும் ஜுபைர் என்பவருக்குமிடையில் அறிவிப்பாளர் தொடர் விடுபட்டுள்ளது என்பதை அவர்களே ஒப்புக் கொண்டு விட்டனர். இங்கே அறிவிப்பாளர் விடுபட்டிருந்தாலும் வேறு ஹதீஸ்களில் அறிவிப்பாளர் விடுபடாமல் அறிவிக்கப்பட்டுள்ளது என்று இவர்கள் கூறுகின்றனர்.


அறிவிப்பாளர்கள் விடுபடாமல் வேறு ஹதீஸ்கள் உள்ளன என்று இவர்கள் எதைக் குறிக்கிறார்கள் தெரிகிறதா?

''வருடா வருடம் ஜகாத் வழங்க வேண்டும்'' என்ற நபி மொழியில், அபூதாவூத் ஹதீஸை தவிர, அபூதாவூதில் இடம் பெற்றிருக்கும் அறிவிப்பாளர் வரிசையைத் தவிர, தப்ராணி, பைஹகி, புகாரியின் தாரீக் அல்கபீர், முஃஜம் ஸஹாபா, அல் ஆஹாது வல் மஃதானி ஆகிய பல்வேறு ஹதீஸ் நூட்களில் உள்ள அறிவிப்பாளர் வரிசையில் பலவீனமானவர்கள் இடம் பெற்றுள்ளதால், மற்றவைகளை நாம் ஆதாரமாகக் காட்டவில்லை.
அல்ஜன்னத் பக்கம் 55


இவ்வாறு எழுதி எவற்றைப் பலவீனமானது என்று இவர்களே ஒப்புக் கொண்டார்களோ அதைத் தான் இங்கே சுட்டிக் காட்டுகிறார்கள்.


அபூதாவூதில் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளாரே என்று கேட்டால் தப்ரானி, பைஹகீ உள்ளிட்ட நூற்களில் அறிவிப்பாளர் விடுபடவில்லையே என்று கூறுகின்றார்கள். இது எப்போது சரியாகும்? தப்ரானி, பைஹகீ அறிவிப்புகள் ஆதாரப்பூர்வமாக இருந்தால் தான் சரியாகும்.


அவை ஆதாரப்பூர்வமானவை அல்ல என்ற இவர்களே ஒப்புக் கொண்ட பிறகு அபூதாவூதில் அறிவிப்பாளர் விடுபட்ட ஹதீஸ் எப்படி ஆதாரப்பூர்வமாக அமைய முடியும்?


அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார் என்பதை நன்றாகத் தெரிந்திருந்தும் - 'மற்ற ஹதீஸ்களில் அறிவிப்பாளர் விடுபடாமல் அறிவிக்கப்பட்டுள்ளார்' என்று தாங்கள் கூறும் மற்ற ஹதீஸ்கள் பலவீனமானது என்பது தெரிந்திருந்தும் - மக்களை ஏமாற்றுவதற்காகவும், எப்படியாவது தங்கள் கூற்றை நிலை நாட்ட வேண்டும் என்ற எண்ணத்திலும் இத்தகைய திரிப்பு வாதத்தைச் செய்துள்ளனர் என்பதில் சந்தேகம் இல்லை.


இப்னு ஹஜருடைய மூலப் பிரதியில் அறிவிப்பாளர் விடுபடாமல் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அல்ஜன்னத் கூறுகின்றது.
இவர்கள் கூறுவது போல் மூலப் பிரதி ஏதும் இருப்பதாகவும், அது தான் சரியானது என்றும் இப்னு ஹஜர் அவர்கள் இஸாபாவில் கூறவில்லை.


அப்படி ஒரு மூலப் பிரதி இருந்திருந்தால் அதன் அடிப்படையில் அச்சிடப்பட்ட பிரதிகள் உலகில் இருக்க வேண்டும். அல்லது அருங்காட்சியகத்தில் அப்பிரதி இருக்க வேண்டும்.


அபூதாவூதுக்கு எத்தனை பிரதிகள் உள்ளதோ அத்தனையிலும் அறிவிப்பாளர் விடுபட்டதாகத் தான் பதிவாகியுள்ளது. இதை அவ்னுல் மஃபூத் ஆசிரியரும் ஒப்புக் கொள்கிறார்.


இப்னு ஹஜர் அவர்கள் தப்ரானியில் உள்ள அறிவிப்பாளர் பட்டியல் அடிப்படையில் அபூதாவூதையும் சேர்த்துக் கூறி விட்டார் என்று தான் கருத முடியுமே தவிர அபூதாவூதின் மூலப் பிரதி என்றெல்லாம் கூறுவது தவறாகும்.


மூலப் பிரதியை யாரும் இப்படி முடிவு செய்வதில்லை. எத்தனையோ நூல்களில் உள்ளதை எடுத்து எழுதும் அறிஞர்கள் சிலதை விட்டு விட்டு, அல்லது அதிகப்படுத்தி எழுதி விடுவதுண்டு. அதை அடிப்படையாகக் கொண்டு மூலப் பிரதியை முடிவு செய்ய மாட்டோம்.


எது அபூதாவூத் என்று உலகில் உள்ளதோ அதற்கு மாற்றமாக யாராவது எடுத்து எழுதினால் அவர் தவறுதலாக எடுத்து எழுதி விட்டார் என்று தான் முடிவு செய்ய முடியும்.


உதாரணமாக, தொழுகையில் அத்தஹிய்யாத் இருப்பில் விரல் அசைக்க வேண்டும் என்ற ஹதீஸ் அபூதாவூதில் இருப்பதாக அல்பானி கூறுகின்றார்கள். ஆனால் அபூதாவூதில் அப்படி ஒரு ஹதீஸ் இல்லை. இதை அல்பானி தவறாகக் கூறி விட்டார் என்று கூறுவீர்களா? அல்லது அல்பானியிடமிருந்த மூலப்பிரதியில் இவ்வாறு இருந்தது என்று கூறுவீர்களா? இப்படி நூற்றுக் கணக்கான உதாரணங்களை எடுத்துக் காட்ட முடியும்.


எனவே முதல் குற்றச்சாட்டு என்ற தலைப்பில் இவர்களே ஒப்புக் கொண்ட படி அறிவிப்பாளர் விடுபட்டதால் இது பலவீனமான ஹதீஸ் என்பது உறுதியாகின்றது.


குற்றச்சாட்டு - 2


அபூதாவூதில் பதிவு செய்யப் பட்டுள்ள மேற்கண்ட ஹதீஸ் பற்றி நாம் எழுப்பிய வாதத்துக்கு குற்றச்சாட்டு 2 என்ற தலைப்பில் அவர்கள் எழுதும் மறுப்பை ஒவ்வொன்றாகக் காண்போம்


அபூதாவூத் அவர்கள் தமக்கு அறிவித்தவரைக் கூறவில்லை. அம்ரு பின் ஹாரிஸ் என்பாரின் குடும்பத்தாரிடம் அப்துல்லாஹ் பின் ஸாலிமுடைய ஏடு இருந்தது. அதில் வாசித்தேன் எனக் கூறி மேற்கண்ட ஹதீஸைப் பதிவு செய்கிறார்கள்.


அப்துல்லாஹ் பின் ஸாலிம் அவர்களின் ஏட்டை அப்துல்லாஹ் பின் ஸாலிமிடமிருந்து அபூதாவூத் வாசிக்கவில்லை. அம்ரு பின் ஹாரிஸ் என்பாரின் குடும்பத்தாரிடம் வாசித்தேன் என்று கூறுகின்றார்.


அம்ரு பின் ஹாரிஸ் குடும்பத்தார் என்றால் யார்? அவர்களின் நம்பகத் தன்மை எத்தகையது? அப்துல்லாஹ் பின் ஸாலிம் என்பாரின் ஏடு என்று கூறி வேறு எதையாவது காட்டக் கூடியவர்களா? என்ற விபரம் ஏதுமில்லை.


ஒருவரின் குடும்பத்தார் என்பது அவரது தாய், தந்தை, அண்ணன், தம்பி, மனைவி, மக்கள் என பலரையும் குறிக்கக் கூடியது. அம்ரு பின் ஹாரிசுடைய குடும்பத்தார் யார் என்பதும், அவர்களின் நம்பகத் தன்மை எத்தகையது என்பதும் நிரூபணமாக வில்லை என்பதால் இது பலவீனமானதாகும்.


மேலும் அம்ரு பின் ஹாரிஸ் என்பவரின் குடும்பத்தினர் என்று கூறப்படுவதில், அம்ரு பின் ஹாரிசுடைய நம்பகத்தன்மையே நிரூபிக்கப் படவில்லை என்பதை முன்னரே கண்டுள்ளோம்.


நம்பகத்தன்மை நிரூபிக்கப்படாத ஒருவரின் குடும்பத்தார் வைத்திருந்த ஏட்டில் வாசித்தேன் என்று அபூதாவூத் கூறுவதிலிருந்தே இதன் பலவீனம் தெளிவாகத் தெரிகின்றது.


ஏகத்துவம் - செப்டம்பர் 2005


ஏகத்துவத்தில் நாம் செய்த விமர்சனத்தை மேலே முழுமையாகத் தந்துள்ளோம்.
இதில் அம்ரு பின் ஹாரிசுடைய நம்பகத் தன்மையே நிரூபிக்கப் படவில்லை என்பதை முன்னரே கண்டோம் என்று குறிப்பிட்டுள்ளோம். இவரைப் பற்றி ஏகத்துவம் இதழில் பக்கம் 43ல் எழுதியதைத் தான் இவ்வாறு குறிப்பிட்டோம்.


''இவரைப் பற்றி விபரம் கிடைக்கவில்லை. தஹபீ அவர்கள் இவரது நேர்மை நிரூபணமாக வில்லை என்று கூறுகின்றார்கள். இவர் நம்பகமானவரா? இல்லையா என்பது தெரியாத நிலையில் மேற்கண்ட ஹதீஸ் மேலும் பலவீனமடைகின்றது''. இது தான் செப்டம்பர் இதழில் 43ஆம் பக்கத்தில் நாம் எழுதியது.


அதாவது அபூதாவூதில் இடம் பெறும் ஹதீஸ் பலவீனமானது என்பதற்கு நாம் கூறிய பல காரணங்களில் அம்ரு பின் ஹாரிஸ் என்பார் யார் என்று தெரியவில்லை என்பதும் ஒரு காரணமாகும்.


தஹபீ கூறியது என்ன?
அம்ரு பின் ஹாரிஸ் என்பார் பற்றி நாம் எடுத்துக் காட்டிய இந்த விமர்சனம் தவறானது என்று கூறி மறு ஆய்வுக் கட்டுரையில் பின்வருமாறு கூறியுள்ளனர்.


அம்ர் பின் ஹாரிஸின் நம்பகத்தன்மை நிரூபணம் ஆகவில்லை என தஹபி கூறுவதாக அவர்கள் எழுதிய தகவல் உண்மைக்குப் புறம்பானதாகும். தஹபி அவர்கள் எந்த இடத்திலும் அவ்வாறு கூறவில்லை. மாறாக மீஜானுல் இஃதிலால் என்ற நூலில் அவர் கூறியதைத் திரித்து மொழி பெயர்ந்துள்ளனர். தஹபி கூறிய வாசகம் "அவரது நேர்மை அறியப் படவில்லை."


நேர்மை அறியப்படவில்லை என்ற வாசகத்திற்கு நேர்மை நிரூபணமாக வில்லை என்ற வாசகத்திற்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு. அறியப் படவில்லை என்ற வாசகத்தின் மூலம் நம்பகமானவரா என்பது தஹபிக்குத் தெரியாது என்றே புரிந்து கொள்ள வேண்டும். நிரூபணம் ஆகவில்லை என்று அர்த்தம் செய்வதாக இருந்தால் ........ என்று கூறியிருக்க வேண்டும். பொய்யுரைக்கக் கூடியவர், மனன சக்தி குன்றியவர், மறுக்கப்பட வேண்டியவர். போன்ற அவரைக் குறைப்படுத்துகின்ற காரணங்களையும் தஹபீ அறிய வில்லை. எனவே தான் அவரது நேர்மை அறியப் படவில்லை என்று கூறி முடித்துக் கொண்டார்.


என்று மறு ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர்.

நேர்மை அறியப்படவில்லை என்பதற்கும் நேர்மை நிரூபணமாக வில்லை என்பதற்கும் இவர்கள் கூறுவது போல் மிகப் பெரிய வேறுபாடு ஒன்றும் கிடையாது.


நேர்மை அறியப்படவில்லை என்ற வாசகத்துக்கு, தஹபீக்கு அவரைப் பற்றி தெரியாது என்று தான் பொருள் கொள்ள வேண்டும் என்று அல்ஜன்னத் கூறுகிறது.


அறியப்படாதவர் என்று ஒருவரைப் பற்றிக் கூறினால் அதன் பொருள் என்ன என்பதை இவர்கள் மறு ஆய்வுக் கட்டுரை வெளியிடுவதற்கு முன்னரே, பல சந்தர்ப்பங்களில் நாம் விளக்கியுள்ளோம்.


அவரது நேர்மை அறியப் படவில்லை என்று தஹபீ கூறுகிறார் என்றால் தஹபீயைப் பொறுத்த வரை அவரது நேர்மை நிரூபணமாகவில்லை என்று தான் பொருள். இதைப் பெரிய பாரதூரமான விஷயம் போல் குறிப்பிட்டுள்ளனர். எனினும் இவர்கள் திருப்திக்காக நேர்மை அறியப் படவில்லை என்றே குறிப்பிடுகிறோம்.


நேர்மை அறியப்படவில்லை என்று பொருள் கொள்வதால் நாம் எடுத்து வைக்கும் வாதத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை.
'அறியப்படவில்லை என்று யார் சொல்கிறாரோ அவருக்கு இவரைப் பற்றி தெரியவில்லை என்பது தான் பொருள்; ஒருவரைப் பற்றி ஒரு அறிஞருக்குத் தெரியாவிட்டால் அவரைப் பற்றி யாருக்குமே தெரியாது என்று பொருள் கொள்ளக் கூடாது' என்பதும் ஏற்கனவே நாம் கூறிவரும் விஷயம் தான். அந்த அடிப்படையில் இந்த வாதத்தை நாம் எழுப்பவில்லை.


ஒரு அறிவிப்பாளரைப் பற்றி 'அறியப்படாதவர்' என்று ஒரு அறிஞர் விமர்சிக்கிறார். வேறு யாராவது இவரைப் பற்றி அறிந்திருக்கிறார்களா என்று நாம் தேடிப் பார்க்கிறோம். எந்த அறிஞரும் அவரைப் பற்றியும் அவரது நம்பகத் தன்மை பற்றியும் அறிந்திருப்பதாக நமக்குத் தகவல் கிடைக்க வில்லை. இப்படி இருந்தால் என்ன நிலை என்பது தான் கேள்வி. இந்த அடிப்படையில் தான் நாம் வாதத்தை எடுத்து வைத்தோம்.


'இவரது நாணயம், நேர்மை எனக்குத் தெரியாது' என்று தஹபீ கூறுகிறார். மற்ற அறிஞர்கள் இவரது நாணயத்தைப் பற்றியும் நேர்மையைப் பற்றியும் கூறியுள்ளார்களா? என்பது தான் கேள்வி.


இதைத் தான் நாம் கேட்கிறோம் என்று தெரிந்திருந்தும் ஒருவருக்குத் தெரியாவிட்டால் வேறு யாருக்கும் தெரியாமல் போய் விடுமா? என்று அல்ஜன்னத் தன் மறு ஆய்வுக் கட்டுரை விஷமத்தனமாகக் கேட்கின்றது.


தஹபீ அவர்களுக்குத் தெரியா விட்டால் வேறு யாருக்கும் தெரியாது என்று நாம் கூறவில்லை. வேறு யாருக்கும் அம்ரு பின் ஹாரிஸ் என்பவரின் நம்பகத்தன்மை தெரியும் என்று கூறுவார்களானால் அந்தக் கூற்றுக்களை எடுத்துக் காட்ட வேண்டும் என்பது தான் நமது கேள்வி.

 

இதற்குப் பதிலாக கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளனர்.


மேலும், ஹிஜ்ரி 720ல் தங்களது 48வது வயதில் எழுதிய அல் காஷிஃப் என்ற நூலில் அமர் பின் ஹாரிஸ் நம்பகமானவராக கருதப்பட்டுள்ளார் என்று பதிவு செய்து, தனது முந்திய கருத்தை மாற்றிக் கொண்டுள்ளார். இச்செய்தி அவர்களுக்கு குற்றம் சுமத்துபவர்களுக்கு எதிராக அமைந்திருப்பதால் வசதியாக அதை மறைத்தே விட்டார்கள். காஷிஃபில் பதிவான செய்தி இதோ!


...அம்ர் பின் ஹாரிஸ் நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார். - அல் காஷிஃப் 2/73
என்று எழுதி இதன் அரபி மூலத்தையும் வெளியிட்டுள்ளனர்.


அதாவது 'இவரது நேர்மை அறியப்படவில்லை' என்று எழுதிய தஹபீ அவர்கள் முன்னர் இவ்வாறு எழுதி விட்டுப் பின்னர் 'நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார்' என்று இவரைப் பற்றி எழுதி தனது கருத்தை மாற்றிக் கொண்டுள்ளார் என்பது இவர்களின் வாதம்.


அதாவது அம்ர் பின் ஹாரிஸின் நேர்மை அறியப்படவில்லை என்பது தஹபீயின் முந்தைய கூற்று.


நம்பகமானவராகக் கருதப் பட்டுள்ளார் என்பது அவரது பிந்தைய கருத்து என்று கூறுகின்றனர்.


இதைத் தொடர்ந்து அல்ஜன்னத் மேலும் பின்வருமாறு எழுதுகிறது.


அறிவிப்பாளர்கள் ஆய்வில் தஹபீயை விட சிறந்து விளங்கிய இப்னுஹிப்பான் அவர்கள் அம்ர் பின் ஹாரிஸ் நேர்மையான அறிவிப்பாளர் என்று ஃதிகாத் எனும் தனது நூலில் சான்று தருகிறார். என்றும் மறு ஆய்வுக் கட்டுரை கூறுகிறது.


இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள் என்றால் அம்ர் பின் ஹாரிஸின் நேர்மை அறியப்படவில்லை என்று ஒரு இடத்தில் தஹபீ கூறினாலும் மற்றொரு இடத்தில் அவரைப் பற்றி நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார் என்று கூறுவதாலும்,
இப்னு ஹிப்பான் அவர்கள் தமது ஸிகாத் எனும் நூலில் இவரைப் பற்றி நம்பகமானவர் என்று கூறியுள்ளதாலும்
அம்ர் பின் ஹாரிஸ் நம்பகமானவர் தான், அறியப்படாதவர் அல்ல என்று பதிலளித்துள்ளனர்.


இவரது நம்பகத்தன்மை அறியப் படவில்லை என்று தஹபீ கூறினாலும் இப்னு ஹிப்பான் 'நம்பகமானவர்' என்று இவரைப் பற்றிக் கூறியுள்ளாரே! அது போதாதா? என்பதற்கான விளக்கத்தை முதலில் பார்ப்போம்.


இப்னு ஹிப்பான் பார்வையில் நம்பகமானவர்
இப்னு ஹிப்பான் அவர்கள் மிகச் சிறந்த ஆய்வாளர் என்றாலும் இந்த விஷயத்தில் அவர் தவறான அளவுகோலைப் பயன்படுத்துகிறார்.


இந்த அளவுகோலை ஹதீஸ் கலை அறிஞர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. சாதாரணமாகச் சிந்தித்துப் பார்த்தாலும் அந்த அளவுகோல் தவறானது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.


நம்பகமானவர் என்று ஒருவரைப் பற்றிக் கூறுவதாக இருந்தால் அவரது நம்பகத் தன்மையை அறிஞர்கள் உறுதிப்படுத்தி யிருக்க வேண்டும் என்பது மற்ற அறிஞர்களின் அளவு கோலாகவுள்ளது.


ஒருவரை நம்பகமானவர் என்று முடிவு செய்ய இப்னு ஹிப்பான் வேறு அளவுகோலைப் பயன்படுத்துகிறார். எந்த அறிவிப்பாளரைப் பற்றி யாரும் குறை கூறவில்லையோ, அவரை நம்பகமானவர் என்று முடிவு செய்து விடுவார். யாராலும் குறை கூறப்படாதவர்கள் என்பதில் நம்பகமான அறிவிப்பாளர் களும் அடங்குவர். யாராலும் குறை கூறப்படாதவர் என்பதில் யாரென்று அறியப் படாதவரும் அடங்குவர்.


அதாவது ஒருவரைப் பற்றிக் குறை கூறுவதாக இருந்தால் அவரைப் பற்றித் தெரிந்தால் தான் குறை கூற முடியும்.
அமெரிக்காவில் வசிக்கும் இப்ராஹிம் என்பவரைப் பற்றி ஒரு பேச்சு வருகிறது. இவரை நாமும் அறியவில்லை. வேறு யாரும் இவரைப் பற்றி எதையும் கூறி நாம் கேள்விப் பட்டதில்லை. இந்தப் பெயர் கற்பனையாகக் கூட இருக்கலாம். ஆனாலும் இவரைப் பற்றி யாரும் குறை கூறாததால் இப்னு ஹிப்பான் வாதப்படி நம்பகமானவர் ஆகி விடுவார்.


நம்பகமானவர் என்று ஒருவரைப் பற்றி இப்னு ஹிப்பான் கூறினால் உண்மையில் நம்பகமானவராக இருக்கலாம். (மற்றவர்கள் அவரைப் பற்றிக் கூறியுள்ளதைத் தேடி இதை உறுதி செய்ய வேண்டும்) அல்லது யாரென்று அறியப்படாதவராகவோ, கற்பனைப் பெயராகவோ கூட இருக்கலாம்.


எனவே அம்ரு பின் ஹாரிஸ் நம்பகமானவர் என்று இப்னு ஹிப்பான் கூறியிருப்பதை இவர்கள் ஆதாரமாகக் காட்டி, தவறான தகவலை ஆய்வு என்ற பெயரில் வெளியிட்டுள்ளனர். இதை அல்ஜன்னத் ஏடும் தெரிந்து வைத்துக் கொண்டு பின்வருமாறு சப்பைக் கட்டுகிறது.


ஒருவர் நம்பகமானவர் என்று கூறுவதில் இப்னு ஹிப்பான் கவனக் குறைவாகவும், தனக்கு தெரியாதவர்களையும் கூட நம்பகமானவர் என்று கூறிவிடுவார் என்றொரு குற்றச்சாட்டு இப்னு ஹிப்பான் மீது கூறப்படுகிறது. அதனைக் காரணம் காட்டி அம்ர் பின் ஹாரிஸ் விஷயத்தில் இப்னு ஹிப்பான் கூறிய கருத்தை புறக்கணிக்க முயற்சி செய்யலாம். எனவே, அதற்கான பதிலையும் நாம் சொல்லித் தான் ஆக வேண்டும்.


இக்குற்றச்சாட்டு பொதுவானதாக எடுத்துக் கொள்ள முடியாது. அவர் பயன்படுத்துகின்ற வாசகத்தின் அடிப்படையில் தான் முடிவு செய்ய வேண்டும் என அல் முஅல்லிம் அல் யமானி என்ற இக்கால அறிஞர். அத்தன்கீப் பிமாஃபி தஃனீபில் கவ்ஃதரி என்ற தனது நூலின் முதல் பாகத்தில் 66,437,438 ஆகிய பக்கங்களில் கூறி விட்டு, இப்னு ஹிப்பான் நம்பகமானவர் அவர்கள் என்று கூறப்படுவோரை என்று கூறுவோரை ஐந்தாக வகைப்படுத்துகிறார்.
அல்ஜன்னத் - பக்கம் 60


(அவர்கள் எழுதியதை அப்படியே வெளியிட்டுள்ளோம். இது புரியா விட்டால் நாங்கள் பொறுப்பல்ல)


இதைத் தொடர்ந்து அரபியில் அரைப் பக்கம் எதையோ எழுதி தமிழாக்கமும் செய்துள்ளனர். இதில் இவர்கள் கூறும் சாராம்சம் என்னவென்றால் இப்னு ஹிப்பான் அவர்கள் வெறும் நம்பகமானவர் என்று கூறுவதற்கும் முஸ்தகீமுல் ஹதீஸ் (ஹதீஸை உறுதியாக அறிவிப்பவர்) என்று கூறுவதற்கும் வேறுபாடு உள்ளது.


வெறுமனே நம்பகமானவர் என்று அவர் கூறினால் அதில் யாரென்று தெரியாதவர்களும் இருக்கலாம்.
ஆனால் முஸ்தகீமுல் ஹதீஸ் (ஹதீஸை உறுதியாக அறிவிப்பவர்) என்று கூறினால் அவர் நம்பகமானவர் தான். இந்த வார்த்தையைத் தான் அம்ர் பின் ஹாரிஸ் விஷயத்தில் இப்னு ஹிப்பான் பயன்படுத்தியுள்ளார் என்று அல்ஜன்னத் ஏடு வாதிக்கிறது.


இப்னு ஹிப்பானின் ஐந்து வகையான வார்த்தைகளும் ஐந்து படித்தரங்களைக் கொண்டது என்று சொன்னவர் யார்? ஹதீஸ் கலை அறிஞர்கள் யாருடைய கூற்றையும் அவர்கள் எடுத்துக் காட்டவில்லை. இக்கால அறிஞர் என்று கூறி அல் முஅல்லிம் அல் யமானி இப்படிக் கூறுகிறார் என்று அவரது கூற்றை அரபியில் வெளியிட்டுள்ளனர்.


இவர்கள் தமிழில் எழுதுவது போல அரபியில் ஒருவர் எதையாவது எழுதினால் அதுவே ஆதாரமாகி விடுமா? யாரென்று அறியப்படாத அல் முஅல்லிம் அல் யமானி இப்படிக் கூறியது சரியா என்று இவர்கள் ஆய்வு செய்திருக்க வேண்டாமா? அவர் அறிஞராக இருக்கட்டும். அவர் கூறியது சரியாகவும் இருக்க வேண்டும். எந்தச் சான்றுகளில் அடிப்படையில் இவ்வாறு முடிவு செய்தார் என்பதையும் பார்க்க வேண்டும்.


தங்களுக்குச் சாதகமாக இருக்கிறது என்பதற்காக யாராவது எழுதியிருந்தால் அதையும் சான்றாகக் காட்டி மக்களை ஏமாற்றுவது தான் மறு ஆய்வா?


இவர்கள் கூறுகின்ற இவர்களின் வாதம் முற்றிலும் தவறானதாகும். அம்ரு பின் ஹாரிஸ் என்பரைப் பற்றி கூறும்போது முஸ்தகீமுல் ஹதீஸ் (ஹதீஸை உறுதியாக அறிவிப்பவர்) என்று கூறியதைப் போல் பொய்யர்கள் பலருக்கும், பலவீனமானவர்களுக்கும் இதே வார்த்தையை அவர் பயன்படுத்தியுள்ளார்.


இவ்வாறு பலவீனமான நூற்றுக் கணக்கான அறிவிப்பாளர்கள் பற்றி இந்த வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்.


உதாரணத்திற்காக சிலவற்றைக் கூறுகின்றோம்.
இம்ரான் இப்னு இஸ்ஹாக் என்பவர் யாரென்று அறியப் படாதவராக இருந்தும் இவரைப் பற்றி முஸ்தகீமுல் ஹதீஸ் (ஹதீஸை உறுதியாக அறிவிப்பவர்) என்று இப்னு ஹிப்பான் கூறியுள்ளார். நூல்: லிஸானுல் மீஸான் 4/343


வலீத் பின் அப்துல் மலிக் அல்ஹிரானி என்பவரைப் பற்றி முஸ்தகீமுல் ஹதீஸ் (ஹதீஸை உறுதியாக அறிவிப்பவர்) என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். ஆனால் இவர் பலவீனமானவர். நூல்கள்: ஹைஸமியின் மஜ்மவுஸ் ஸவாயித் 1/333, பைலுல்கதீர் 4/109


அஹ்மத் பின் புதைல் என்பாரைப் பற்றியும் முஸ்தகீமுல் ஹதீஸ் (ஹதீஸை உறுதியாக அறிவிப்பவர்) என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். இவரும் பலவீனமானவர். நூல்: மஜ்மவுஸ் ஸவாயித் 9/119


ரபீவு பின் அல்ஹத்தான் என்பவர் நிராகரிக்கப்பட்டவராக இருந்தும் அவரைப் பற்றியும் முஸ்தகீமுல் ஹதீஸ் (ஹதீஸை உறுதியாக அறிவிப்பவர்) என்று கூறியிருக்கிறார். நூல்: லிஸானுல் மீஸான் 2/444


முஹம்மத் பின் ஷுரஹ்பீல் என்பவர் பலவீனமானவராக இருந்தும் அவரைப் பற்றி முஸ்தகீமுல் ஹதீஸ் (ஹதீஸை உறுதியாக அறிவிப்பவர்) என்று கூறியிருக்கிறார். லிஸானுல் மீஸான் 5/199


ஹதீஸ்களை இட்டுக் கட்டும் மர்வான் பின் முஹம்மத் என்பவரைப் பற்றியும் முஸ்தகீமுல் ஹதீஸ் (ஹதீஸை உறுதியாக அறிவிப்பவர்) என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்.


தானே பலவீனமானவர் என்று யாரைக் கூறினாரோ அதே மர்வான் பின் முஹம்மத் என்பாரைப் பற்றியும் முஸ்தகீமுல் ஹதீஸ் (ஹதீஸை உறுதியாக அறிவிப்பவர்) என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்.


இஜ்மா பின் ரூஹ் என்பவர் பலவீனமானவராக இருந்தும் இவரைப் பற்றியும் இவ்வாறே முஸ்தகீமுல் ஹதீஸ் (ஹதீஸை உறுதியாக அறிவிப்பவர்) என்று கூறியிருக்கிறார்.


இப்படி பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம்.
எனவே அம்ரு பின் ஹாரிஸ் என்பவரின் நேர்மை அறியப் படவில்லை என்று தஹபீ கூறியதற்கு எதிராக இப்னு ஹிப்பானின் கூற்றைக் கொண்டு வந்து நிறுத்துவது ஆய்வு வரம்புக்கு எதிரானதாகும்; நேர்மையற்றதாகும்.


இப்னு ஹிப்பான் அவர்கள் நம்பகமானவர் என்று நற்சான்று அளித்த நூற்றுக்கணக்கானோருக்கு எந்தக் குறிப்பும் எந்த அறிஞருக்கும் கிடைக்கவில்லை. அது போல் அம்ரு பின் ஹாரிஸ் என்பவர் பற்றிய குறிப்பும் கிடைக்கவில்லை.


எனவே இப்னு ஹிப்பான் நம்பகமானவர் (ஸிகத்) என்று கூறுவதும், ஹதீஸ்களை உறுதியாக அறிவிப்பவர் (முஸ்தகீமுல் ஹதீஸ்) என்று கூறுவதும், ஒரே தரத்தில் உள்ளது தான். யாரென்று தெரியாதவர்களுக்கும் இவ்விரு வார்த்தைகளையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.


அது போல் அம்ர் பின் ஹாரிஸுக்கும் இதே வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கின்றார். ஆகவே இப்னு ஹிப்பான் கூறியதை ஆதாரமாகக் கொண்டு அம்ர் பின் ஹாரிஸை நம்பகமானவர் என்று கூறுவது மோசடியான ஆய்வாகும்.


தஹபீ முரண்படுகிறாரா?

இவரது 'நேர்மை அறியப் படவில்லை' என்று கூறிய தஹபீ அவர்கள் 'வுஸ்ஸிக' (இவர் நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார்) என்று கூறுவதை ஆதாரமாகக் காட்டியுள்ளனர்.


உண்மையில் இந்த வாதமும் ஹதீஸ் கலை பற்றிய இவர்களின் அறியாமை காரணமாகவே எடுத்து வைக்கப்படுகிறது.
'நம்பகமானவராகக் கருதப் பட்டுள்ளார்' என்று தஹபீ கூறினால் அதன் பொருள் அவர் நம்பகமானவர் என்பது அல்ல. மாறாக 'இப்னு ஹிப்பானால் நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார்' என்பதே இதன் கருத்தாகும்.


அதாவது யாரென்று தெரியாதவர் களை இப்னு ஹிப்பான் நம்பகமானவர் பட்டியலில் சேர்த்திருந்தால் அவரைப் பற்றி தஹபீ கூறும் போது 'நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார்' என்று கூறுவார். இதன் கருத்து 'இப்னு ஹிப்பானைத் தவிர யாரும் இவரை நம்பகமானவர் என்று கூறவில்லை' என்பது தான். ஒருவரது சொல் வழக்கு என்ன என்பதை ஆராயாமல் மேலோட்டமாகப் பார்த்ததால் தஹபீ முரண்பட்டுப் பேசுவதாக எண்ணிக் கொண்டு அது முன்னர் கூறியது; இது பின்னர் கூறியது என்று சொந்த ஊகத்தின் அடிப்படையில் தங்கள் மறு ஆய்வுக் கட்டுரையில் கூறியுள்ளனர்.


எனவே தஹபீ அவர்கள் 'இவரது நேர்மை அறியப்படவில்லை' என்று கூறுவதும் 'நம்பகமானவராக (சிலரால்) கருதப்பட்டுள்ளார்'  என்பதும் ஒரே கருத்தைக் கூறும் இரண்டு சொற்றொடர்கள் தான்.


ஹதீஸ் கலை பற்றிய ஞானக் குறைவு காரணமாக இவ்வாறு யாரென்று அறியப்படாத ஒருவரை நம்பகமானவராக ஆக்கி, தங்கள் வாதத்தை நிலை நாட்ட முயன்றுள்ளனர்.


இவர்களே ஒப்புக் கொள்ளும் காஷிஃப் நூலின் முன்னுரையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

இப்னு ஹிப்பான் மட்டும் நம்பகமானவர் என்று யாரைக் கூறியுள்ளாரோ அவர்களைப் பற்றி, தஹபீ குறிப்பிடும் போது சில நேரம் 'ஸிகத்' என்பார். சில நேரம் 'ஸதூக்' என்பார். சில நேரம் 'வுஸ்ஸிக' என்பார். (காஷிஃப் முன்னுரை)


அம்ரு பின் ஹாரிஸ் என்பவரைப் பற்றி ஏகத்துவம் செப்டம்பர் இதழுக்காக நாம் ஆய்வு செய்த போது, தஹபீ அவர்கள் அவரைப் பற்றி 'வுஸ்ஸிக' (நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார்) என்று குறிப்பிடுவது நமக்குத் தெரியும். தஹபீ அவர்களின் இந்தச் சொல் வழக்கு அறிஞர்களுக்குத் தெரியும் என்பதால் அதைச் சுட்டிக் காட்டி விளக்காமல் விட்டுவிட்டோம்.


மறு ஆய்வு என்ற பெயரில் அறியாமையை வெளிப்படுத்துவார்கள் என்று நாம் எண்ணியிருந்தால் அப்போதே அதைப் பற்றியும் விளக்கியிருப்போம்.


ஒருவரைப் பற்றி 'வுஸ்ஸிக' (நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார்) என்ற சொல்லை தஹபீ பயன் படுத்தினால் அவரை நம்பகமானவர் என்று தஹபீ முடிவு செய்துவிட்டார் என்பது பொருளல்ல. இதற்கு தஹபீ அவர்களின் காஷிஃப் நூலிலிருந்தே ஆதாரம் தருகிறோம்.


ரைஹான் பின் யஸீத் என்பவரைப் பற்றி தஹபீ அவர்கள் குறிப்பிடும் போது, 'இவர் (வுஸ்ஸிக) நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார். இவர் யாரென்று அறியப்படாதவர்' என்று கூறுகிறார்கள். நூல்: காஷிஃப் 1/399


அப்துல்லாஹ் பின் அபீபக்ர் என்பாரைப் பற்றி கூறும் போது (வுஸ்ஸிக) நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார் எனக் கூறிவிட்டு, இவர் யாரென அறியப்படாதவர் என்றும் கூறுகிறார்கள். நூல்: காஷிஃப் 1/541


உமாரா பின் ஸவ்பான் என்பாரைப் பற்றிக் கூறும் போது நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார் (வுஸ்ஸிக) என்று கூறிவிட்டு, அவர் யாரென அறியப்படாதவர் என்றும் கூறுகிறார். நூல்: காஷிஃப் 2/53


யஃலா பின் அபீயஹ்யா என்பாரைப் பற்றிக் கூறும் போது நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார் (வுஸ்ஸிக) என்று கூறி விட்டு, இவர் யாரென அறியப்படாதவர் என்றும் கூறுகிறார்.


ஒருவர் அறியப்படாதவராகவும் நம்பகமானவராகவும் ஒரே நேரத்தில் எப்படி இருக்க முடியும்? அவர் நம்பகமானவர் எனக் கூறினால் அவர் அறியப்பட்டவராக ஆகிவிடுகிறார். அவர் அறியப்படாதவர் எனக் கூறினால் அறியப்படாத ஒருவர் நம்பகமானவரா இல்லையா என்று உறுதியாகக் கூற முடியாது.


ஒருவரைப் பற்றி 'அறியப்படாதவர்' என்றும் 'நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார்' என்றும் இரண்டு விதமாகக் கூறுவதால் தஹபீ அவர்கள் முரண்பட்டு கூறுகிறார் என்று குழம்பத் தேவையில்லை. இப்னு ஹிப்பான் போன்றவர்களால் நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார் என்ற தகவலைத் தான் அவர் தெரிவிக்கிறாரே தவிர தஹபீ அவர்கள் அவரை நம்பக மானவர் என்று முடிவு செய்யவில்லை என்று இதைப் புரிந்த கொண்டால் இதில் முரண்பாடு ஏதும் இல்லை.


இப்னு ஹிப்பானால் நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார்; ஆனால் உண்மையில் அவர் அறியப்படாதவர் என்று பொருள் கொள்ளும் போது முரண்பாடு இல்லாமல் அவரது கூற்றைப் புரிந்து கொள்கிறோம்.


இப்படி ஏராளமான இடங்களில் தஹபீ குறிப்பிட்டுள்ளார். அறியப்படாதவர்களையும், பலவீனமானவர்களையும் 'நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார்' (வுஸ்ஸிக) என்று கூறியுள்ளார். உதாரணத்துக்குச் சில இடங்களைச் சுட்டிக் காட்டுகிறோம்.


ஹுரைஷ் பின் ஸலீம் என்பவரைப் பற்றிக் கூறும் போது நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார் (வுஸ்ஸிக) என்று கூறிவிட்டு, இவரைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும் தஹபீ கூறுகிறார். நூல்: காஷிஃப் 1/319


ஹுஸைன் பின் முத்ரிக் என்பாரைப் பற்றி, இவர் நம்பகமானவராக கருதப்பட்டுள்ளார் (வுஸ்ஸிக) என்று கூறிவிட்டு, இவரை பெரும் பொய்யர் என்றும் கூறுகிறார். நூல்: காஷிஃப் 1/330


ஹகம் பின் அதிய்யா என்பரைப் பற்றி நம்பகமானவராக கருதப் பட்டுள்ளார் (வுஸ்ஸிக) என்று கூறி விட்டு, அவர் பலமானவர் அல்ல என்றும் கூறுகிறார். நூல்: காஷிஃப் 1/345


ஹைஸமா பின் அபீஹைஸமா என்பவரைப் பற்றிக் கூறும் போது நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார் (வுஸ்ஸிக) என்று கூறிவிட்டு, இவரைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும் கூறுகிறார். நூல்: காஷிஃப் 1/377


ஸுபைர் பின் கரீப் என்பவரைப் பற்றிக் கூறும் போது நம்பகமான வராகக் கருதப்பட்டுள்ளார் (வுஸ்ஸிக) என்று கூறிவிட்டு, இவர் பலமான அறிவிப்பாளர் அல்லர் எனவும் கூறுகிறார். நூல்: காஷிஃப் 1/401


ஆஸிம் பின் அபின்னுஜூத் என்பவரைப்பற்றி நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார் (வுஸ்ஸிக) என்று கூறிவிட்டு, இவர் நினைவாற்றல் குறைந்தவர் எனவும் கூறுகிறார். நூல்: காஷிஃப் 1/518


அப்துல்லாஹ் பின் அபீ ஜஃபர் என்பார் பலவீனராக இருந்தும் நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார் (வுஸ்ஸிக) என்று கூறுகிறார்.நூல்: காஷிஃப் 1/543


அப்துல்லாஹ் பின் ஹுஸைன் அல் அஸ்தீ என்பார் நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார் (வுஸ்ஸிக) என்று கூறிவிட்டு, 'அலீ (ரலி) மரணிக்கவில்லை; திரும்பி வருவார்கள் என்பது அவரது கொள்கையாக இருந்தது' எனவும் கூறுகிறார். நூல்: காஷிஃப் 1/545


உமர் பின் இப்ராஹீம் அல் அஸ்தீ என்பாரைப் பற்றிக் கூறும் போது, நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார் (வுஸ்ஸிக) என்று கூறி விட்டு, இவரை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது என்றும் கூறியுள்ளார். நூல்: காஷிஃப் 2/55


அம்ரு பின் கைஸ் என்பாரைப் பற்றிக் கூறும் போது, நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார் (வுஸ்ஸிக) என்று கூறிவிட்டு, இவரிடம் தவறான அறிவிப்புக்கள் உள்ளன என்றும் கூறுகிறார். நூல்: காஷிஃப் 2/86


இம்ரான் பின் ஹத்தான் என்பவரைப் பற்றி கூறும் போது, நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார் (வுஸ்ஸிக) என்று கூறிவிட்டு, 'அலீயைக் கொன்ற இப்னு முல்ஜிமை இவன் பாராட்டிய காரிஜியாக இருந்தான்' எனவும் கூறுகிறார். நூல்: காஷிஃப் 2/92


அவ்ஸஜா என்பவரைப் பற்றிக் கூறும் போது நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார் (வுஸ்ஸிக) என்று கூறிவிட்டு, இவரது ஹதீஸ் சரியானது அல்ல என்றும் கூறுகிறார். நூல்: காஷிஃப் 2/101


இயாள் பின் அப்துல்லாஹ் என்பாரைப் பற்றிக் கூறும் போது நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார் (வுஸ்ஸிக) என்று கூறிவிட்டு, இவர் பலமானவர் அல்ல என்றும் கூறுகிறார். நூல்: காஷிஃப் 2/107


மஸ்ரூக் பின் அல் மர்சுபான் என்பாரைப் பற்றிக் கூறும் போது நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார் (வுஸ்ஸிக) என்று கூறிவிட்டு, இவர் பலமானவர் அல்ல என்றும் கூறுகிறார். நூல்: காஷிஃப் 2/256


முஸ்லிம் பின் காலித் என்பாரைப் பற்றி கூறும் போது நம்பக மானவராகக் கருதப்பட்டுள்ளார் (வுஸ்ஸிக) என்று கூறிவிட்டு, பலவீனமானவர் என்று கூறுகிறார். நூல்: காஷிஃப் 2/258


முஸ்அப் பின் முஹம்மத் என்பாரைப் பற்றி கூறும் போது நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார் (வுஸ்ஸிக) என்று கூறி விட்டு, இவரை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது என்று கூறுகிறார். நூல்: காஷிஃப் 2/268


ஹுபைரா என்பரைப் பற்றிக் கூறும் போது நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார் (வுஸ்ஸிக) என்று கூறிவிட்டு, இவர் பலமானவர் அல்ல என்றும் கூறுகிறார். நூல்: காஷிஃப் 2/334


இப்படி ஏராளமான சான்றுகள் உள்ளன.


தஹபீ அவர்கள் ஒருவரைப் பற்றி, நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார் (வுஸ்ஸிக) என்று கூறினால் அதன் பொருள் இப்னு ஹிப்பான் அவரை நம்பகமானவர் என்று கூறியிருக்கிறார் என்பது தான். இப்னு ஹிப்பான் ஒருவரை நம்பகமானவர் என்று கூறியிருக்கிறார் என்றால் அதன் பொருள் இவரைப் பற்றி யாரும் குறை கூறவில்லை என்பது தான்.


அவர் நம்பகமானவராகவும் இருக்கலாம்; கற்பனையானவராகவோ, யாரென அறியப்படாதவராகவோ இருக்கலாம் என்பது உறுதியாகி விட்டது.


ஒவ்வொரு வருடமும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதை நிரூபிப்பதற்கு அல்ஜன்னத் காட்டும் ஒரே ஒரு ஆதாரமான அபூதாவூத் ஹதீஸில் இடம்பெறும் அம்ரு பின் ஹாரிஸ் என்பார் நம்பகமானவர் என்பதற்கு எந்த நிரூபணமும் இல்லை.
அம்ரு பின் ஹாரிஸ் என்பார் நம்பகமானவர் என்பதற்கு ஆதாரமாக இப்னு ஹஜர் அவர்கள் கூற்றையும் அல்ஜன்னத் எடுத்துக் காட்டுகிறது.


அம்ர் பின் ஹாரிஸ் ஏற்றுக் கொள்ளப்படுபவர் (மக்பூல்) என இமாம் இப்னு ஹஜர், தக்ரீப் தஹ்தீப் எனும் நூலில் குறிப்பிடுகிறார் என்று எழுதியுள்ளனர்.


இதுவும் இவர்களது அறியாமையை எடுத்துக் காட்டுகிறது.


இப்னு ஹஜர் அவர்கள் சில அறிவிப்பாளர்கள் பற்றி மக்பூல் என்ற சொல்லைப் பயன்படுத்துவார். இதன் அகராதி அர்த்தம் ஏற்கப்படுபவர் என்பதாகும். ஆனாலும் ஹதீஸ் கலையில் பயன்படுத்தும் சொற்களுக்கு அந்தக் கலையில் எந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதோ அந்தப் பொருளைத் தான் கொடுக்க வேண்டும்.


ஹதீஸ் கலையில் ஹஸன் என்ற சொல் பயன்படுத்தப்படும். இதன் நேரடிப் பொருள் அழகானது என்பதாகும். ஆனால் ஹதீஸ் கலையில் இந்தப் பொருளைக் கொடுக்க முடியாது. 'ஸஹீஹ் என்ற தரத்துக்கு அடுத்த நிலையில் உள்ளது' என்பது ஹதீஸ் கலையில் ஹஸன் என்பதன் பொருளாகும்.


இப்னு ஹஜர் அவர்கள் ஏராளமான அறிவிப்பாளர்கள் பற்றி மக்பூல் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். ஒரு கருத்தைத் தெரிவிப்பதற்கான அடையாளமாகத் தான் அச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதே தவிர இவ்வாறு கூறப்பட்ட அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்று அர்த்தம் செய்வதற்காக பயன்படுத்தப்படவில்லை.


தமது நூலில் இது போன்ற சொற்களை எந்தப் பொருளில் பயன்படுத்தியுள்ளார் என்பதை இப்னு ஹஜர் அவர்கள் இதே நூலின் துவக்கத்தில் விளக்கியுள்ளார்.


மக்பூல் (ஏற்கப்படுபவர்) என்ற சொல்லை எந்தக் கருத்தில் பயன்படுத்தினார் என்பதையும் அவரே விளக்கியுள்ளார்.

இதன் கருத்து: ஒருவர் குறைந்த எண்ணிக்கையிலான ஹதீஸ்களை அறிவித்திருக்கிறார். இவரைப் பற்றி இரண்டு விதமாக முடிவு செய்ய வேண்டும். அதாவது இவர் அறிவிக்கும் ஹதீஸைப் போன்று மற்றவர்களும் அறிவித்திருந்தால் அப்போது அவர் மக்பூல் (ஏற்கப்படுபவர்) எனக் குறிப்பிடப்படுவார். அவ்வாறு வேறு யாரும் அறிவிக்காவிட்டால் அவர் பலவீனமானவராவார்.
(தக்ரீபுத் தஹ்தீப் முன்னுரை)


மக்பூல் (ஏற்கப்படுபவர்) என்பதற்கு இப்னு ஹஜர் அவர்கள் மேற்கண்டவாறு விளக்கம் தருகிறார்கள்.


இப்னு ஹஜர் அவர்கள் மக்பூல் (ஏற்கப்படுபவர்) என்று யாரைக் குறிப்பிட்டுள்ளாரோ அத்தகையோரின் பல ஹதீஸ்கள் இந்தக் காரணத்தினாலேயே பலவீனமாகி விடுகிறன.


அல்ஜன்னத் ஏடு இந்த உண்மைகளை அறிந்திருந்தாலும் இத்துறை பற்றிய அறிவு இல்லாத ஒருவர் எழுதியதை அப்படியே வெளியிட்டு அவமானப்பட்டு நிற்கிறது.


இப்னு ஹஜர் அவர்கள் மக்பூல் (ஏற்கப்படுபவர்) என்று கூறிய அறிவிப்பாளர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் அனைத்தும் சரியானவை என்று இவர்கள் பிரகடனம் செய்யத் தயாரா? என்று அவர்களுக்கு நாம் அறைகூவல் விடுக்கிறோம்.


சுருக்கமாகச் சொல்வதென்றால் 'அம்ர் பின் ஹாரிஸ் என்பார் யாரென்று அறியப்படாதவர்' என்று தான் தஹபீ கூறுகிறார்.
இப்னு ஹிப்பான் இவரை நம்பக